நமது எதிரி! நமது ஆயுதமே அறிவாயுதம்தான்!!
திராவிடர் இயக்க வரலாற்றின் உற்சாகக் கோட்டை உடுமலைப்பேட்டை!
பொள்ளாச்சி,பிப்.7- சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை அறிஞர் அண்ணா நினைவுநாளான 3.2.2023 அன்று குமாரபாளையம் , ஈரோட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கினார். நான்கு கட்டங்களாக பரப்புரை தொடர் பயணம் நடைபெறுகிறது. அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் (10.3.2023) கடலூரில் பரப்புரை பயணம் நிறைவு பெறுகிறது.
தொடர் பரப்புரைப் பயணத்தை கழகப் பொதுச்செய லாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
பயணக் குழுவில் கழகப்பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப் பாளர்கள், பேச்சாளர்கள், கழகத் தோழர்கள் இடம் பெற்று கொள்கை வீச்சாக மக்களிடம் பயண நோக்கத்தைக் கொண்டு செல்கின்றனர்.
மாநகர், நகரங்கள், கிராமங்கள் வேறுபாடின்றி கழகக் கொடிகள், பதாகைகள், சுவரெழுத்துகள் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள்மூலம் பரப்புரைப் பயணப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைகேட்க மக்களுக்கு அழைப்பு விடுத்த காட்சி எழுச்சியுடன் காணப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் சுற்றுப்பயணம் கருப்புச் சட்டைப் பட்டாளத்திற்கே உரித்தான கொள்கை வீச்சு, எழுச்சியுடன் மக்களிடையே சமூக நீதி குறித்தும், திராவிட மாடல் குறித்தும் விழிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாநிலம் தமிழ்நாடு, இது சமூக நீதிக்கான மண். தந்தைபெரியார் மண். இங்கே மதவெறிக்கு தூபம் போடுகின்ற காவிகளுக்கு, சனதானத்துக்கு இடமே கிடையாது என்பதை பறைசாற்றும் வண்ணம் தமிழர் தலைவர் ஆசிரியர் செல்லுகின்ற இடமெல்லாம் கட்சி, ஜாதி, மத பேதங்களுக்கு இடமில்லாமல் தமிழர்கள் அனைவரும் திராவிட உணர்வுடன் தமிழர் தலைவர் ஆசிரியரைக் காணவும், வரவேற்கவும் திரண்ட வண்ணம் உள்ளனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது 90 வயதிலும் இளைஞராக வலம் வருகிறார், 10 வயதில் இருந்த அதே தீரம் சற்றும் எதிரிகளுக்கு இடம் அளித்து விடக்கூடாது என்கிற தீவிர உணர்வு மாணவர்கள், இளைஞர்களைக் கொள்கையின்பால் கவர்ந்து இழுக்கிறது. உலகத் தலைவர் தந்தை பெரியாரை அறிந்தவர்கள், பார்த்திராதவர்கள் என்றிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயணம் கொள்கையில் பிடிப்பையும், உறுதியையும், போர்க்குணத்தையும் ஊட்டி வருகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பயணக் குழு வினை பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துக் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்று தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் பரப்புரை தொடர் பயணத்தில் தங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தி வருகின்றனர்.
நேற்று (6.2.2023) பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரைப்யணப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 6.2.2023 அன்று நடைபெற்ற திராவிட மாடல் விளக்க பரப்புரை கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் தி.பரமசிவம் தலைமை தாங்கினார்.
