யு.கே.சிவஞானம்
சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்
“கைது செய்யப்பட்டுவிட்டேன். சத்தியாகிரகம் நடந்தாக வேண்டும். பொது ஜன ஆதரவுக்கு குறைவு இல்லை. தொண்டர்கள் வேண்டிய வரை இருக் கின்றார்கள். தலைவர்கள் தான் தேவை. தேவதாஸ் காந்தி அல்லது மகாதேவ தேசாயியை அனுப்புங்கள்” – இது வைக்கம் சத்தியாகிரக தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜோசப், காந்திக்கு அனுப்பிய தந்தி.
மார்ச் 30, 1924இல் தொடங்கிய வைக்கம் போராட் டத்தில் ஏப்ரல் 10க்குள் தலைவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் அரசு கைது செய்துவிட்டது. தவித்துக் கொண்டிருந்த சத்தியாகிரகத்தை தொடர்ந்து நடத்திட காந்தியிடம் தலைவர்களை அனுப்ப வேண்டினர். இயக்கம் இறந்து போகாமல் சென்னை மாகாணத் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பு கிறேன் என்று காந்தி கூறினார். போராட்டக்குழு உறுப்பினர்களான குரூர் நீல கண்ட நம்பூதிரிபாடும் இதரர்களும் ஆலோசனை செய்த போது சென்னை மாகாண காங்கிரஸ் தலைவரான தந்தை பெரியாரை அழைப்பது என முடிவு செய்து, பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவ மேனனும் பெரி யாருக்கு தந்தி அனுப்பினர்.
“நீங்கள் வந்துதான் இந்த போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை” என கூறினர். அப்போது பெரியார், தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருந்தார். உடனே ஈரோட்டுக்கு சென்று கோவை அய்யா முத்துவையும் சேலம் ராமநாதனையும் அழைத்துக் கொண்டு நாகர்கோயில் எம்.வி.நாயுடு காரில் பயணமானார். அவரை வரவேற்க திருவிதாங்கூர் மகாராஜா, காவல்துறை அதிகாரி, தாசில்தார் உட்பட அதிகாரிகளை அனுப்பினார். ஏனெனில் திருவிதாங்கூர் மகா ராஜா டில்லி செல்கிறபோது ஈரோட்டில் பெரியா ரின் மாளிகையில் தங்குவது வழக்கம்.
ஆனால், பெரியார், வைக்கம் வந்து பல இடங் களுக்கு சென்று காரசாரமாக பிரச்சாரம் செய்தார். போராட்டம் துவங்கப்பட்டு 15ஆவது நாளில் ஏப்ரல் 13இல் பெரியார் வைக்கம் வந்து சேர்ந்தார். 14ஆம் தேதி 12 தன்னார்வலர்களுடன் பெரியார் போராட் டத்தை நடத்தினார். மே 1924இல் கே.ஜிகுஞ்சு கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேச்சின் சாரத்தை அரசு ஆவணத்தில் பதிவு செய்து வைத்திருப்பது இதுவே:
“வெவ்வேறு வேலைகளை செய்தாலும் சமத்துவ மாக அல்லவா எல்லா விரல்களையும் கருதுகிறோம். அதுபோலவே ஒவ்வொரு இந்துவும் சமத்துவமாக நடத்தப்பட உரிமை உள்ளவர்கள். அவர் ‘பிராமணராக’ இருக்கட்டும். புலையராக இருக்கட்டும். இறந்த கால் நடைகளை அறுக்கும் புலையர் தீண்டத் காதவர்கள் எனில், மனித உடலை அறுக்கும் ‘பிராமண’ டாக்டர் களும், நாயர் டாக்டர்களும் தீண்டதகாதவர்களா? கள்ளை இறக்குவதால் தீயர் தாழ்ந்த ஜாதியினர் எனப்படுகிறார்கள் எனில், குடிப்பவர்கள் எந்த அளவு மோசமானவர்கள், கள்ளை இறக்க மரங்களை வாட கைக்கு விடுபவர்கள் எந்த அளவு கூடுதல் மோசமான வர்கள், கள்ளிலிருந்து வருவாய் பெரும் அரசாங்கம், இவர்களை விட கூடுதல் மோசமானவர்கள் அல்லவா? உயர்வு என்பது ஒருவர் செய்யும் வேலையிலா உள்ளது.
கையூட்டு பெறும் காவல் அதிகாரிகளும் தவறாக வாதிடும் வக்கீலும் பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்று எந்த சாஸ்திரம் சொல்லுகிறது, தம்மைவிட உயர்ந்தோர் என அந்தஸ்து கொண்டோருடன் சம அந்தஸ்து வேண்டுவோர், முதலில் தம்மை விட கீழே உள்ளோர் என வகைப்படுத்தப் பட்டோருடன் தான் சமம் என கருதப்பட வேண்டும். பட்டிய லின மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படும் நாய் களை விட மற்ற மிருகங்களை விட கீழானவர்கள் இல்லை. பட்டியலினமக்கள் தெருவுக்கு போவ தால் தீட்டுப்படும் என்று சொன்ன வைக்கத் தானை போட்டு வேட்டி துவைக்க வேண்டும்” என பெரியார் பேசினார்.
பெரியார் பேசத் தடை
திருவாங்கூர் அரசு பெரியாரின் பேச்சால் ஏற்பட்ட தாக்கத்தை கண்டு அரண்டுபோய் அவ ரது பேச்சுக்கு தடைவிதித்தது. 15 நாட்கள் ஏப்ரல் 13 முதல் 29 வரை அனுமதித்ததே அதிகம் எனலாம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போடப்பட்ட தடையோடு கோட்டயம் மாவட்டத்தில் எந்த பகு தியிலும் வருகை தரவோ தங்கவோ கூடாது என்று மே 3, 1924 அன்று மாவட்ட மாஜிஸ் டிரேட் எம்.வி.சுப்பிரமணிய அய்யர் விதித்த தடையும் இணைந்து கொண்டது. தடை உத்தரவை பெற்றுக் கொண்ட பெரியார், இதை மீறப்போவதாக மே 17இல் வைக்கத்திலிருந்து அறிவித்தார். மே 18இல் வைக்கத்தில் தடை யாணையை மீறி பேசினார். கைது செய்யப் பட்டார். 23 மே, 1924இல் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு மாதம் காவல் தண்ட னை பெரியாருக்கு கிடைத்தது.
ஈழவர்களுக்கு பெரியார் வேண்டுகோள்
“சத்தியாகிரகம் தொடர்ந்து நடக்க வேண்டும். ஒவ்வொரு ஈழவரும் ஆணும் பெண்ணும் சத்தியா கிரகத்தில் பங்கேற்க வேண்டும். தேச துரோகிகள் என்று பெயர் எடுக்கக் கூடாது” என்ற பெரியாரின் வேண்டு கோளை ஏற்று மக்கள் சத்தியாகிரத்தில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து பலர் பங்கேற்றனர். பல்லாயிரக் கணக்கான நிதியும் போராட்டத் திற்கு ஆதரவாக குவிந்தது. 7 நாள் வைக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார், 28 மே 1924இல் ஆறுக் குட்டி (அருவிகுத்து) சிறைக்கு அழைத்து செல்லப் பட்டார். 21 ஜுனில் விடுதலை ஆனார். வைக்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரியார் கூறுகிறார்: “திரு.ராஜாஜி எனக்கு கடிதம் எழுதினார். நீ ஏன் நம் நாட்டை விட்டு விட்டு இன்னொரு நாட்டில் போய் ரகளை செய்கிறாய். அது சரியல்ல. அதை விட்டு விட்டு நீ இங்கு வந்து விட்டு – விட்டுச் சென்ற வேலைகளை கவனி” என்று எழுதினார் என்கிறார் பெரியார். ஆனால், பெரியார் மறுத்துவிட்டார். பெரியார் வந்துதான் இந்த இயக்கத் திற்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறார் என சென்னை ராஜஸ்தானியின் தலைமைச் செய லாளருக்கு கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டான சி.டபுள்யு.இ. கார்டன் என்ற அய்சிஎஸ் அதிகாரி கடிதம் எழுதினார். மீண்டும் தடையை மீறிப் பேசினார்.
இரண்டாம் முறையாக தடை மீறியதற்காக மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 6 மாதகாலம் கடும் காவல் தண்டனை விதிக்கப்பட்டார். ஒரு மாதம் கூட வெளியில் இல்லை. திருவனந்த புரம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
புது வாழ்வை கொடுத்த பெரியாரின் தியாகம்
வைக்கம் போராட்டத்தை துவங்கிய கேரள தலை வரான கேசவமேனன், பிற்காலத்தில் இலங்கைக்கான இந்திய தூதுவராக நியமிக்கப் பட்டார். மாத்ரு பூமி பத்திரிகையின் ஆசிரிய ராக பணியாற்றினார். அவர் தனது சுயசரிதையில் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங் களிப்பை பற்றி இவ்வாறு பதிவு செய்கிறார்:
“கால்களில் விலங்கு சங்கிலி. தலையில் கைதிகள் அணியும் குல்லா முழங்காலுக்கு கீழே தொங்குதிற வேட்டி. கழுத்திலே கைதி எண் குறிக்கப்பட்ட மரப் பட்டை. இவற்றோடு ஈவே.ராமசாமி கொலைகாரர்க ளோடும், கொள்ளைக்காரர்களோடும் சிறையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். தண்டனை பெற்ற சாதாரண கைதி செய்கின்ற வேலைகளை காட்டிலும் இரண்டு பங்கு வேலை செய்தார்”.
ஒரு அரசியல் கைதியாக அவரை நடத்த வேண்டும் என்றும், அதற்கு உரிய குறைந்தபட்ச சலுகைகளை தர வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு இணங்காமல் அன்றைய அரசு அவரை கொடுமைப்படுத்தியது. ஆனால் பெரியாரோ விடுதலை ஆகி நாகர்கோவிலில் பேசுகிறபோது, நாங்கள் சிறையில் பட்ட கஷ்டத்திற்காக யாரும் வருந்த வேண் டாம். விடுதலைதான் என்னை வருத்தப்படச் செய்து விட்டது என்று வேதனையைக் கூட வேடிக்கையாகக் கூறினார்.
“ஒரு ஜாதி இந்து என்று சொல்லக்கூடிய நிலையி லுள்ள ஒருவர், கேரளத்தில் உள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கி கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புது வாழ்வை கொடுத்திருக்கிறது” என கேசவ மேனன் பதிவு செய்திருக்கிறார்.
திருவிதாங்கூர் மகாராஜா மரணமடைந்ததை தொடர்ந்து புதிய யுவராஜா பட்டத்திற்கு வந்ததை ஒட்டி பெரியார் உட்பட 19 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். (43 நாட்கள் சிறை வாசம்).
ஒரு வாக்கு வித்தியாசம்
விடுதலையான பிறகு பெரியார் மற்றும் கேசவ மேனன் விடுத்த அறிக்கையில் “வைக்கம் உட்பட எல்லாஇடங்களிலும் எல்லோரும் நட மாடலாம் என்று அரசாங்கம் அனுமதிக்கும் அறிகுறியாகவே எங்கள் விடுதலையை கருதுகிறோம். இல்லையேல் மீண்டும் வைக்கம் போராட்டம் தொடரும்” என அறிவித்தனர்.
பெரியார் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவனந்தபுரத்திலிருந்து ஈரோடு திரும்பியதும். மீண்டும் வைக்கம் போராட்ட களத்திற்கு செல்லாமல் இருக்க சென்னையில் அரசாங்கத் திற்கு விரோதமாக பிரச்சாரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். திருவாங்கூர் சட்டசபையில் ஈழவர்களின் சஞ்சார தீர்மானம் ஒரே வாக்கு வித்தியாசத்தில் தோல்வி. சத்தியாகிரகிகள் மீது வன்முறை தாக்குதல் ஏவப்பட்டது.
காந்தி – ராணி பேச்சுவார்த்தை
காந்தி 1925 மார்ச் 4இல் சென்னை வழியாக வைக்கம் செல்லும் போது ஈரோட்டில் பெரி யார் வரவேற்றார். வைக்கம் சென்ற காந்தி உள்ளூர் வைதீகர்கள் சத்தியாகிரகிகளோடு உரையாடினார். 12 மார்ச் 1925-இல் வர்க்கலை யில் மகாராணியை சந்தித்தார். அன்றே சிவகிரி யில் நாராயணகுருவை சந்தித்தார். காந்தியின் வைக்கம் வருகையின் போது திருவாங்கூர் காவல் ஆணையாளர் டபுள்யு.பிட்டுடன் ஒப்பந்தம் ஏற் படுத்திய பிறகு வைக்கத்தை அடைந்தார்.
பெரியார் உட்பட தலைவர்கள் மீது வைக்கத்தில் விதிக்கப் பட்டிருந்த தடையை திரும்பப் பெற்றுக் கொள்ள அரசு முன் வந்தது. கோட்டயம் மாவட்ட மாஜிஸ்திரேட் அறிக்கையை அரசு ஏற்றது. அதனை காந்தி வரவேற்றார். காந்தி -மகாராணியின் பேச்சு வார்த்தையின்போது, மகாராணி “தெருக்களை திறந்து விடத் தயார். ஆனால் பெரியார் அது போதாது, கோவிலுக்குள் செல்லுவோம் என சொல்லுவாரே. அதனால் பெரியாரிடம் பேசி விட்டு வாருங்கள்” என கூறினார். காந்தி உடனே பெரியாரை சந்தித்தார். உங்கள் கருத்து என்ன என கேட்டார்.
“கோவில் நுழைவு காங்கிரஸ் லட்சியம் இல்லா விட்டாலும் எனது லட்சியம் அதுதான். அதை விட்டுக் கொடுக்க முடியாது. எனினும் இப்போது அப்படிப்பட்ட கிளர்ச்சி இருக்காது” என பெரியார் கூறினார், காந்தி ராணியிடம் பெரியாரின் பதிலை கூறியபோது ராணி அதை ஏற்றுக் கொண்டார். கோவிலை சுற்றி உள்ள வீதிகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் நுழையவும் நடக்கவும் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து வெற்றிவிழா கூட்டம் தந்தை பெரியார் தலைமையில் நவம்பர் 29, 1925இல் நடை பெற்றது. கேளப்பன், மன்னத்து பத்ம நாபன், டி.கே.மாதவன் ஆகியோர் பங்கேற்ற னர். நாலாயிரம் பேர் பங்கேற்றனர்.
நன்றி: ‘தீக்கதிர்’ – 25.11.2023