உண்ணுமுன் ஓர் உறுதி – தேவையான உறுதி? (2)

Viduthalai
3 Min Read

 உண்ணுமுன் ஓர் உறுதி – தேவையான உறுதி? (2)

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

குறள் (943)  

இதன் பொருள்:

“ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை அறிந்து கொண்டு, உண்ண வேண்டும்; நல்ல உடம்பினைப் பெற்றுள்ள ஒருவன் நீண்டகாலம் அவ்வுடம் பினைக் காப்பாற்றி வாழ வைக்கக் கூடிய வழியும் அதுவேயாகும்.”

சென்ற “வாழ்வியல் சிந்தனைகள்” கட்டு ரையை ஒரே குறளில் பிழிந்து வைத்ததுபோல் இந்தக் குறள் உள்ளதல்லவா?

அளவோடு உண்ணுதல் என்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல், முன்னே உண்டது செரித்து விட்டதா, பசி எடுக்கிறதா என்று உணர்ந்த பின்புதான் உண்ண வேண்டும் என்றே எண்ண வேண்டும்.

இதை ஒரு வாழ்நாள் நெறியாக நாளும் கடைப்பிடிப்போம் – பெரிதும் நோய்களிலிருந்து விடுபடலாம்.  அவதிப்படத் தேவையில்லை என்பது எவ்வளவு பயனுள்ள உடல் நலம் பேண சரியான அறிவுரை – எண்ணுங்கள்; எண்ணுவதை உண்ணும் போது தவறாமல் கடைப்பிடியுங்கள்.

அடுத்து மற்றொரு எச்சரிக்கையையும் வள் ளுவப் பெருஞ் சிந்தனையாளர் தருகிறார்.

மூன்றாவது விதியாக ஆக்கிக் கொள்ளுங்கள் இதை.

இதோ அந்தக் குறள்!

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.  

குறள் (945)

இதன் பொருள் என்ன தெரியுமா?

“உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்தபோதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்திச் செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண் டால், அவனுடைய உயிர் வாழ்க்கைக்கு நோய்களி னால் துன்பம் ஏற்படுவது இல்லை.” என்பதே அப்பொருள்!

இக்காலத்தில் நாம் உண்ணும் போது மேற் கொள்ள வேண்டிய உணவுகளில் ஒவ்வாது உட லுக்கு ஊறு செய்யும் வகையறாக்களை தக்க முறையில் அடையாளம் கண்டு தவிர்க்க வேண் டும்.

ஒவ்வாமை (Allergy) என்பதில் Food Allergy   – உணவில் ஒவ்வாதவை ஆளுக்கு ஆள் மாறுபடும்.

 முருங்கைக்காய் சாப்பிட்டதால் முகம், கை கால்கள் வீங்கி மூச்சுத் திணறலும் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலைக்குச் சென்றவர்களை நானே அறிவேன்.

சிலருக்கு மீன் அலர்ஜி – ஒவ்வாமை,  சிலருக்கு இறால் ஒவ்வாது – வேறு சிலருக்கு ஆட்டிறைச்சி ஒவ்வாதது – இப்படிப் பல!

(மருந்துகளில்கூட ஒவ்வாத  மருந்துகளைக் கண்டறிந்து தவிர்ப்பது இன்றி அமையாதது ஆகும். அதற்கு Drug Allergy – மருந்து ஒவ்வாமை என்றும் உண்டு.

உதாரணமாக, Sulfa சிலருக்கு அலர்ஜியாகும். எந்த மருத்துவமனைக்கு நாம் சென்றாலும் நமது நோயின் வரலாறு; நோயாளியின் பழக்க வழக் கங்கள் போன்ற குறிப்புகளை செவிலியர்கள் கேட்டு குறிப்பெழுதுவார்கள். (இக்குறிப்பை தலைப்பில் குறிப்பிடுவார்கள் – முன்னெச் சரிக்கையாக)

(இந்த ஒத்துவராத உணவை எப்படி 2500 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பேராசான் அறிந்து எழுதியுள்ளார் என்பது வியப்பினும் வியப்பல்லவா?

அந்த வள்ளுவத்தை ஈன்ற தமிழும், நாடும் எவ்வளவு வளத்துடன் முன்பு இருந்து – இடையில் வந்தேறிகளின் பண்பாட்டுப் படையெடுப்பால் கெட்டழிந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கோபம் கலந்த சிந்தனையும் இதனைப் படிக்கும் போது நம்மை அறியாமலேயே பீறிட்டு வெடிக்கிறது)

இந்த அறிவுரைப்படி 

1. செரித்த பின்பு உண்ணுதல் – முதல் விதி.

2. அதோடு, அளவுக்குமீறாமல் உண்ணுதல் 

(அதாவது சிறிது இடம் வயிற்றில் காலியாகவே வைத்திருப்பதுடன், அதே நிலையில் உணவு மேசையிலிருந்து – அல்லது பந்தியிலிருந்து எழுந்து விடுதல், மிக மிக நல்ல பழக்கம்) 

ஆனால், அந்த ‘சபல எதிர்ப்பு’ எளிதானதல்ல, உணவு பந்தியில்! என்றாலும் நல வாழ்வு தானே முக்கியம் – அவதியை அடையப் போகிறவர் விருந்து பரிமாறுகிறவர் அல்லவே! சாப்பிடும் நபர்தானே – நாம் தானே என்ற பொறுப்புணர்வு நம்மைக் குடையட்டும். அதுவே நம்மை எழுப்பி கை கழுவச் செய்யும் என்பதை கவனடமுடன் மறக்காதீர்!

(வளரும்)  

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *