சென்னை,ஜன.26- பேச்சுவார்த்தையின்போது தொழிற் சங்கங்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க மின் வாரியம் முடிவுசெய்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 டிசம்பர் முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், இன்னும் வழங்கப்படா ததால் விரைந்து வழங்குமாறு தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மின்வாரிய நிதிப் பிரிவு இயக்குநர் சுந்தரவதனன் தலைமையில் குழு அமைக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து, மின்வாரியத்தில் உள்ள 19 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் இக்குழுவுடன் பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில், 5சதவீத ஊதிய உயர்வு வழங்க மின் வாரியம் முடிவு செய்து, அதற்கான கருத்துருவை தொழிற் சங்கங்களிடம் வழங்கியது. ஆனால், இந்த5 சதவீத ஊதிய உயர்வை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்தன.
இதையடுத்து, ஊதிய உயர்வு குறித்து 19 தொழிற் சங்கங்களுடன் மின்வாரியம் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், மின்வாரிய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதைரத்து செய்து விட்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டும். மின்வாரிய ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யாமல், மின் வாரியம் மூலமாகவே தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம் என்றனர்.
பேச்சுவார்த்தையின்போது தொழிற்சங்கங்கள் தெரி வித்த கோரிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். பின்னர், அரசு இவ்விஷயத்தில் முடிவு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.