கோமாதாவைக் கொண்டாடுவோரே!
அந்த கோமாதா (பசு)பற்றி விவேகானந்தர் என்ன கூறுகிறார்?
– நமது சிறப்புச் செய்தியாளர் –
சென்னை, பிப்.15 காதலர் தினத்தைக் கொண்டாடாதீர்; அதற்குப் பதில் கோமாதாவை (பசுவை) கட்டித் தழுவுங்கள் என்று ஒன்றிய அரசின் விலங்கு நலத் துறை உத்தரவிட்டது. கடும் எதிர்ப்பிற்குப் பின் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தப் பசுவைப்பற்றி விவேகானந்தர் என்ன கூறுகிறார் என்பதைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியதாவது:
”நரேந்திர பாபு (விவேகானந்தர்) போன பின்னர், பசுக்களைப் பரிபாலிக்கிற சபை ஒன்றினுக்குரிய ஊக்கமுள்ள பிரசாரகர் ஒருவர் சுவாமிஜியைக் காணும் பொருட்டு வந்தார். அவர் தம் தலையிலே காஷாயத் தலைப்பாகை அணிந்திருந்தார்; தோற்றத்தில் வடநாட்டினரைப் போலக் காணப்பட்டார். அவரது உடை ஏறக்குறையச் சந்நியாசிகளுடைய உடை போன்றிருந்தது. அந்தப் பசு பரிபாலன சபைப் பிரசாரகர் வந்தார் என்று கேள்விப்பட்டதும், சுவாமிஜி சாலை அறைக்கு வந்தார். பிரசாரகர் சுவாமிஜியை வணங்கிப் பசுத்தாயினுடைய படம் ஒன்றினைச் சுவாமிஜிக்குக் கொடுத்தார். அருகில் நின்ற ஒருவர் படத்தைப் பெற்று, சுவாமிஜி கையில் கொடுத்த பின்னர், பின்வரும் சம்பாஷணை நிகழ்ந்தது.
சுவாமி: உங்களுடைய சங்கத்தின் நோக்கம் என்ன?
பிரசாரகர்: நமது நாட்டிலுள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்களும் வலுவிழந்தனவும் கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப் பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்திய சாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.
சுவாமி: அது மிக நல்லது. உங்கள் வருவாய்க்கு வழி என்ன?
பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரிய மனிதர் அன்போடு கொடுக்கின்ற நன்கொடைகளைக் கொண்டே சபையின் வேலை நடந்து வருகின்றது.
சுவாமி: இப்பொழுது எவ்வளவு பணம் சேர்த்து வைத் திருக்கிறீர்கள்?
பிரசாரகர்: இந்த முயற்சிக்கு மார்வாடி வணிகர் கூட்டம் சிறந்த உதவி புரிகின்றது. இந்த நன்முயற்சிக்காக அவர்கள் பெருந்தொகை கொடுத்திருக்கின்றார்கள்.
சுவாமி: மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத்தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா?
மக்களுக்கு இரங்கோம்; மாடுகளுக்கே இரங்குவோம்
பிரசாரகர்: பஞ்சம் முதலிய துன்பம் வரும்பொழுது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத்தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது.
சுவாமி: உங்களுடைய சொந்தச் சகோதர சகோதரிகளாகிய லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தினால் துன்பம் அடைந்து மரணத்தின் வாயில் விழும்பொழுது அவர்களுக்கு எவ்வழி யிலாவது உணவளித்துக் காப்பாற்ற வேண்டுவது உங்கள் கடமை என நீங்கள் நினைக்கவில்லையா?
பிரசாரகர்: இல்லை. இந்தப் பஞ்சம் மக்களுடைய பாவகருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே.
பிரசாரகர் இந்த வார்த்தைகளைக் கூற, இவற்றைக் கேட்டுச் சுவாமிஜியினுடைய கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறப்பது போன்றிருந்தது; முகம் சிவந்தது. அவர் தம் சினத்தை அடக்கிக் கொண்டு, பின்வருமாறு சொல்லுவராயினார்:
”தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு பிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவை களுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடைகிறதென நான் எண்ணவில்லை. மனிதர் தம் கருமத்தினால் இறக்கின்றனரென்று நீர் வாதிப்பீராயின், இவ்வுலகத்திலே எதைக் கருதியும் முயல வேண்டுவதில்லை என்பது தீர்மானமாகின்றது. விலங்குகளைப் பரிபாலிப்பதற்காக நீர் செய்கிற வேலையும் இவ் விதிக்குப் புறம்பாகாது. பசுத்தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்காரர்களுடைய கையிலகப்பட்டு இறக்கின்றன வென்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்கலாமே?”
