காமராஜருடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாள் பொழுதும் ஒரு பொற்காலமாய் தெரிந்தது தந்தை பெரியாருக்கு… காமராஜர் தமிழ்நாட்டு முதல் அமைச்சராக பொறுப்பேற்ற இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் எப்பேர்பட்ட நன்மைகள் ஏற் பட்டிருக்கின்றன. இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு காமராஜரே தமிழ்நாடு முதலமைச்சராக இருந்து கொண்டு ஆண்டால், தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு வந்து விடுவார் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்…
ஒரே நேரத்தில் கல்வி புரட்சியும் தொழில் புரட்சியும் விவசாய புரட்சியும் மின்சார புரட்சியும் இன்னும் பல நன்மை களும் நடப்பதற்கு காமராஜரின் ஆளுமையே காரணம்… அவருடைய நேர்மையே காரணம்… தன்னலமற்ற சேவை மனப்பான்மையே காரணம்… நிர்வாகத் திறமையே காரணம்… எந்தவிதமான பந்தாக்கள் எதுவுமில்லாத எளிமையே காரணம்…
இப்படிப்பட்ட நற்குணங்கள் கொண்ட ஒரு தலைவர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் கிடைப்பாரா? என்ற அளவுக்கு பெரியாரின் சிந்தனை இருந்தது… காமராஜருடைய இடத்தில் வேறு எவரையும் வைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதீதமான நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்…
ஆனால் காமராஜருடைய சிந்தனை தமிழ்நாட்டையும் தாண்டி இந்தியா முழுக்க பரந்தும் விரிந்தும் இருந்தது… தமிழ்நாட்டிற்கு தம்மால் முடிந்ததை ஓரளவுக்கு செய்திருந்த திருப்தி இருந்தாலும் அகில இந்திய அளவில் நாடு அத்தனை செழிப்பாக இல்லையே.. பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவ்வளவு நிம்மதியாக இல்லையே என்ற கவலை காமராஜர் நெஞ்சிலே நிரம்பி இருந்தது. 1962ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்திருந்த சீனப் போரிலே இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் நேரு மனமுடைந்து போயிருந்தார். மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இயங்கிக்கொண்டிருந்த நேருவின் உடல்நிலையில் அது ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஒரு ஆட்சி நன்றாக நடக்க வேண்டும் என்றால் அந்த ஆட்சிக்கு தலைமை ஏற்று இருக்கிற தலைவனது உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். அவர் சார்ந்திருந்த கட்சியின் கட்டுக்கோப்பும் சீராக இருக்க வேண்டும். இப்படி இரண்டு வகையில் சீர்தூக்கி பார்த்து சிந்தித்தார் காமராஜர்.
எனவே நேருவைப் பற்றியும் அவரது உடல் நிலையை சீராக்குவதிலும் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதிலும் கவனம் செலுத்தியாக வேண்டியது தனது கடமையாகும் என்று உணர்ந்திருந்தார் காமராஜர்.
அய்தராபாத்திற்கு வந்திருந்த நேருவை போய் சந்தித்து நாட்டின் நிலை குறித்து விரிவாக கலந்து ஆலோசித்தார் காமராஜர்… அப்போது உருவானது தான் “கே” பிளான் திட்டம்… அந்த திட்டத்தின்படி மூத்த தலைவர்கள் பலர் தாங்கள் வகிக்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி இளைஞர் களை பொறுப்பிலே அமர்த்திவிட்டு கட்சிப்பணி ஆற்ற வேண்டும் என்பதே காமராஜரின் திட்டமாகும்… அதுதான் பின்னர் “கே” பிளான் என்று அழைக்கப்பட்டது.
நேருவும்… இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இது ஒரு நல்ல ஆலோசனை என்றும் மூத்த தலைவர்கள் பலருடன் ஆலோசனை கலந்து அவர்களுடைய இசைவில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நினைத்தார். முதற் கட்டமாக நானே பதவியை விட்டு விலகுகின்றேன் என்று முன்வந்தார் நேரு. ஆனால்… காமராஜர் உட்பட மூத்த தலைவர்கள் யாரும் நேரு பதவி விலகுவதை விரும்பவில்லை.
