தமிழா, தமிழா அடையாளம் உனக்கென்ன?
எண்ணிப் பார்த்தாயா?
ஆரியத்தின் அடி வருடியாய், அரசியலில் அவர்களால் ஏவி விடப்பட்ட ‘மாயமானாக’ ‘பி’ குழுவாக – கூலிப்பட்டாளமாய், விபீடண, சுக்ரீவ, அனுமார்களாகி சொந்த இனத்தை – இன உரிமைகளை மாற்றார் காலடியில் வைத்து சுகம் அனுபவிக்கும் சோற்றால் அடித்த பிண்டமா நீ?
உனது விழாக்களாகப் “பண்டிகைகள்” புகுத்தப்பட்டன!
1. தீபாவளி,
2. வருஷப் பிறப்பு – 60 வருஷ ஆபாச கதை,
(ஒரு வருஷமும் தமிழ் இல்லா ஆண்டு)
3. சரஸ்வதி பூஜை,
4. விஜயதசமி,
5. கோகுலாஷ்டமி,
6. விநாயக சதுர்த்தி
7. ஸ்ரீராம நவமி
8. அட்சய திருதி,
9. மகிஷா சூரசம்ஹாரம்
இதில் ஒன்றாவது தமிழ், தமிழ்ப் பண்பாடு கொண்டதா?
கதை எல்லாம் அசுரர்களை – திராவிடர்களை அழித்ததையே மய்யமாகக் கொண்டவை.
கலப்பற்ற முந்தைய சங்க இலக்கியத்தில் இல்லாதவை.
உனது ‘யாழ்’ இன்று இல்லை!
அதனிடத்தில் ‘வீணை’ இடம்பெற்றது!
‘பாணர்கள்’ இல்லை, ‘சங்கீத வித்வான்கள்’ உள்ளே புகுந்தனர்!
தமிழ்பாட்டு ‘துக்கடா’ – தீட்டு மொழியாம்… கோவிலில் வடமொழி சமஸ்கிருதம்.
உன் வீட்டு நிகழ்வுகளை தமிழில் நடத்தாமல் செத்த மொழி மூலம் வைத்து அதற்குக் கூலி தரும் – அறியாமை!
“வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்.
வாழ்வினில் உயர்ந்தபின்
தமிழையே பழித்தார்”
தமிழ் ‘நீஷ பாஷை’யாம் – இதை ஏற்றால் மதி இழந்தாய், மானம் இழந்தாய்.
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்றார் பெரியார் – ஓங்கி மண்டையிலடித்து, உனக்கோ இன்று மானமும் அறிவும் இல்லை என்று பிறர் கேலி செய்யும் கொடுமை கண்டு எம் நெஞ்சம் கொதிக்கிறது!
தமிழன் என்று கூறி இப்படி உன்னை விற்றுக் கொள்ளலாமா? பெயரில் தமிழன் – செயலில் மாற்றான் அடிமை – யோசித்துப்பார்!
வீம்புப் பேசி விலையை உயர்த்திக் கொள்வதுதான் உனது இன்றைய வீரமா?
புழுவாய் நீ எத்தனை நாளைக்கு?
பெரியார் கேட்கிறார் – திருந்து! திருந்து!!
– நன்றி: ‘உண்மை’ தலையங்கம்