கோவை மாவட்ட துணைத் தலைவர் சி.மாரிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். கோவை மாவட்ட தலைவர் தி.க.செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வம், மாவட்ட காப்பாளர் ம.சந்திரசேகர், மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மாநில இளைஞரணி அமைப் பாளர் ஆ.பிரபாகரன், திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் மு.இராகுல், நகர செயலாளர் அர.நாகராஜ், நகர அமைப்பாளர் ஜெ.செழியன், மாவட்ட செயலாளர் கோவை வீரமணி, நகர பொறுப்பாளர் ஆனந்தசாமி,க.வீரமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தொடக்க உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் உரை யாற்றினார். பின்னர் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவர், ”இது தனிக்கூட்டம் அல்ல, ஆகவே அதிக நேரம் பேச முடியாது. ஆகவே புத்தகங்கள் இங்கே விற்பனை யாகின்றன. அதை வாங்கிப் படியுங்கள்” என்று தொடங்கினார். முன்னதாக முன்னிலை வகித்தவர்களை பற்றிச் சொல்லும் போது, எங்கள் கொள்கைச் செல்வம் கோவை கு.இராம கிருஷ்ணன் என்று விளித்தார். அதேபோல் பொள்ளாச்சி நகரத் தலைவர் சியாமளாவை விளித்த போது, அதென்ன நகரத் தந்தை? நகரத் தந்தை இருக்கும் போது நகரத்தாய் இருக்கக்கூடாதா? என்று கேட்டு மேடையையும், பார்வை யாளர்களையும் சிரிப்பும், சிந்தனையும் ஒருசேர கலகலக்க வைத்தார். தொடர்ந்து அடுத்த தேர்தல் என்பது முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் அடுத்த தலைமுறை. அடுத்த தலைமுறை உரிமையுள்ள தலைமுறையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். தாங்கள் எடுத்த காரியத்தில் தோற்றதே இல்லை என்று திராவிடர் இயக்கத்தின் வெற்றி வரலாற்றை நினைவூட்டினார்.
காவிகளை விரட்டுவதில் உயிரையும் விடத்தயார்!
நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன், ஒரு காலத்திலே நான் செருப்பு போட முடியாது; ஒரு காலத்திலே நான் வேட்டி கட்ட முடியாது; வீதிக்குள் நடக்க முடியாது; கோவிலுக்குள் செல்ல முடியாது. ஆனால் அத்தனை உரிமைகளையும் பெற்றுத்தந்த இயக்கம் திராவிடர் கழகம்! பெற்றுத்தந்த தலைவர் தந்தை பெரியார்! இன்று செருப்பு போட்டுக்கொண்டு நடக்கிறேன்; வெள்ளை வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு இந்த ஒலிவாங்கியின் முன்னால் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். கோயிலுக்குள் செல்கிறேன். கோயிலுக்குள் மட்டுமல்ல, கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் நுழைந்து மணியாட்டுகிறேன். இந்த உரிமையை பெற்றுத்தந்த தலைவர் தந்தை பெரியார்! இன்றைக்கு தந்தை பெரியாரின் கனவுகளையெல்லாம் நனவாக்கிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்! அப்படிப்பட்ட இயக்கத்திலே என்னை இணைத்துக்கொண்டு பொறுப்போடு பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இந்த இயக்கத்தை எந்த கொம்பாதி கொம்பனும் வீழ்த்த முடியாது காவிகளை விரட்டுவதில் உயிரையும் தரத் தயங்கமாட்டோம். வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்! வாழ்க ஆசிரியர்! வாழ்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நன்றி!
– திப்பம்பட்டி ஆறுச்சாமி (தி.மு.க)
ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்
பொள்ளாச்சி. 6.2.2023
சேது சமுத்திரத் திட்டத்தில் அன்றைக்கு நாங்கள் என்ன சொன்னோமோ அதைத்தான் இன்று பா.ஜ.கவின் அமைச்சர் ஜிதேந்திர சிங் இராமர் பாலம் இருந்ததற்கான அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லை என்று சொல்கிறார் என்று நடப்பு அரசியலையே உதாரணமாகச் சொன்னார். அதையொட்டியே, மூன்று பார்ப்பனர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக நின்றார் கள் என்று மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சோ, சம்மன் இல்லாமல் ஆஜராகும் அரசியல் புரோக்கர் சுப்பிரமணிய சுவாமி என்று, மூன்று பார்ப்பனர்களைக் குறிப்பிட்டார். அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதால் எத்தனை பேருக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்பு பறிபோயிற்று என்பதை யும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரியார் என்ன செய்தார் என்று கேள்வி கேட்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, என்ன செய்தார் என்று கேள்வி கேட்கும் அறிவைக் கொடுத்தார், புதிய பார்வையில் பதில் சொன்னார். அதையொட்டி, திராவிடர் இயக்கத்தின் சமூக நீதிக்கான வெற்றி வரலாற்றை நீதிக்கட்சியிலிருந்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.