இந்தத் திட்டத்தில் நேருவுக்கு மட்டும் விதிவிலக்கு என்று சொல்லி பதவி விலக முன்வந்த நேருவை சமாதானப்படுத்தி விட்டனர். ஏனென்றால் நேருவுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும் உலகளவில் இருந்த மதிப்பும் மரியாதையும் வேறு எவருக்கும் இல்லை. அவரது ஆளுமைக்கு ஈடு சொல்ல எவரும் இல்லை என்ற எண்ணமே தலைவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.
இப்படி இந்த “கே” பிளான் பற்றிய செய்திகள் எல்லாம் பத்திரிகையில் வெளிவந்து அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காம ராஜரும் இந்த “கே” பிளான் மூலம் பதவியை துறப்பார் என்ற செய்திகள் அடிபட தொடங்கியது.
இதையெல்லாம் ஏடுகளின் மூலமாக அறிந்த தந்தை பெரியார் மிகுந்த கவலைக்குள்ளானார்… தமிழ்நாட்டின் நலன் கருதி இதை எப்படியாவது தடுத்தாக வேண்டுமே… அவரவர் சார்ந்திருக்கும் கட்சியை அவரவர் பலப்படுத்த நினைப்பதில் எந்த தவறும் இல்லை அது அவர்களின் நிலைப்பாடு. ஆனால் காமராஜரை போல ஒருவர் தமிழ்நாட்டுக்கு கிடைப்பாரா? இதுதான் பெரியாருடைய கேள்வி!
யோசனையை கூறிவிட்டு நாம் பதவியில் இருப்பது நாகரிகமாகாது என்ற நினைப்பில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவினை காமராஜர் எடுத்து இருப்பார் என்று நினைத்தார் பெரியார். உடல்நலிவு என்று வந்துவிட்டால் நோயாளி தான் மருந்து சாப்பிட வேண்டுமே தவிர டாக்டரே ஏன் சாப்பிட்டு காட்டக்கூடாது என்றெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்று விடுதலை நாளேட்டில் 10.8. 1963இல் ஒரு தலையங்கத்தையே எழுதினார் பெரியார்.
மேலும் அந்த தலையங்கத்தில் நெருக்கடியான இந்த நேரத்தில் நீடிக்க வேண்டியது நேருவின் தலைமையே என்று பலர் கருதுவது போல தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காமராஜரின் தலைமையும் நீடித்தாக வேண்டும் என நினைத்தார் பெரியார்.
இதை காங்கிரஸ் மேலிடத்தார் நன்கு உணர்ந்திட வேண்டும். ஒரு பிரச்சினையை தீர்க்கப் போய் புதிதாக பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வது புத்திசாலித்தனமான காரியமாகாது. கடைசியாக சொல்கிறேன் தமிழ்நாட்டின் நலனையே முதலில் காமராஜர் மனதில் கொள்ள வேண்டும். மூன்றரை கோடி மக்கள் நலனை கருத்தில் கொண்டே இதனை கூறுகிறோம். முதலில் நாட்டு நலன். பிறகுதான் கட்சி நலன். ஒளி வீசும் தமிழ்நாடு மீண்டும் இருளுக்கு ஆளாகி விடக் கூடாது அது கேடு மட்டுமல்ல பெருங்கேடு என்று விடுதலையில் எழுதி இருந்தார் பெரியார்.
இந்த சந்தர்ப்பத்தில் வேறு யாராவது ஆட்சியில் வந்து அமர்ந்தால் அவர்களால் சமாளிக்க முடியாமல் கேரளாவை போல் ஒரு நிலையற்ற ஆட்சி தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடும் .இதனை ஒரு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன் என்றெல்லாம் விடுதலை ஏட்டில் கோடிட்டு காட்டி இருந்தார் பெரியார்.
மேலும் காமராஜருக்கு ஒரு தந்தியும் கொடுத்தார் பெரியார்…
Either on your own accord or on the advice of others, your resignation of chiefminister ship will be sucidal to tamilians, Tamilnadu and yourself.
தாங்களாகவோ அல்லது பிறரது ஆலோசனை காரண மாகவோ தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவியில் இருந்து தாங்கள் விலகினால் அது தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பானதாகும்… என்பதுதான் பெரியார் கொடுத்திருந்த தந்தியாகும்.
