திருவண்ணாமலை, பிப். 18- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மய்யங்களில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 72,50,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் சிக்கிய நிலையில், கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பு, கொள்ளையர்கள் ஏ.டி.எம். மய்யங்களை நோட்டமிட்ட காட்சிகளும் காவல் துறைக்கு கிடைத்தன. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்த கும்பலே இந்த கொள்ளையை நிகழ்த்தியிருப்பதாகவும் காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, இந்த கும்பல், ஆந்திரப்பிரதேசம் வழியாக கருநாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் பகுதிக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை காவல்துறை, கேஜிஎஃப் பகுதியில் குற்றவாளிகளை தங்கவைத்த நபரை கைது செய்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட அரியானா மாநிலம் மேவாத் பகுதியை சேர்ந்த ஆசிப் மற்றும் ஆசாத் ஆகியோரை தனிப்படை காவ்லதுறையினர் கைது செய்துள்ளனர்.