பிரசாரகர் சிறிது நாணி, ”ஆம், நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லு கின்றனவே?” என்றார்.
சுவாமிஜி நகைத்துக் கொண்டே, ”ஆம், பசு நம் அன்னை என்பதை நான் அறிந்து கொண்டேன்; இத்தகைய புத்திசாலி களான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்!” என்றார்.
(நூல்: ”சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை”, பக்கம் 5, 7).
ஸநாதன தர்மம் என்றால் என்ன?
காசிப்பிரதான ஹிந்து வித்தியாசாலைக் கமிட்டியாரால் 1907 ஆம் ஆண்டு பிரசுரஞ் செய்யப்பட்ட ”ஸநாதன தர்மம்” என்ற நூலிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டிய பகுதி).
ஸநாதன தர்மம் முதலாம் பாகம் பிரவேசம்
ஸநாதன தர்மம் என்றால் நித்தியமான மதம் அல்லது புராதன விதி என்று பொருள்படும். இது வெகுகாலங்களுக்குமுன் மானிடர்க்களிக்கப்பட்ட புண்ணிய புஸ்தகங்களான வேதங்களை யாதாரமாகக் கொண்டது. இந்த மதத்திற்கு ஆரிய மதம் என்ற பெயரும் இடப்பட்டிருக்கின்றது. ஏனெனில், ஆரிய மகாஜாதியாருள் முதலாம் வகுப்பாருக்கு இம்மதம் கொடுக்கப் பட்டது. ‘ஆரிய’ என்னும் பதத்திற்கு மேன்மை பொருந்திய என்று அருத்தம். இவ்வுலகில் பூர்வகாலங்களில் வசித்துச் சென்ற ஜாதியார்களைக் காட்டிலும் ஒழுக்கம், ரூபம், இவற்றிற் சிறந்த ஒரு மகாஜாதியாருக்கு இந்த ‘ஆரிய’ என்னும் பெயரிடப்பட்டது. இவ்வாரிய மகாஜாதியாரின் முதல் குடும்பங்கள் இப்பொழுது இந்தியாவென்று கூறப்படுமிந்நாட்டின் வடபாகத்தில் குடி யேறினார்கள். அவ்விதமவர்கள் முதலில் குடியேறின நாட்டிற்கு ‘ஆரிய வர்த்தம்’ என்ற பெயரிடப்பட்டது.
”கிழக்கு மேற்குச் சமுத்திரங்கட்கும் ஹிமாலயம் விந்திய மாகிய இவ்விரண்டுபர்வதங்கட்கும் மத்தியிலுள்ள பூமியை ஆரியாவர்த்தம் எனக் கூறுவர் பெரியோர்.”
அக்காலத்திற்குப் பிறகு இம்மதம் ஹிந்து மதம் என்னும் பெயரடைந்தது. இப்பெயராலேயே தற்காலம் அது வழக்கமாய்க் குறிப்பிடப்படுகின்றது. இவ்வுலகில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் சர்வ மதங்களிலும் இதுவே பிராசீனமானது. இதுபோல் வேறெந்த மதமும் இவ்வளவு கணக்கற்ற உத்தம ஆசாரியர்கள், கிரந்தகர்த்தர்கள், ஞானிகள், பக்தர்கள், சான்றோர்கள், அரசர்கள், யுக்தவீரர்கள், ராஜதந்திரிகள், லோகோபகாரிகள், தேசாபி மானிகள் ஆகிய இவர்களை யுண்டு பண்ணினதில்லை. இம் மதத்தைப்பற்றி எவ்வளவுக்கு அதிகமாய் நீங்கள் தெரிந்து கொள்வீர்களோ அவ்வளவுக்கு இதில் விசேஷ அன்பும், கவுரவமும் உங்களுக்குண்டாகும். நீங்கள் இதில் ஜனன மடைந்ததற்குச் சந்தோஷமடைவீர்கள். ஆனால், நீங்கள் அதற்குத் தக்கபடி ஒழுகி, நாளடைவில் உங்களை சீர்திருத்திக் கொள்ளாவிடில், இவ்வுயர்ந்த மதத்தால் உங்களுக்கு விசேஷப் பிரயோசனம் கிடையாது.”
இந்து மதத்திற்கு ஆரிய மதம் என்ற பெயருண்டு என்றும், இந்தியாவின் வட பாகத்தில் குடியேறியவர்கள்தான் ஆரியர்கள் என்றும் ஒப்புக்கொண்டுவிட்டனர் என்பதையும் கழகத் தலைவர் இதன்மூலம் எடுத்துக் காட்டி உறுதிப்படுத்தினார்.