பெரியாரின் இந்த கணிப்பு பின்னாளில் அப்படியே நடந்தது, பலித்தது. காமராஜரின் இடத்திலே வந்து அமர்ந்து முதலமைச்சராக ஆட்சி செய்த பக்தவச்சலம் அவர்களால் காமராஜரை போல செயல்பட முடியவில்லை. விலைவாசி உயர்வை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நமக்கே அரிசி தேவைப்பட்டிருந்த நேரத்தில் கேரளாவுக்கு அதை அனுப்பி வைத்ததால் இங்கே அரிசி பஞ்சம் ஏற்பட்டு அது ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவானது.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ் நாடெங்கும் நடை பெற்றது. இதில் மாணவர்கள் பங்கேற்றதால் ஆங்காங்கே கலவரங்கள் நடைபெற்றது. இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று வந்து காமராஜர் இல்லாத தமிழ்நாடு எப்படி இருக்கும் என்று பெரியார் சொன்ன சொற்களை நிரூபித்துக் காட்டியது.
இப்படி எல்லாம் நடைபெற்றதற்கு பின்னாலும் காமராஜரை ஆதரிப்பதை பெரியார் கைவிடவில்லை. காந்தியார் சென் னைக்கு வந்த நேரத்தில் காமராஜரை காந்தியாருக்கு அருகிலே செல்லவிடாமல் மாலை கூட போட விடாமல் தடுக்கப்பட்ட காலம் எங்கே… இப்போது காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கம்பீரமாக ஒரு தமிழர் கோலோச்சுகிற காலகட்டம் இங்கே என்றெண்ணி பெருமிதப் பட்டார் தந்தை பெரியார்..
காமராஜர் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு புவனேஸ்வரம் மாநாட்டிலே அவர் தமிழிலேயே உரையாற்றி யதை பெரிதும் வரவேற்று மகிழ்ந்தார். அதுமட்டுமல்ல திராவிட கழக மாநாட்டிலே பேங்குகளை தேசிய மயமாக்க வேண்டும், தொழில்களை தேசிய மயமாக்க வேண்டும், இன்சூரன்ஸ் கம்பெனிகளை அரசு எடுத்துக் கொள்வது என்று நாங்கள் போட்ட தீர்மானங்களை எல்லாம் புவனேஸ்வர் மாநாட்டிலே தீர்மானங்களாக கொண்டு வந்ததையும் பாராட்டி மகிழ்ந்தார் பெரியார்.
இன்று உலகமே வியந்து போற்றுகிற இடத்திலே நமது காமராஜரை அமர்த்தி அழகு பார்த்து இருக்கிறார் ஜவஹர்லால் நேரு… இந்த நாட்டில் காமராஜருக்கு விரோதமாக எவனும் செயல்பட்டால் அவன் நாட்டுக்கு துரோகம் செய்கிறான் என்று பொருளாகும். தங்களுடைய சுயநலனுக்காக காமராஜர் காரியம் செய்து உதவவில்லை என்று பணக்காரர்களும் சுயநலவாதி களும் அவரை ஒழிக்க வேண்டும் என்று முயல்கிறார்கள்… காமராஜர் திட்டம் வெற்றி பெற்றால் பணக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதற்காக அவரை செல்வச் சீமான்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து எதிர்க்கிறார்கள். எனவே நமது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று விடுதலை நாளிதழில் 13.2.1964ஆம் தேதி எழுதினார் பெரியார்.
ஜூன் 1963-ல் முதல்-அமைச்சர் பதவியை துறந்து காம ராஜர் டில்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆனதற்கு பின்னாலே பெரியார் எழுதிய கட்டுரை இது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆனதற்கு பின் னாலே காமராஜரின் 63ஆவது பிறந்தநாள் விழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. நாமெல்லாம் காம ராஜரை முதலமைச்சர் பதவியிலே அமர்த்தி அழகு பார்த்தோம். இப்போது அகில இந்திய காங்கிரசுக்கே தலைவராக ஆகியிருக்கிறார். உலகமே போற்றுகிற பண்டித ஜவஹர்லால் நேருவுக்கே ஆலோசனை சொல்லுகிற இடத்திலே காமராஜர் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லி நமது கவியரசர் கண்ண தாசன் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை நகரமே திணறுகிற அளவுக்கு விழாக்கள் அன்றைய தினம் நடைபெற்றன.
