காதலர் தினத்தைத் திசை திருப்ப ‘கோமாதா காதலா?’

2 Min Read

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாளை  ‘Cow Hug Day’, அதாவது  பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாட வேண்டும் என ஒன்றிய அரசின்   விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பசுவைக் கட்டிப் பிடித் தால் உணர்ச்சிப் பெருக்கு அதிகரித்து மகிழ்ச்சி பொங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக விலங்குகள் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய கலாச்சாரம், கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றின் முதுகெலும்பாகப் பசு உள்ளது. மேலும் நமது வாழ்க்கையைத் தாங்கும் வகையில் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. இதனை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.  மாடுகள் மனிதர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிப்பதோடு, தாயை போல் ஊட்டமளிக்கும் பணியை ‛’கோமாதா’ எனும் பசு மேற்கொண்டு வருகிறது.

மேற்கத்திய கலாச்சார தாக்கத்தால் வேதமரபுகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய கலாச்சாரத்தால் நமது கலாச்சாரம், பாரம்பரியம் என்பவை மறக்கடிக்கப்பட்டுள்ளன. பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு ஏற்படும். அதோடு நமக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். . எனவே அனைவரும் பசுக்களின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ஆம் தேதியை Cow Hug Day தினமாக கொண்டாட வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அப்பொழுதெல்லாம் சங்பரிவார்க் காவிக் கூட்டம் கடும் எதிர்ப்பைக் காட்டும்.

கடற்கரை போன்ற பகுதிகளில் காதலர்கள் அமர்ந்துபேசிக் கொண்டிருந்தால் அங்கு சென்று அவர்களுக்குப் பல்வேறு வகைகளில் தொல்லை கொடுப்பார்கள். அதைவிடப் பெருங் கொடுமை, கையில் தாலிக் கயிறைக் எடுத்துச் சென்று கட்டாயமாக தாலி கட்டவும் செய்வார்கள்.

திராவிடர் கழக இளைஞர் அணித் தோழர்கள் அந்த நாளில் வலம் வந்து காதல் இணையர்களுக்கு இடையூறு செய்யும் காவிகளை விரட்டி அடித்ததும் உண்டு.

காதலர் தினத்தைத் திசை திருப்பவே பசு மாட்டோடு காதல் கொள்ளுமாறு அதாவது கட்டி அணைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பசுக்களில் பல வகை உண்டு; உம்பளச்சேரி பசுவைக் கட்டி அணைக்க சென்றால் அவ்வளவு தான் –  கட்டி அணைப்பவன் சாவூருக்குச் செல்ல வேண்டியதுதான் – ஏன் இந்தச் சங்பரிவார்களுக்கு இந்த மிருகப் புத்தி. மனிதர்களுக்கிடையே ஜாதியைப் பிரித்துப் பிளவுபடுத்தியதுபோல் மாடுகளில் எருமை மாட்டை சூத்திர, பஞ்சம ஜாதியில் சேர்த்து விட்டார்களோ!

‘காதல் என்பது உயிர் இயற்கை – அது கட்டில் அகப்படும் தன்மையதோ!” என்றாரே புரட்சிக் கவிஞர்.

மனிதன் மனிதனாக இருக்கட்டும் – மாடாக மாற வேண்டாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *