திருவாங்கூர் ராஜ்யத்தில் அவர்ணஸ்தர்கள் அனு மதிக்கப்படாத பல தெருக்களிலும், ஜாதி பேதமின்றி மனித உடல் தாங்கிய யாவரும் நடக்கலாம் என்கிற கொள்கைக்கு வந்துவிட்டதோடு, திருவாங்கூர் அரசாங்கத்தாரும் அக் கொள்கைக்கு அனுகூலமாயிருந்து காரியத்தில் நடத்திக் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாய் வைக்கம் சத்தியாக்கிரகத்தை நிறுத்த ஓர் வெற்றிக் கொண்டாட்டம் சென்ற மாதம் 29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீமான். ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் அக்கிராசனத்தின் கீழ் வைக்கத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு, ஸ்ரீமான், ராமசாமி நாயக்கரின் மனைவியும், பல ஸ்திரீகளும், கேரள தலைவர்களும் உள்பட சுமார் 3000 ஜனங்கள் வரை கூடியிருந்தார்கள். ஆரம்பத்தில்,
ஸ்ரீமான். கேலப்பன் நாயர்.
அவர்களால் வரவேற்பு நடந்தது. சத்தியாக்கிரகத்தின் விருத்தாந்தங்களையும், ஸ்திரீகள் உதவி செய்த வகை யையும் எடுத்துச் சொல்லி வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு இதுவரையில் 25,000 ரூபாய் வசூலாகி செலவாகியிருக்கிற தென்று சொன்னார்.
மன்னம் ஸ்ரீமான் பத்மநாத பிள்ளை.
20 மாத சத்தியாக்கிரகத்தில், பல ஆயிர வருஷங்களாய் ஏற்பட்ட கொடுமைகள் அழிந்து போய்விட்டதென்றும், திரு வாங்கூர் இராஜ்யத்திலுள்ள நாயர்களெல்லாம் சத்தியாக்கிர கத்திற்கு அதுகூலமாயிருந்தார்களென்றும், மலையாள நம் பூதிரிகள் அறியாத்தனத்தினாலும், குருட்டு நம்பிக்கையாலும், சத்தியாக்கிரகத்தை எதிர்த்து நின்றபோதிலும், அவர்களால் அவ்வளவு கெடுதிகள் ஏற்படவில்லையென்றும், ஆனால் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தான் தங்களுடைய சோம்பேறி மடத்துச் சாப்பாடு போய்விடுமேயென்று பயந்துகொண்டு வேண்டுமென்றே பல அக்கிரமங்களையும், கொடுமை களையும் சத்தியாக்கிரத்துக்குச் செய்து வந்தார்களென்றும், ஆலயப் பிரவேசத்திற்குக் கூட நாயர்கள் கொஞ்சங்கூட விரோதமில்லையென்றும், நம்பூதிரிகளுக்கும் அவ்வளவு கடுமையான ஆக்ஷேபனையில்லை என்றும், அவர்கள் சொன்னால் ஒப்புக் கொள்ளக் கூடியவர்களென்றும், ஆனால், வெட்டிச் சோற்றைத் தின்பதற்காக இங்கு வந் திருக்கும் ஊட்டுப்பறை தமிழ் பிராமணர்கள்தான் கொடுமை செய்கிறார்களென்றும், அந்தத் தமிழ்ப் பிராமணர்களைக் கேரளத்தை விட்டுத் தமிழ்நாட்டிற்கே ஓட்டி விட்டால், திருவாங்கூர் ராஜ்யத்தில் ஒருகலகமும் இருக்காதென்றும், பேசியதோடு இனி எல்லா வகுப்பாரும் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சத்தியாக் கிரகம் செய்யவேண்டும் என்று சொன்னார்.
ஸ்ரீமான். டி. கே. மாதவன்.