இதற்கு முன்னாலே நமது தமிழர்கள் அகில இந்திய தலைமை பொறுப்பிலே ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள். அந்த காலகட்டம் என்பது வேறு. அப்போது மேல் ஜாதிக்காரர் களுக்கும் செல்வந்தர்களுக்கும் மட்டுமே அது கிட்டியது. அதுவே காங்கிரசில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகவும் இருந்தது. ஆனால் ஒரு ஏழை வீட்டிலே பிறந்து தனது கடினமான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றி பேரெடுத்த ஒருவரான காமராஜர் இப்பதவிக்கு வந்ததை இந்திய நாடே வரவேற்றது என்பதே உண்மை.
பெரும்பாலும் வட இந்திய தலைவர்கள் தென்னிந்திய தலைவர்களை அவ்வளவாக வரவேற்பதில்லை. இந்தியாவில் தாங்களே மற்றவர்களை விட மேலோர்கள் என்ற எண்ணம் வட இந்தியத் தலைவர்கள் அடி மனதிலே ஊறியிருந்தது .இப்போதும் அந்த எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. அந்த எண்ணத்தையும் தாண்டி காமராஜரை “காலா காந்தி” என்று அழைத்து வடஇந்திய தலைவர்கள் வரவேற்று பாராட்டி மகிழ்ந்தது ஒரு ஆச்சரியமான விஷயம் என்றே சொல்லலாம்.
தந்தை பெரியாரின் ஒப்புதலோடு காமராஜர் பிறந்தநாளை யொட்டி அப்போது விடுதலை நாளேட்டின் ஆசிரியராக இருந்த குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கட்டுரை மிக முக்கியமான கட்டுரையாகும்.
“தமிழ்நாட்டின் பொற்காலத்தை படைத்த தமிழர்களின் இரண்டாம் காவலரான நமது காமராஜர் அவர்களுக்கு இன்று 63ஆம் ஆண்டு பிறக்கிறது”
முல்லைக்கு தேர் கொடுத்தும் மயிலுக்கு போர்வை ஈந்தும் வள்ளலானவர்களுக்கு மத்தியில் கல்வி வள்ளல் என்று பெயர் எடுத்தவர் தான் நமது காமராஜர்… “தனக்கென வாழாப் பிறருக்குரியாளன் ” என்ற தலைமைக்கு ஒரு இலக்கணம் வகுத்த, காமராஜர் தனது 50 ஆண்டு கால பொதுவாழ்வில் சேர்த்தது ஒன்றே ஒன்றுதான்… அதுதான் புகழ், மங்காத புகழ், மாசில்லா புகழ் ஆகும்.
பதவிகளை தேடி அவர் சென்றது இல்லை அவரை தேடித் தான் பதவிகள் வந்துள்ளன. அப்பதவிகளால் அவர் பொலிவு பெற்றதில்லை, அவரால்தான் பதவிகள் பொலிவு பெற்றன. தர்மம் என்ற பெயரால் கொடிகட்டி பறந்த ஜாதிக்கு மரண அடி கொடுத்த மாமேதை அவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தப்பட்டு கிடந்த நம்மவர்களை மேலே கொண்டு வந்த மேன்மையாளர் தான் காமராஜர்.
“அனுபவம் அவரது படிப்பு, நேர்மை அவரது நெறி, உழைப்பு அவரது பாதை, சம தர்மம் அவரது லட்சியம் “இதுவே அவரைப் பற்றிய நமது மதிப்பீடு …
அவரது சீரிய தலைமை இந்திய துணைக் கண்டத்திற்கு இன்றைய தேவையாகி இருக்கிறது. “வாழ்க காமராஜர், வருக சமதர்ம சமுதாயம்” என்ற சிறப்பு தலையங்கம் 15.7.1965 அன்று விடுதலையில் வெளிவந்து எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. பெரியாரின் ஒப்புதலோடு கட்டுரை வெளிவந்தது என்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிட விரும்புகிறேன்.
நன்றி: ‘மாலை மலர்’, 26.1.2023