திராவிடர் இயக்கத்தின் அந்தப் பணிகளுக்கு அங்கீகாரம் வந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு, ஆனால், அதற்குக் குறுக்கே பார்ப்பனியம், சனாதனம் படுத்துக்கொண்டு தடுக் கிறது என்று திராவிடர் ஆரியர் போராட்ட வரலாற்றை ஒற்றை வாக்கியத்தில் குறிப்பிட்டு, அந்த தடைகளைத் தாங்கும் தடந்தோள்கள் உண்டு என்றும், எங்களின் ஆயுதமே அறிவாயுதம்தான் என்று அதற்கான தீர்வையும் சேர்த்துச் சொன்னார்.
மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக சமூக நீதி பற்றி பசியேப்பக்காரர்கள், புளியேப்பக்காரர்கள் என்ற எளிய உதாரணத்தைச் சொன்னார். அப்படிப்பட்ட சமூகநீதியை திருடியவர்கள் யார்? கொள்ளையடித்தவர்கள் யார்? பறித்துக் கொண்டவர்கள் யார்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளில் இருவர் பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களில் ஒருவர் கூட இல்லை. அதிலும் ஆர்.எஸ்.எஸ். காரப் பெண் ஒருவர். வெறுப்புப் பிரச்சாரம் செய்தவர். அவர் என்ன தீர்ப்பு கொடுப்பார்? என்று சமீபத்திய நடப்பில் நமது சமூகநீதிக்கு குறுக்கே பார்ப்பனியம் படுத்திருப்பதை எடுத்துக்காட்டினார்.
Stalin is more dangerous than Karunanidhi
பெரியாருக்கு 93 வயது. காமராசர் திருச்சியில் அய்யாவிடம் “அய்யா இனியாவது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்டு கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே’ என்று கேட்டவுடன், உடனடியாக அய்யா, ‘ஓய்வா? நான் செத்துவிடுவேன். ஆனால் சுற்றுப்பயணத்தில் மக்களைச் சந்தித்தால் வாழ்ந்துகொண்டிருப்பேன்’ என்று சொன் னார். அதேபோல்தான் அய்யா ஆசிரியர் அவர்கள்! இந்த சுற்றுப்பயணம் அவர்களுக்கானதல்ல, எங்களைப் போல உள்ள கருப்புச்சட்டைக்காரர்களுக்கல்ல, மக்களுக்காக! மக்களின் நல்வாழ்க்கைக்காக! இதில் அரசியல் கிடையாது. தோழர்களே, உன் நண்பனைச் சொல், நீ யார் என்று சொல்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் பெரியார், “உன் எதிரி யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்” என்று சொன்னார்! நீ யாரை எதிரியாகத் தேர்ந்தெடுக்கின்றாயோ அதன்படி சொல்கி றேன் என்றார்கள். அதைத்தான் இன்று தமிழ்நாடு பேசிக் கொண்டிருக்கிறது. காரைக்குடியிலிருந்து ஒருவர் பேசு கிறார். ‘Stalin is more dangerous than Karunanidhi’ கருணாநிதியைவிட ஸ்டாலின் டேஞ்சரஸ் என்றால், ஸ்டாலின் சரியாக தனது எதிரியை தேர்ந்தெடுத்திருக்கிறார். யாரை எதிர்த்துப் போராடவேண்டுமோ அதை சரியாக செய்துகொண்டிருக்கிறார். ரஷ்யாவுக்கு எப்படியோ அதுபோல தமிழ்நாட்டுக்கு மு.க.ஸ்டாலின் இரும்பு மனிதர்! அந்த வகையில்தான் ஆசிரியர் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பற்றி பேச வந்திருக்கிறார். 1938 இல் பட்டுக் கோட்டை அழகிரி திருச்சியிலிருந்து நடைப்பயணம் வந்ததுபோல் ஆசிரியர் சுற்றுப்பயணம் வந்திருக்கிறார். அவரது பயணம் வெற்றிபெறும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
– கு.இராமகிருஷ்ணன்
பொதுச்செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
பொள்ளாச்சி – 6.2.2023
பார்ப்பனியத்தின் கொடுமையை இன்னும் உரைக்கும்படி சொல்ல எண்ணியவர், செத்தபிறகு புதைக்கவோ, எரிக்கவோ ஒரே சுடுகாடு இல்லையே! என்று ஜாதியால் ஏற்பட்டிருக்கும் அவலத்தை சுருக்கென்று தைக்கும்படி சொன்னார். இதே பார்ப்பனியத்தால் தடைபட்டு நின்று போன சேது சமுத்திரத் திட்டம் வந்தால், நமது இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே என்று கவலையுடன் எடுத்துரைத்தார்.
