சென்னை, பிப். 8- தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்தமழையால் நீரில் மூழ்கி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 6.2.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வங்கக்கடல், மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த ஜன. 29ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ் நாட்டில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங் களில் கனமழை பெய்துள்ளது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழைநீர் சூழ்ந்து, சேதம் ஏற்பட் டுள்ளது.
பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்ட டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேளாண் துறை அமைச்சர், உணவுத் துறை அமைச்சர், மூத்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவும், விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்ட றியவும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கன மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தனர்.
விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து, கன மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதற்கிடையே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் விதிமுறைகளில் உரிய தளர்வுகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கேட்டுக் கொண் டார்.
இந்த நிலையில், மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் நேற்று முன்தினம் (6.2.2023) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி கூறியதுடன், அதுதொடர்பான அறிக்கையையும் வழங்கினர்.
அமைச்சர்களின் கருத்துகள், அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகுப்பை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.