கோவை,பிப்.13 ஆளுநர் நியமனம் என்பது அரசியல் நியமனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நேற்று (12.2.2023) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜார்க்கண்ட் மாநில ஆளு நராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆளுநர்களாக நியமனம் என்பது அரசியல் நியமனங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சி.பி.ராதாகிருஷ்ணனின் நியமனம் புதிதல்ல. ஏற்கெனவே இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆளுநர்கள் ஒன்றிய அரசினுடைய பிரதிநிதிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆளுநர்களா? என்பதே இன்றைக்கு கேள்விக்குறியா கிறது. அவர்களை ஆளுநர் என்று சொல்லலாமா? மேலும் ஆளுநர் மாளிகைகள் ஒன்றிய அரசை கையில் வைத்திருக்கின்ற பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் மய்யங்களாக செயல்படுவதையும் நாம் பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, 6 பேரை ஆளுநர்களாக நியமித்தும் 7 ஆளுநர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். இதில் கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு பாஜகவின் மேனாள் மாநிலத் தலைவரும், தேசிய செய லாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஏற்கெனவே ஆளுநர்களாக இருந்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.