– பழனி முருகன் சக்தி இதுதானோ?
பழனி, பிப். 4- கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இருவர் பழனிக்கு நடைப்பயணம் சென்றபோது வாய்க்காலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பெரிய குயிலி பகுதியை சேர்ந்தவர்கள் மகா லிங்கம் (37), கோபிநாத் (17). இவர்கள் இருவரும் பழனியில் நடைபெறும் தைப் பூச விழாவிற்கு செல்ல குழுவாக நடைப் பயணம் சென்றுள்ளனர்.
நேற்று மாலை அக்குழுவினர் பல்லடம் உடுமலை சாலை பச்சார்பாளைம் பி.ஏ.பி. வாய்க்கால் பகுதியை கடந்துள்ளனர். அப்போது வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் இறங்கி சிலர் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கோபிநாத் (17) தண்ணீரில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட் டுள்ளார். அப்போது அங்கிருந்த மகாலிங்கம் சிறுவனை காப் பாற்ற வாய்க்காலில் குதித்துள்ளார். வாய்க்காலில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததாலும், வேகம் அதிகமாக இருந்த தாலும் இருவரும் அடித்துச் செல்லப் பட்டனர். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் காமநாயக் கன்பாளையம் காவல் துறை யினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வாவிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் சடலம் ஒன்று மிதந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்ற காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் தீயணைப்புத் துறையினர் மிதந்து வந்த சடலத்தை மீட்டு விசாரித்த போது அந்த உடலானது வாய்க்காலில் தவறி விழுந்த கோபிநாத் (17) என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்தது. மேலும் இதே போல எஸ் குமாரபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் மேலும் ஒரு ஆண் சடலம் மிதந்து வருவதாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்புத் துறையினருடன் நிகழ்வு இடம் விரைந்து சென்ற சுல்தான்பேட்டை காவல் துறையினர் மிதந்து வந்த ஆணின் சடலத்தை மீட்டு விசாரித்ததில் அந்த ஆணின் சடலம் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்ற குதித்த மகாலிங்கத்தின் உடல் என்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடற் கூராய்வுக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்நிகழ்வு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு நடைப்பயணம் சென்ற குழுவில் இரண்டு பேர் வாய்க்காலில் தவறி விழுந்து பலியான நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்: அமைச்சர் உதயநிதி அறிவுரை
சென்னை, பிப். 4- மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என டில்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றதமிழ்நாடு என்.எஸ். எஸ். மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறி வுரை வழங்கினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டில்லியில் கடந்த ஜன.26ஆம்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற அணிவகுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (என்எஸ்எஸ்) 14 பேர் பங்கேற் றனர். இவர்களுக்கான குடியரசு தின அணிவகுப்பு பயிற்சி முகாம் டில்லியில் கடந்த ஜன.17 முதல் 25 வரை நடைபெற்றது. இந்நிலையில் அந்த மாணவர்களுடன் நேற்று (3.2.2023), சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலக பல்கலைக்கழக சேவை மய்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதன்பின் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: குடியரசு தின அணிவகுப்பின்போது பெற்ற அனுபவங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் இது போன்ற நிகழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பலரும் அறிந்துகொள்ள முடியும்.சுய ஒழுக்கத்துடனும், திறமைகளுடனும் இருப்பதால் மட்டுமே உங்களுக்கு இது போன்ற வாய்ப்புகிடைத்துள்ளது. மேலும் திறமைகளை வளர்த்து மேன்மேலும் பல சாதனைகளைப் படைத்து தமிழ் நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமைசேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ம.செந்தில்குமார், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா ஆகியோர் உடனிருந்தனர்.
சித்த மருத்துவ படிப்புகளுக்கு
பிப். 11 முதல் 2ஆம் கட்ட கலந்தாய்வு
சென்னை, பிப். 4- சித்த மருத்துவ படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள தாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை தெரிவித் துள்ளது. தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோ பதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அதில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல, 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்கள் உள்ளன. இதில் 1,469 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 521 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. இந்த கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு ஆகிய இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசு நடத்தியது.
முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், அரசு கல்லூரிகளில் 61 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், சுயநிதி கல்லூரிகளில் 350 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 127 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் 503 நிர்வாக ஒதுக்கீடு என மொத்தம் 1,041 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் பங்கேற்கலாம். மேலும், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 15ஆம் தேதி சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்யலாம். மேலும் விவரங்களை https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.