சென்னை, டிச.13 சென்னை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் மாணவ, மாண விகளுக்கு 30 ஆயிரம் பாடப்புத்தகம், நோட்டுகள் நேற்று (12.12.2023) விநியோகம் செய்யப்பட்டது.
கடந்த 4ஆம் தேதி சென்னையை கடந்து சென்ற மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழையை கொட்டித் தீர்த்தது. இந்த பெருமழையின் காரணமாக 4 மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னை நகரில் சொல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கியது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 4 மாவட்டங்களில் டிசம்பர் 11ஆம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டன.
முன்னதாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வளாகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. சென்னை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் 925 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்பட 2,200 பள்ளிகள் டிச.11ஆம் தேதி திறக்கப்பட்டன. மாணவ, மாணவியரிடம் கல்வி அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தியதில் மேற்கண்ட பள்ளிகளில் 12 ஆயிரம் பேர், மழையால் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை இழந்துள்ளது கண்டறியப் பட்டது. அவர்களுக்கு 30 ஆயிரம் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு மூன்றாம் பருவத் துக்கான பாடப்புத்தகங்களும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இதையடுத்து, இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளன.