நெல்லை, அக். 29 – தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச் சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாளையங் கோட்டை கே.டி.சி. நகரில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்திற்கு தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செய லாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார். இளை ஞரணி நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணி 2-ஆவது மாநில மாநாட்டிற்கு அழைப்பதற்காக வந்துள்ளேன். தி.மு.க. தொண்ட னாக நெல்லை மாவட்டத்திற்கு பலமுறை வந்துள்ளேன். ஆனால் அமைச்சர் ஆன பின்னர் தற் போது முதன் முறையாக வருகி றேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாது.
கடந்த 2007ஆ-ம் ஆண்டு டிசம்பர் 15, 16-ஆம் தேதிகளில் நெல்லையில் இளைஞரணி முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்த கலைஞர், மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங் கினார்.
தற்போது 2ஆ-வது மாநாட்டை நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் எனக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து நெல்லையை சேலத்திற்கு அழைத்து வரவேண் டும். நெல்லையில் நடந்த முதல் மாநாடு தான் சேலம் மாநாட் டிற்கு வழிகாட்டியாக உள்ளது.
கலைஞரின் பொது வாழ்வில் நெல்லை மாவட்டம் தவிர்க்க முடியாதது. 1965ஆ-ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு சட்டத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிமை சிறையில் 62 நாட்கள் அடைக்கப்பட்டார். இதுகுறித்து அண்ணா பேசிய போது எனது பயணத்திற்கான சிறந்த பூமி பாளையங்கோட்டை என குறிப்பிட்டு பேசினார்.
உங்களுக்கு செயல் வீரர்கள் என எதற்காக பெயர் வைக்கப் பட்டுள்ளது என்றால் தலைவன் சொல்வதை களத்தில் இறங்கி தன்னலம் கருதாமல் மக்களுக் காக செய்து முடிப்பவன் தான் செயல்வீரன். அந்த வகையில் நெல்லையின் 2 மாவட்ட செய லாளர்களும், பொறுப்பு அமைச் சரும் செயல்வீரர்கள் தான். மது ரையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கட்சி சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.
மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு அது ஒரு உதாரணம். அந்த மாநாடு எதற் காக நடத்தப்பட்டது. அதில் என்ன தீர்மானம் நிறைவேற்றப் பட்டது என்பது குறித்து மாநாட்டை நடத்தியவர்களுக் கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது.
ஆளுநர் சமீபத்தில் பேசிய போது, ஆரியம், திராவிடம் இல்லை என கூறியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மற்றும் பல்வேறு தரப் பினர் எதிர்ப்பு தெரிவித்து வரு கிறார்கள். திராவிடத்தை தாங்கி கட்சி பெயர் வைத்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிடம் குறித்து ஆளுநரின் கருத்திற்கு பதில் சொல்ல மறுக்கிறார்.
மக்கள் போராட்டம்
‘நீட்’டுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தான். ‘நீட்’டிற்காக களத்தில் இறங்கி உழைக்கும் கட்சி தி.மு.க. ‘நீட்’டிற்கு எதிராக அனைவரும் போராடி அதனை ஒழிக்க வேண் டும். ‘நீட்’ தேர்வால் அரியலூர் மாணவி அனிதா உள்பட 22 பேர் உயிரை மாய்த்துள்ளனர்.
மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை ‘நீட்’ கொண்டு வரப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தான் ஒன்றிய அரசு ‘நீட்’டை நுழைத்தது. ‘நீட்’டிற்கு எதிராக பல சட்ட போராட் டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனை மக்கள் போராட்ட மாக மாற்றும் வகையில் தற் போது கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி இந்தியாவில் எந்த மாநி லத்திற்கு சென்றாலும் முதல மைச்சர் பற்றியும், என்னைப் பற்றியும் விமர்சனம் செய்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலை ஞர் குடும்பம் மட்டும் தான் வளரும் என பேசி வருகிறார்.
அவர் சொல்வது உண்மை தான். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கலைஞரின் குடும் பம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதையும், சொல்லாததையும் திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தி வருகிறார்.
பெண்களுக்கு இலவச பய ணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் மிச்சமாகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டு தோறும் 12 ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17 லட்சம் மாணவர்கள் பயன டைந்து வருகிறார்கள். மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் தகுதி உள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் வாக்குறுதியில் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக் கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப் படும் என கூறினார்.
ஆனால் இதுவரை 15 காசுகள் கூட போடவில்லை. பா.ஜனதா ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே அபரிமித மான வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ஆ-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
அதானி ஏர்போர்ட், ரயில்வே, துறைமுகம் என வளர்ந்து கொண்டே உள்ளது. ரமணா திரைப்பட பாணியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்ததாக ஒன்றிய அரசு கணக்கு காட்டியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார். ஆனால் ஒன்றிய அரசு இதற்கு செவி சாய்க்காமல் நான் பேசிய வார்த்தைகளை திருப்பிக் கூறி பொய்யைப் பரப்பி வருகிறார்கள்.
இது தொடர்பாக நீதிமன் றத்தில் வழக்குகளும் தொடரப் பட்டுள்ளது. நான் கலைஞரின் பேரன். யாரிடமும், எதற்காகவும் மன்னிப்பு கேட்க மாட்டேன். இளைஞரணி நிர்வாகிகளான நீங்கள் கடுமையாக உழைத்தால் உயர்வடைவது நிச்சயம்.
வருகிற நாடாளுமன்ற தேர் தலில் 40 தொகுதிகளையும் வென்றெடுப்போம். இதற்காக சேலம் மாநாட்டிற்கு திரண்டு வாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.