வீராங்கனை சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா!

Viduthalai
2 Min Read

திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்!

ஆசிரியர் அறிக்கை

திராவிட இயக்கத்தில் சிறுவயது முதற்கொண்டே ஈடுபட்டு மாநில அமைச்சராக – ஒன்றிய அமைச்சராக இருந்த திருமதி.சத்தியவாணி முத்து அம்மையார் நூற்றாண்டு பிறந்த நாளாகிய இன்று (15.2.2023)  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

திராவிட இயக்க வீராங்கனைகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர் திருமதி சத்தியவாணி முத்து ஆவார்.

இவரது தந்தையார் நாகை நாதன் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டவர். ஆதலால் சிறு வயது முதற்கொண்டே சத்தியவாணி முத்து அவர்கள், தந்தை பெரியார் கொள்கையிலும், திராவிட இயக்கத்திலும் பற்றுக் கொண்டவரானார்.

தி.மு.க.வில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக வும் இருந்துள்ளார். 1957 சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்ற 15 தி.மு.க.வினரில் சத்தியவாணி முத்து அவர்களும் ஒருவராவார். 

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கு கொண்டவர்.

குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் இவர் ஈடுபட்டபோது நிறைமாத கர்ப்பிணியாவார்.

தி.மு.க. ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றினார்; பிறகு ஒன்றிய அமைச்சராகவும் இருந்தார்.

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவாக, முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, ‘‘தமிழ்நாடு அரசு இலவச தையல் இயந்திரங் களை ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள், கைவிடப்பட்ட மனைவிகள், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் அரசு வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட்டது.

அவரது வாழ்விணையர் திராவிட முத்து அவர்களும் தீவிர கொள்கையாளர்.

கடைசிவரை பகுத்தறிவுக் கொள்கையில் 

உறுதியாக இருந்தார்

அவரது அரசியல் நடவடிக்கைகள்பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கலாம்; ஆனால், கடைசிவரை பகுத்தறிவு சுயமரியாதைக் கொள்கையில், திராவிட இயக்கக் கொள்கையில் உறுதியாக இருந்தார் என்பது மறுக்கப்படவே முடியாத உண்மை.

சென்னை ஏ.வி.எம். திருமண மண்டபத்தில் ஒடுக்கப்பட்டோர் சமூகத்தைச்  சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தந்தை பெரியாருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தினர். அதற்கு முக்கிய ஒருங்கிணைப் பாளராக திருமதி சத்தியவாணி முத்து இருந்தார்.

அந்த நிகழ்ச்சியில்தான் ‘‘சென்னை உயர்நீதிமன்றம் தோன்றி நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட நீதிபதியாக நியமிக்கப்படாதது ஏன்?” என்ற வினாவை எழுப்பினார் தந்தை பெரியார்.

முதல் தாழ்த்தப்பட்ட 

சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி

அதனைத் தொடர்ந்துதான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், கடலூரில் மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.ஏ.வரதராசன் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஆவன செய்தார் (பதவியேற்ற நாள் 15.2.1972.). உச்சநீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியும் அவர்தான் (10.4.1980).

வாழ்க சத்தியவாணி முத்து அம்மையார்!

இன்றைய நிலையிலும், நீதித் துறையில் சமூகநீதிக்கு இடம் இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது. போராடி அந்த உரிமையைப் பெற உறுதி ஏற்போம்!

ஜாதி, தீண்டாமை நோயை முற்றிலும் அழிப்போம்!

வாழ்க சத்தியவாணி முத்து அம்மையார்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15.2.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *