ஒன்றிய அரசு நடத்துவது சட்ட ஆட்சியா? கட்டப் பஞ்சாயத்தா?
சர்க்கரைப் பூச்சு பூசிய விஷ உருண்டைதான் மோடி அரசின் ‘மனுதர்ம யோஜனா!’
விழுப்புரம், அக். 27 ஒன்றிய அரசு நடத்துவது சட்ட ஆட் சியா? கட்டப் பஞ்சாயத்தா? சர்க்கரைப் பூச்சு பூசிய விஷ உருண்டைதான் மோடி அரசின் ‘மனுதர்ம யோஜனா!’ என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
விழுப்புரத்தில்…
குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? என்று ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து நடைபெறும் தொடர் பரப்புரைக் கூட்டத்தின் இரண்டாம் நாள் 26.10.2023 அன்று மாலை 5 மணியளவில் விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் சுப்பராயன் தலைமையேற்க, விழுப்புரம் நகரச் செயலாளர் பழனிவேல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்டக் காப்பாளர் சுப்பராயன், தலைமைக் கழக அமைப்பாளர் இளம்பரிதி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பரணிதரன், திண்டிவனம் மாவட்டத் தலை வர் அன்பழகன், செயலாளர் பரந்தாமன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் பாஸ்கர், செயலாளர் சுந்தரராஜன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் துரை. திருநாவுக்கரசு, மாநில இளைஞரணிச் செயலாளர் இளந்திரையன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப் பித்தனர். தொடக்க நிகழ்ச்சியாக தோழர் கோவன் இசைக் குழுவினரின் புரட்சிகரமான பாடல்கள் பாடப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்கள்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., ம.தி.மு.க. மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் வந்தியத்தேவன் ஆகியோர் உரையாற்றினர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தொழிற்சங்க பொருளாளர் பன்னீர்செல்வம், தி.மு.க. மாநில ஆதிதிரா விடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், விழுப்புரம் நகர் மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், தி.மு.க. விழுப்புரம் பெருநகர செயலாளர் சக்கரை, வி.சி.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார், ம.தி.மு.க. விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பாபு கோவிந்தராஜ், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் சவுரிராஜன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் குமரன், த.மு.மு.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், ம.ம.க. மாவட்டச் செயலாளர் அஸ்கர் அலி, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், பழங்குடி மக்கள் முன்னணித் தலைவர் சுடரொளி சுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
ஆசிரியர் மேடையேறும்போது கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார்.
முன்னதாக கோவன் இசைக்குழுவினர்க்கு ஆசிரியர் ஆடை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து ‘தாய் வீட்டில் கலைஞர்’ புத்தகம் வெளியிடப்பட்டது. ஆசிரியருக்கு அனைத்துக் கட்சியினரும், பொதுமக் களும் ஆசையாக, அணியணியாக வந்திருந்து ஆடை அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஆசிரியர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஒவ்வொரு கூட்டத்திலும் மனுதர்ம யோஜனா என் பதை ஆசிரியர் ஒரு உவமையைச் சொல்லி தொடங்குவார். இம்முறை சர்க்கரை பூசிய இனிப்பு உருண்டை மனுதர்ம யோஜனா என்று உவமித்தார். அதை விளக்கியும் சொன்னார். மக்கள் பெருமளவில் திரண்டு, அதுவும் ஏராளமான பெண்கள் அமர்ந்திருப் பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ஆசிரியர், ‘விழுப்புரம் இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக ஆக்கியிருக் கிறது என்று பாராட்டினார். தொடர்ந்து இந்த மனுதர்ம யோஜனா என்பது ஒரு சூழ்ச்சித் திட்டம் என்று சுட்டிக்காட்டினார்.
மோடியின், பா.ஜ.க.வின் திட்டங்கள் எல்லாமே வெளியில் பளபளவென்று தெரியும். ஆனால், உள்ளே ஒரு சூழ்ச்சி மறைந்திருக்கும் என்பதை விளக்கினார். அவர்களுக்கு நம்மைக் கண்டு வயிற்றெரிச்சல் என்று சொல்லிவிட்டு, ‘அய்யா சாமி என்று சொல்லாமல், ‘சொல்லுங்க துரை’ என்று நாம் அவர்களை சொல்ல வைத்துவிட்டோம் என்ற ஆத்திரம்’ என்று திராவிட இயக்கத்தின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
‘இந்தியா’ கூட்டணியில்
ஓட்டைப் போட முடியாது!
மேலும் அவர் உரையாற்றும்போது, ‘இந்தியா கூட்டணியில் ஓட்டையைப் போட்டு அவர்கள் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். அப்படி முயன்றால் அவர்கள் கழுத்து நெரிபடுமே தவிர, வேறொன்றும் நடக்காது’ என்று இதுவரை அவர்கள் செய்த முயற்சி எதுவும் பலிக்கவில்லை என்பதை சொல்லாமல் புரியவைத்தார். பெரியார் என்றார். அதற்கும் காரணம் பெரியார் என்பது அறிவியல்; அது வெற்றி பெற்றே தீரும் என்று ஆரிய திராவிட போராட்டத்தின் புதிய கோணத்தை சுட்டிக் காட்டினார். இது புரியாமல் தான் அரைவேக்காடு அண் ணாமலைகள் இருக்கின்றனர் என்று விமர்சித்தார். இதைக்கேட்டு கொண்டிருந்த இளைஞர்கள், வெளிப் படையாக மற்றவர்களுக்கு கேட்கும் வண்ணம் ஆசிரி யர் சொன்னதை உச்சரித்துப்பார்த்தனர். தொடர்ந்து அவர், ‘திராவிட மாடல் ஆட்சி மனுதர்மத்தின் முது கெலும்பை முறிப்பது போல் ஆட்சி நடத்திக் கொண்டி ருக்கின்றது’ என்றார். மேலும் மோடி அரசு கொண்டு வருகிற திட்டங்கள் அனைத்தும் வித்தியாசமான, விசம மான பெயர்களோடு வருவதைச் சுட்டிக்காட்டி, இவை அனைத்துக்கும் தனித்தனியாக போராட வேண்டும் என்றால் நமது ஆயுள் போதாது. ஆகவே ஒட்டு மொத் தமாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும்’ என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இரண்டாவது கூட்டம் புதுச்சேரி
அதைத் தொடர்ந்து தோழர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு புதுச்சேரி புறப்பட்டார். புதுச்சேரி முத்தியால் பேட்டை மணிக்கூண்டு அருகில் ஆசிரிய ருக்கு மிகவும் உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப் பட்டது. பறை இசைக் கலைஞர் பிரசாந்த் குழுவினர் பறை இசை முழங்க, கரகம் ஏந்திய பெண்கள் நடனமாட, தோழர்களின் ஒலி முழக்கங்கள் அதிர ஆசிரியர் மேடையேறினார். நிகழ்ச்சியை புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையேற்று சிறப்பித்தார். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் ஆடிட்டர் ரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். புதுவை மாவட்டத் தலைவர் அன்பரசன், செயலாளர் அறிவழகன், கழகக் காப்பாளர் சடகோபன், காப்பாளர் இராசு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைப் பொதுச்செயலாளர் இளவரசி சங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினி, பழனி, மாவட்ட இளைஞரணித் தலைவர் இராசா, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப் பினர் விசுவநாதன், புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராஜாங்கம், காங்கிரஸ் கட்சி புதுவை மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர், ம.தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் முகமது இப்ராகிம், மனிதநேய மக்கள் கட்சி புதுவை மாநிலச் செயலாளர் முஸ்தாக்கீன், வி.சி.க. தொகுதிச் செயலாளர் குட்டி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.
நூல்கள் வெளியீடு
நிறைவாக ஆசிரியர் பேசுவதற்கு முன்னர், கழக வெளியீடாக ‘தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பிரகடனம்’ புத்தகத்தை புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா வெளியிட்டார். தொடர்ந்து இளவரசி சங்கர் எழுதிய, ‘தணியாது எரிகிற காடு’ என்ற புத்தகம் வெளி யிடப்பட்டது. சுற்றுப்பயணத்தை விளக்குகிற புத்தகங் களுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் நல்ல வண்ணம் ஆதரவளித்து அதிகமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவவாதிகள் இதற்கு முன்னர் திரிசூலங்கள் என்பதற்கு கொடுத்த விளக்கம் வேறு. ஆசிரியர் அதை சற்றே மாற்றி, ’திரிசூலங்கள் என்றால் ஒன்று வருவாய்த் துறை, இரண்டாவது சி.பி.அய். மூன்றாவது அமலாக்கத் துறை’ என்று புது விளக்கம் கொடுத்ததும் மக்கள் சரியாக புரிந்து கொண்டு சிரித்தபடியே கைகளைத் தட்டி மகிழ்ந் தனர். அதையும் தாண்டி, விலை வைத்து, அவர்கள் மீது மோடி கங்கா ஜலம் தெளித்து புனிதப்படுத்துகிறார்’ என்றார். புதுச்சேரிக்குக் குலக்கல்வி திட்டம் வரவில்லை. ஆனால், அதற்கு வட்டியும், முதலுமாக இங்கே பி.ஜே.பி. ஆட்சி வந்திருக்கிறது’ என்றதும் மக்கள் அதை ஆமோதித்தனர்.