இறுதியாக, சனாதனத்தின் பெயரால் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நமது வளர்ச்சியைத் தடுக்ககூடாது. நமக்கு தனி மனிதர்கள் எதிரிகளல்ல, தத்துவங்கள்தான். நாம் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளக்கூடியவர்கள். நமக்கு ஆயுதமே அறிவாயுதம்தான் என்று கூறி, இதில் ஜாதியில்லை, கட்சியில்லை, பேதமில்லை மக்கள் பயன்படவேண்டும். இதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் செய்து கொண்டிருக்கிற ஆட்சிதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி என்று கூறி பொள் ளாச்சி கழக மாவட்டம் என்று தனியே அறிவித்து அதற்கான பொறுப்பாளர்களை அறிவித்தார்.
இந்த பரப்புரை கூட்டத்தில் பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், தி.மு.க.மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணைச்செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி , தி.மு.க.இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் இளங்கோ ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், வி.சி.க. மாவட்ட செயலாளர் பிரபு, தி.இ.த.பேரவை அமைப் பாளர் கா.சு.நாகராசன், தி.வி.க. மாவட்ட செயலாளர் வெள் ளிங்கிரி, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் என்.கே.பகவதி, ஆதி தமிழர் பேரவை பொறுப்பாளர் கோபால், தமிழ்ப்புலிகள் கட்சி பொறுப்பாளர் வானகன், வெல்பேர் பார்ட்டிஆஃப் இந்தியா பொறுப்பாளர் மணிமாறன், த.மு.மு.க. மாவட்ட செய லாளர் அப்துல் கபூர், ம.ம.க.பொறுப்பாளர் சேக் அப்துல்லா, பொள்ளாச்சி நகர பொறுப்பாளர்கள் சிவராஜ், வடிவேல், கார்த்தி, முருகானந்தம், கண்ணன், மனோஜ்குமார், முத்து , கிருஷ்ணமூர்த்தி, மண்டல மகளிரணி செயலாளர் கலைச் செல்வி, தமிழ்முரசு, வெங்கடாசலம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். பத்து ஆண்டுகளுக்கு பின்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றுகிறார் என்பதால் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் நல்ல வரவேற்பும் காண முடிந்தது. பொள் ளாச்சியில் கூட்டத்தை முடித்துக்கொண்டு, ஆசிரியர் தலைமையிலான பரப்புரைக்குழு உடுமலைப்பேட்டை நோக்கி புறப்பட்டது.
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை பெரியார் திடலில் நடைபெற்ற பரப்புரை பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணியூர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ஆ.முனீசுவரன், மாவட்ட துணை செயலாளர் மாயவன், பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சக்திவேல், மயில்சாமி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஒன்றிய கழக .செயலாளர் பெரியார் பித்தன், நகர தலைவர் அ.ப.நடராசன், பொதுக்குழு உறுப்பினர் தாராபுரம் சண்முகம், நகர அமைப்பாளர் வெங்கடாசலம், ப.க.மாவட்ட தலைவர் ஆறுமுகம், ப.க.நகர தலைவர் முருகேசன், கணியூர் சாமி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தொடக்கவுரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கொட்டும் பணியில் மக்கள் வெள்ளம் போல் ஆசிரியர் உரையை கேட்கவேண்டுமென்று உடுமலைப்பேட்டையில் காத்திருந்தனர். ஆசிரியர் வாகனத்திலிருந்து கீழே இறங்கி தோழர்கள் புடைசூழ வேகநடையில் நடந்துவருவதைக் கண்டதும் மக்கள் ஆரவாரம் செய்தனர். வெளிப்படையாக சிலர் இவருக்கா 90 வயசாச்சு என்று வியப்புடன் பேசிக் கொண்டனர். இன்னும் சிலர் விசிலடித்துத் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
ஆசிரியர் மேடையேறியதும் மேடைக்கு முன்னால் முண்டியடித்துக்கொண்டு சென்று ஆசிரியரை கண்குளிரக் கண்டு நெகிழ்ந்தனர்.
