அடுத்ததாக அண்ணல் அம்பேத்கர் குறித்து பாடம் எடுக்கத் தொடங்கி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் ‘அம்பேத்கர் பற்றி பலரும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டுமே அனைவரும் பேசுகின்றனர். அரசியலுக்காக மட்டும் பயன்படுத் துகின்றனர்” என்று வருத்தப்பட்டு இருக்கிறார் ஆளுநர். அம்பேத்கரை முழுமையாக அவர் அறிந்திருக்கிறாரா என்பதை அவர் உரை மூலமாக அறிய முடியவில்லை. அம்பேத்கரை அறிய வேண்டுமானால் கீழ்க்கண்ட அவரது புத்தகங் களை பரிந்துரை செய்கிறோம்,
1. Castes in India
2.The Annihilation of caste.
3. Ranade, Gandhi and Jinnah
4. Mr. Gandhi and Emancipation of Untouchables
5. What Congress and Gandhi have done to the Untouchables
6.State and Minorities.
7. Who were the Shudras
8. The Untouchables
9. Riddles in Hinduism
10. Manu and the Shudras
ஆளுநருக்கு அண்ணல் அம்பேத்கரையும் தெரியவில்லை, பிரதமர் மோடியையும் தெரிய வில்லை. சட்ட அமைச்சர் பதவியில் இருந்து விலகும்போது ஆற்றிய உரையில் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டார்கள்
“இந்து மதத்தின் ஆன்மாவான வகுப்புகளுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வையும், பாலினங் களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வையும் அப் படியே விட்டு விட்டுப் பொருளாதாரப் பிரச் சினைகள் குறித்த சட்டங்களை உருவாக்கிக் கொண்டே செல்வது என்பது. நம்முடைய அரசிய லமைப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கி விடும். இது சாணக்குவியலுக்கு மேலே மாளிகையைக் கட்டுவதைப் போன்று ஆகிவிடும்” என்று குறிப்பிட்டார்கள். இரத்த பேதம், பால் பேதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் ஜி.எஸ்.டி.யில் வரி வசூலாவது நாளுக்குநாள் கூடிவருகிறது. வங்கிகளில் கணக்குத் தொடங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்று பேசும் பா.ஜ.க. கூட்டத்தின் பிரதிநிதியான ஆளுநர், தமிழ்நாட்டுக்கு வந்து அம் பேத்கர் பாடம் எடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
இவர்க்கு ஏன் திடீரென அம்பேத்கர் பாசம்? வேறொன்றுமில்லை. ‘சமூக நீதி’ என்ற சொல் அவருக்கு எரிச்சலைத் தருகிறது. அதனால் ‘சமூகநீதி’ யைக் குற்றம் சாட்ட அம்பேத்கரை போர் வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் ஆளுநர்.
தமிழ்நாட்டில் ஜாதித் தீண்டாமை தாண்டவம் ஆடுகிறதாம். ஆனாலும் நாம் சமூகநீதி பேசுகிறோமாம். குற்றம் சாட்டுகிறார் “சனாதனம்’ பேசும் ஆளுநர். சனாதனம் என்பது தமிழ்நாட்டில் தான் தோன்றியது என்று சொன்னவர் ஆச்சே அவர்!
இதுதான் சமூகநீதியா. இதுதான் சமூகநீதியா என்று ஏதோ சமூகநீதிப் போராளியைப் போல ஆளுநர் கேட்கிறார். சமீபத்திய உதாரணங் களையே சொல்கிறோம்…
புதுக்கோட்டைமாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள், கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கேள்விப் பட்டதும் அவர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவும், காவல்துறை கண்காணிப்பாளர் வந்தி தாவும். அப்படி அழைத்துச் சென்றால் ஊர்க்குத்தம் ஆகிவிடும் என்று ஒரு பெண் ஆட்டம் செய்து தடுக்கிறார். உடனடியாக அவரைக் கைது செய்ய உத்தரவு போடுகிறார்கள் ஆட்சியரும். எஸ்.பி.யும் வன்கொடுமைச் சட்டமும் பாய்கிறது அதன்பிறகு பட்டியலின மக்கள் அனைவரும் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் சமூகநீதியாகும்!
தென்காசி மாவட்டம் – பாஞ்சாக்குளம் கிராமத்துக் கடையில் பட்டியலின குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பொருள்கள் தரப்படவில்லை என்ற செய்தி கிடைக்கிறது. உடனே சங்கரன் கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி அங்கு சென்று விசாரணை நடத்துகிறார். வருவாய்த் துறை விசாரணை செய்து, அந்தக் கடைக்கு சீல் வைக்கப் படுகிறது. தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். இதுதான் தமிழ்நாட்டின் சமூகநீதியாகும்!
சேலம் மாவட்டம் – திருமலைகிரி கிராமத்து கோவிலுக்குள்நுழைந்த பட்டியலின இளைஞரை ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் கடுமை யாகத் திட்டினார். உடனடியாக அவர் கைது செய் யப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் சமூகநீதி!
தென் முடியனூர் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல 80 ஆண்டுகளாக அனுமதிக்கப் படவில்லை, பட்டியலின மக்கள் 200 பேரை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ். மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் ஆகியோர் சென்றார்கள். “எங்கள் கனவு நிறைவேறியது என்று அம்மக்கள் சொன்னார்கள். இதுதான் சமூகநீதி!
வேங்கைவயல் கிராமத்து குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் ஜாதி வன்மம் மட்டுமல்ல. வேறு சில சதிச் செயல்களும் இருக்கின்றன. இதனை சி.பி.சி.அய்.டி. காவல் துறை விசாரித்துக் கொண்டு இருக்கிறது. உண்மைக் குற்றவாளிகள் விரைவில் பிடிபட இருக்கிறார்கள்.
இதுதான் சமூகநீதியின் ஆட்சியாகும். திராவிட மாடல் ஆட்சியாகும். வன்மத்துடன் ஜாதீயம் தலைதூக்கினால், அதனை உடனடியாகத் தடுத்து நடவடிக்கை எடுக்கும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதைப் பாராட்ட மனம் இல்லாமல் ஓரவஞ்சனையாக ‘சமூகநீதி மீது பாய்ந்திருக்கிறார் ஆளுநர்.
ஆளுநர் அவர்களே! ‘நாகர்கள், திராவிடர்கள் இரண்டும் ஒரே பெயர்கள்கள்தான். ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் திராவிடர்கள் பரவி இருந்தார்கள்’ என்று சொன்னவரும் அண்ணல் அம்பேத்கர் என்பதை அறிவீர்களா?
– முரசொலி தலையங்கம், 15.2.2023