கட்டப் பஞ்சாயத்தை நடத்தும் ஒன்றிய அரசு
இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு மாடலாக இருப்பது தமிழ்நாட்டில் இருக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான். அதன் கூட்டணிதான்’ என்று இந்திய அரசியல் வரலாற்றைப் புரட்டிப்போடும் ஒரு தகவலை போகிற போக்கில் தூக்கிப்போட்டார் மக்கள் முன். ‘இந்தியா’ கூட்டணியைக் கண்டு அச்ச மடைந்திருக்கிற பா.ஜ.க. இந்தியாவின் பெயரை தான் தோன்றித்தனமாக, “பாரத்” என்று பாடப்புத்தகங்களில் மாற்றியதைக் கண்டிக்க, “நடப்பது சட்ட ராஜ்யமா? கட்டப் பஞ்சாயத்தா?” என்று கொந்தளித்தார். ’ஆனா லும், இந்தியாவை நாம்தான் காப்பாற்றப் போகிறோம்!’ மோடி இந்தியாவை கைவிட்டுவிட்டார்’ என்று நடப்பு அரசியலை கோடிட்டுக் காட்டினார்.
நிறைவாகப் புரட்சிக்கவிஞரின் கவிதையைச் சொல்லி, நீங்கள் ஓடப்பராக இருக்க வேண்டாம். ஓட்டப்பராக மாறி, இந்தியா கூட்டணிக்கு வெற்றியை தேடித் தாருங் கள்’ என்று சொல்லி தனது உரையை நிறைவு செய்தார். இறுதியில் புதுச்சேரி வடக்குப் பகுதித் தலைவர் கிருஷ்ண சாமி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
ஒரே தேர்தல் – புது விளக்கம்!
முதலில் ஒரே நாடு என்று சொன்னார்கள். இப்போது கேட்கும் ஒரே குரல் என்ன? ஒரே தேர்தல்! படித்த அறிஞர்கள் இங்கே இருக்கிறீர்கள். இதை மேலெழுந்தவாரியாக பார்க்கக்கூடாது. ஒரே தேர்தல் என்றால் என்ன பொருள்? ‘நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்ற தேர்தல்’ என்று நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதுமே ஆர்.எஸ்.எஸ்.சுக்கு உள்ளார்ந்த திட்டம் என்று ஒன்று உண்டு. வெளிப்படையான திட்டம் என்று ஒன்று உண்டு. Open Agenda; Hidden Agenda. ஒரே தேர்தல் என்பதற்கு உண்மையான பொருள் என்னவென்றால், நாங்கள் நடத்தப்போகும் கடைசி தேர்தல் – ஒரே தேர்தல் இதுதான். நீங்கள் ஏமாந்து எங்களுக்கு ஓட்டு போட்டீர்கள் என்றால், இனிமேல் தேர்தல் இந்தியாவில் நடக்காது. வெளிநாட்டுக்கு போய்த் தான் தேர்தலை நீங்கள் பார்க்க வேண்டும். இந்தியாவில் நீங்க பார்க்கிற கடைசி ஒரே தேர்தல் இதுதான். இது அவர்கள் சொல்வது. இதை இப்படியும் பார்க்கலாம், ‘இல்லையில்லை எங்களுக்கும் இதுதான் ஒரே தேர்தல், கடைசி தேர்தல். இனிமேல் நாங்கள் வரமாட்டோம் என்று அவர்களும் சொல்லலாம். இதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.
ஆக எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப்போவது I.N.D.I.A. கூட்டணிதான்! அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்கான Test dose என்று சொல்லப்படுகிற பரிசோதனைதான் வரப்போகிற 5 மாநிலத் தேர்தல். ‘இந்தியா’தான் வெற்றி பெறப்போகிறது. ‘இந்தியா’ கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது.
– புதுச்சேரியில் தமிழர் தலைவர்
ஆசிரியர் கி. வீரமணி – 26.10.2023 (இரவு 10.10)