திருவாங்கூர் மகாராணியவர்கள் நமக்கு இப்போது அளித்துள்ள சில சவுகரியங்களை மறுபடியும் பிடுங்கிக் கொள்ளும்படி பட்டர்களென்னும் தமிழ்நாட்டுப் பிராமணர் கள் திவானைக் கைவசப்படுத்திக் கொண்டு சூழ்ச் சிகள் செய்து வருகின்றார்களென்றும், இதற்காக திருவாங்கூர் ஹெட் சர்க்கார் வக்கீல் ஸ்ரீமான் சுப்பையர் என்கிற ஒரு பட்டர் கங்கணங்கட்டிக்கொண்டிருக்கின்றாரென்றும், அடுத் தாற் போல் கோயில் பிரவேச சத்தியாக்கிரகம் ஆரம்பித் தால்தான் இப்போது ஏற்பட்டுள்ள வெற்றியானது நிலைக்கு மென்றும், இல்லாவிட்டால் வஞ்சகப் பட்டர்கள் இதையும் பிடுங்கிக்கொள்ளுவார்களென்றும், நமது ஜனங்கள் முரட் டுத்தனமில்லாமல் சாதுவாய் நம்மைப் பின்பற்ற, பக்குவப் படுத்தி உடனே கோயில் பிரவேசம் ஆரம்பிக்க வேண்டு மென்றும், இதற்காக எல்லோரும் பண உதவி செய்ய வேண்டுமென்றும், இந்தப் பட்டர்கள் நமக்கு விரோதிகளே ஒழிய அவர்கள் பிராமணர்களல்லவென்பதை எல்லோரும் உணரவேண்டுமென்றும் அய்ந்து ஆறு தடவைகளில் இதைத்திருப்பித் திருப்பிக் கூறிவிட்டு,
அடியிற்கண்ட தீர்மானங்களைப் பிரேரேபித்தார்:-
“வைக்கம் சத்தியாக்கிரகத்தின் உத்தேசம் நிறைவேறிவிட்டதால், சத்தியாக்கிரகத்தை இன்று முதல் நிறுத்திவிட வேண்டுமென்றும், திருவாங்கூரிலுள்ள எல்லாச் சாலை களிலும், எல்லா ஜாதியாரும் நடக்க அரசாங்கத்தார் உதவியா யிருப்பதைப் பார்க்க அதிக சந்தோஷமடைவதோடு, கோயி லுக்குள்ளிருக்கும் தீண்டாமையையும் ஒழிக்க எல்லா இந்துக்களும் கிளர்ச்சி செய்ய வேண்டுமென்றும், தெருக் களில் சுவாதீனமாய் நடக்கும் உரிமையை ரீஜண்டு மகா ராணியார் அநுபவத்தில் நடக்க உதவி செய்ததற்கு இக் கூட்டம் மனமார்ந்த நன்றி செலுத்துவதோடு கோயிற்பிர வேசத்திற்கும் இதே உதவி செய்வாரென்று எதிர்பார்க்கிறது என்றும், மகாத்மா காந்தியிடம் நம்பிக்கை இருப்பதோடு அஹிம்சா தர்மத்தைக் கண்டிப்பாகக் கைக்கொள்ள வேண் டியது என்றும், வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு பலவிதத்திலும் உதவி செய்த பொது ஜனங்களுக்கு இக்கூட்டம் நன்றி செலுத்துகின்றது” என்றும், தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேறின.
ஸ்ரீமான் ஈ. வெ.ராமசாமி நாயக்கர்.
முடிவுரையில், தனக்கும், தமது மனைவிக்கும், செய்த உபசாரத்திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாக்கிரக இயக்கத்தின் ஜெயிப்பைப்பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்து விடவில்லையென்றும், தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அநுப் பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாக்கிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்குமென்றும், சத்தியாக்கிரக ஆரம் பத்தில் பிராமணர்கள் கக்ஷியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விரோதமாகவே தீண்டாதா ரென்போரைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிற போது நமக்கே சத்தி யாக்கிரகத்தின் தன்மையைப்பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறதென்றும் கூறியதுடன், சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அநுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம்; பலாத் காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம்.
சத்தியாக்கிரகத்தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனி தனுக்கு மனிதன் பொது வாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாதென்பதுதான். அந்த தத்துவம் இந்தத் தெரு வில் நடந்ததோடு முடிந்து விடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்தரத்தைக் கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை. மகாத்மா காந்தியும், மகாராணி யாரைக் கண்டு பேசிய காலத்தில், மகாராணியார் மகாத்மா வைப் பார்த்து இப்பொழுது தெருவைத்திறந்து விட்டு விட் டால் உடனே கோயிற்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்க ளேயென்று கேட்டார்கள். மகாத்மா அவர்கள் ஆம், அது தான் என்னுடைய குறியென்றும், ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டிய ஜனங்கள், போதுமான பொறுமையும், சந்தமும், அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கின்றார்களாவென்று, அறியும் வரையில் அக்காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும், அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண் டிருப்பேனென்றும் சொன்னார்.
வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு விரோதியாயிருந்தவர் கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை அடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமிருந்தாலும் கிறிஸ் துவ மதத்திற்காவது, மகமதிய மதத்திற்காவது செல்லலாமே யொழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்ட மில்லை. ஏனென்றால், ஆரிய சமாஜத்திற்குப் போவதானால் பொருளில்லாத- அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்ளு வதோடு, ‘பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத்தினம் நமது சுதந்தரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருக்கின்றார்கள். அந்த நிலைமைக்கு நீங்க ளும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப் பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள், என்று சொல்லி மறுபடியும் தனக்காகவும், தன் மனைவிக்காகவும் செய்த உபசாரங்களுக்கு நன்றி செலுத்திக் கூட்டத்தைக் கலைத்தார்.
– குடிஅரசு, 6.12.1925