மக்களின் உற்சாகம் ஆசிரியரையும் தொற்றிக்கொண்டது. அந்த உற்சாகம் அவருடைய உரையிலும் எதிரொலித்தது. அதை, பொள்ளாச்சியில் மக்கள் ஏராளமாக வந்திருந்தனர். ஆனால் அதைவிட உடுமலைப்பேட்டையில் மக்கள் அதிகம் என்று கூறி வெளிப்படுத்தினார். மக்கள் அந்த அங்கீகாரத்தை பெருமிதத்துடன் ஏற்று ஆரவாரித்தனர். அதே உற்சாகத்துடன், “கொட்டும் பனியில் மக்கள் சங்கடத்துடன் இருப்பார்களே என்று சங்கடத்துடன் வேகவேகமாக வந்தோம் வெள்ளம் போல் திரண்டிருக்கிறீர்கள். நீங்கள் பனியில்! நாங்கள் பணியில்! இரண்டுமே தவிர்க்க முடியாது” என்று சிரித்தபடியே கூறி மக்களையும் மேலும் உற்சாகமடையவைத்தார்.
வழக்கமாக ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் இயக்கத் தொடர்புள்ள தோழர்களை நினைவு கூர்ந்து பேசுவது உண்டுதான் என்றாலும் உடுமலையில் அந்த நினைவு கூறல் நீண்டுகொண்டே இருந்தது. ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இந்த நகரத் துக்கு பலவரலாறுகள் உண்டு என்றே பேசத்தொடங்கினார். அதாவது 1949க்குப் பின்னால் பெரியார் அய்யா இங்கே 144அய் மீறினார்கள் என்பதற்காக அய்யாவும், கே.ஏ.மதியழ கனும் ஒன்றாக நீதிமன்றத்தில் சந்தித்தார்கள் என்ற வரலாறு இந்த உடுமலைக்கு உண்டு என்றார்.
தனது இடப்பக்கம் அமர்ந்திருந்த உடுமலையின் இன்றைய நகர மன்றத்தலைவராக இருக்கும் இசுலாமியரை சுட்டிக்காட்டினார். 1918 ஆம் ஆண்டு வரலாற்றுக்குச் சென்று பேசினார். அதாவது ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு. நீதிக்கட்சித் தலைவரை முன்மொழிந்த கான் அப்துல் ரசாக் முதல் உடுமலை நகர மன்றத் தலைவர் என்று கூறி இசுலாமியர்களுக்கும், நமக்குமான தொப்புள் கொடி உறவை சுட்டிக்காட்டினார். எஸ்.ஜே.சாதிக்பாட்சாவை மறக்க முடியுமா என்றார். மாணவர் பருவத்தில் இருந்தபோது தம்மோடு இணைந்து வந்த கனகராசன் பற்றி நினைவு கூர்ந்தார். அதே போல 1946இல் பூளவாடியில் உடுமலை நாராயணகவி தம் போன்ற மாணவர்களை அழைத்து விருந்து வைத்ததை மலர்ந்த முகத்துடன் நினைவுகூர்ந்தார். போதுமென்று எண்ணி பேசலாம் என்பதற்குள் தாரை மணி நினைவுக்கு வருகிறார் என்றார். “அதைவிட முக்கியம் எனக்கு, பார்ப் பனராகவே இருந்தும் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுடைய நிலையை அறிவியல்பூர்வமாக எழுதிய வரலாற்று பேராசி ரியர்களுக்கெல்லாம் பேராசிரியர் – மறைந்தும் மறையாமல் இருக்கும் என். சுப்பிரமணியம் அவர்கள் இங்கேதான் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். கனியூர் மதி குடும்பத்தை மறக்கவே முடியாது” என்றார். அதே போல எங்களுடைய நீதியரசர் மோகன் அவர்கள் இந்த நகரம் தந்து – உச்சநீதிமன்றம் வரை சென்ற கருப்புச்சட்டைக்காரர். அவரை என்றைக்குமே மறக்க முடியாது என்றார். ஆகவே உடுமலைக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. காலந்தாழ்ந்து வந்தாலும் உங்கள் ஆர்வத்திற்கு ஏமாற்றம் அளிக்க விரும்பவில்லை என்று ஒருவழியாக நினைவு கூறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து கூட்டத்தின் நோக்கத்திற்கு வந்தார்.
என்ன செய்தது ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கேட்டீர் களேயானால் என்று தொடங்கி, இதோ பெருந்தலைவர் மகாலட்சுமி உட்கார்ந்திருக்காங்க; இந்த பக்கம் பார்த் தீங்கன்னா சிறுபான்மையைச் சேர்ந்த நகர மன்றத் தலைவர்; திராவிட மாடல் ஆட்சிக்கு வேற எடுத்துக்காட்டு வேற என்ன வேணும்? இதுதாங்க திராவிடர் இயக்கம் செய்த சாதனை! என்று சொன்னதும் விசிலும், கைதட்டலும் ஒருங்கே எழுந்து அடங்கியது.பெண்கள் அதிகளவில் உட்கார்ந்திருந்ததால், அதுதொடர்பாகவும் ஆண், பெண் பேதத்தை ஆண்களும் ஆராவாரித்து கொண்டாடும்படியாக நகைச்சுவையாகச் சொன்னார். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகின்ற முதல மைச்சர் பெயரை ஆசிரியர் குறிப்பிட்டுப் பேசியதும் ஆரவாரம் மிகுந்தது. ஆசிரியரின் உற்சாகமும்தான்! சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், சேதுசமுத்திரத்திட்டம் ஆகியவற்றையும் மோடி வித்தைகளையும் அதே உற்சாகத் துடன் நகைச்சுவை கலந்து சொல்லி, மக்களை மலைக்க வைத்துவிட்டார். ஆசிரியர் உரையைக் கேட்டு மகிழந்து கொண்டிருந்தவர்களில் சிலர், ஏப்பா 90 வயசுக்காரர் பேசறமாதிரியா பேசறாரு? என்று வியப்படைந்து போயினர். இந்த கூட்டத்தின் நோக்கம் ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கைகளாக மாறவேண்டும் என்று வேணுகோள்விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். ஒட்டுமொத்ததில் உடு மலைப்பேட்டை கூட்டம் ஆசிரியரை மகிழ்வித்த உற்சாகக் கோட்டையாக மாறிப்போனது.
இந்த பரப்புரை கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், தி.மு.க.நகர செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட தி.மு.க.பொருளாளர் முபாரக் அலி, உடுமலை நகர்மன்றத்தலைவர் மர்தீன்,கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மெய்ஞானமூர்த்தி, பொதுக்குழு உறுப் பினர் பாபு, காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினர் கிட்டுச்சாமி, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரவி, ம.தி.மு.க.நகர செயலாளர் இராமதாஸ், ம.ம.க.மாவட்ட தலைவர் அப்துல்கயூம், வி.சி.க.மாவட்ட செயலாளர் சதீஷ், வி.சி.க.நகர செயலாளர் ரவி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ஈழவேந்தன், தி.வி.க.அமைப்பாளர் இயல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் கலையரசன் நன்றி கூறினார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு உடுமலை நகரத் திற்கு வருகை தந்ததால் கழகத் தலைவருக்கு பிரம்மாண்ட முறையில் வாணவேடிக்கை முழங்கியும் பயனாடைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியார் 1000 வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற உடுமலைப்பேட்டை லூர்து மாதா மெட்ரிக் பள்ளியின் மாணவிகள் எஸ்.நேத்ரா, எஸ்.ஹம்சினி, ஜெ.சம்யுக்தா, எஸ்.ரிது சிறீ, எஸ்.காணாசிறீ ஆகியோர்க்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.