ஆளுநர்கள், அரசியலில் தலையிடக் கூடாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
காதலர் தினத்தன்று பசுவை அரவணைத்தவர்கள், மருத்துவமனையில் இருக்கிறார்கள்!
ஓசூர், ஊற்றங்கரை பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆதாரங்களுடன் கருத்துரை!
ஓசூர், பிப்.19 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் ஓசூர், ஊற்றங்கரை பகுதி களில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் 18.02.2023 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்
சு.வனவேந்தன் தலைமை வகித்தார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் கோ.கண்மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் லதாமணி, மாவட்ட மகளிரணி தலைவர் செ.செல்வி, மாவட்ட அமைப்பாளர் முனுசாமி, ப.க. மாவட்ட செயலாளர் சிவந்தி அருணாசலம், மாநகர செயலாளர் சின்னராசு, மாநகர தலைவர் கார்த்திக், ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ப.க.தலைவர் கு.வணங்காமுடி தொடக்க உரையாற்றி னார். முன்னதாக பறைஇசை நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி உரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
சனாதன மதம் பார்ப்பனர்களுக்கானது!
தமிழர் தலைவர் தனது உரையில், “இது முழு தனிக் கூட்டமல்ல, ஆகவே, தந்தை பெரியார் காலத்திலிருந்து புத்தகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிற இயக்கம் இது! எதற்கென்றால், நாங்கள் பேசுவதற்கான ஆதாரங்கள் புத்தகங்களில்தான் உள்ளன. ஆகவே, வாங்கிப் படித்து பயன்பெறுங்கள்’’ என்று சொல்லிவிட்டு, சமூக நீதி என்றால் என்ன? என்று கேட்டு, ”பார்ப்பனர்கள் நூற்றுக்கு 3 பேராக இருந்துகொண்டு நூற்றுக்கு நூறு அனுபவித்தார்கள். இதையெல்லாம் மனதில் கொண்டு அம்பேத்கர் மிகுந்த சிரமங்களுக்கிடையே இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் மனுதர்மத்தை இந்தியாவின் சட்டமாக கொண்டு வரத் துடிக்கிறார்கள். 2024 இல் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக மனுதர்மம் இந்திய அரசமைப்புச் சட்டமாக வரும்” என்று சொல்லிவிட்டு, 1928 இல் திராவிட மாடல் ஆட்சியின் தொடக்கமாக இருந்த நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று பார்ப்பனருக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு அமலில் இருந்ததை நினைவு கூர்ந்தார். சனாதனத்தைப் பற்றி பேசி வந்தார், ஆளுநர் நினைவு வந்து, ”ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது” உச்சநீதிமன்றத் தீர்ப்பை செய்தித்தாளிலிருந்து படித்துக் காட்டினார். தொடர்ந்து சனாதனம் என்றால் என்ன? என்பது பற்றி விளக்க முனைந்தார். அதாவது, சனாதனம் என்றால், அதுவொரு மதம்தான்! ஆனால், யாருக்கு? என்று கேள்வி கேட்டு, “உங்களுக்கும், எனக்கும் இல்லை. முதலாம் வர்ணத்தாருக்கு” என்று ஹிந்து பனாரஸ் பல்கலைக்கழகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு காசி இந்து கல்லூரியாக இருந்தபோது, பி.ஏ. பாடமாக அது இருந்ததை படித்துக் காட்டினார். முதலாம் வர்ணம் என்றால் தலையில் பிறந்தவர்கள், அதாவது பார்ப்பனர்கள் என்று பளிச்சென்று விளக்கினார்.
சேது சமுத்திரத் திட்டம் மறுபடியும் வரவேண்டும்!
”2014 இல் பிரதமராக வந்த மோடி அவர்கள் கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத்தருவோம் என்பதாகும். அதை கணக்கு போட்டால் இதுவரை 9 ஆண்டுகள் ஆயிற்று. 9❌2 கோடி = 18 கோடி! இதுவரை 18 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கணும். கொடுத்திருக்கிறாரா?” என்று மக்களைப் பார்த்து கேட்டார். இல்லை என்பது போல் மக்கள் வேகமாக தலையாட்டினர். தொடர்ந்து, உலகத்தில் இருக்கும் கருப்புப் பணத்தையெல்லாம் கண்டுபிடித்து எடுத்துட்டு வருவோம், அது ஒவ்வொரு வர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என பொத்து, பொத்துன்னு விழும் என்று சொன்னார்; விழுந்ததா? என்றார். மக்கள் இல்லையென்பது போல் தலை யாட்டினர்.
கேட்டால் அமித்ஷா ‘ஜூம்லா’ (சும்மா) என்கிறார். இதுதான் குஜராத் மாடல் என்று கூறிவிட்டு, திராவிட மாடல் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உண்மை யிலேயே வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும். அதுதான் சேது சமுத்திரத்திட்டம் என்றார். கைதட்டல் பலமாகக் கேட்டது. தொடர்ந்து அதைப்பற்றி சற்று விரிவாகப் பேசினார். நீதிக்கட்சி காலத்தில் இருந்த சர்.ஏ.ராமசாமி (முதலியார்) தமிழ்நாட்டு வளத்தைப் பெருக்க சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் அறிக்கை கொடுத்ததை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து சேது சமுத்திரத் திட்ட செயலாக்கத்தில் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காட்டிய அக்கறை கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் சம்மதத்தோடு தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான ஒட்டுமொத்த திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு என்னவென்பதை எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் 2008 இல் நிறைவேறியிருக்கும், மூன்று பார்ப் பனர்களின் சூழ்ச்சியால் நின்று போனதை நினைவூட்டினார். பா.ஜ.க.வின் இரட்டை நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தினார். ”தமிழ்நாடு செழுமை பெற, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெற சேது சமுத்திரத்திட்டம் மறுபடியும் வரவேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்தப் பரப்புரை கூட்டத்தில் தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் (சி.பி.அய்), கழக அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, வி.சி.க. அமைப்புச் செயலாளர் கோவேந்தன், சி.பி.அய். மாநகர செயலாளர் சங்கரய்யா, வி.சி.க. மாவட்ட செயலாளர் மாயவன், வி.சி.க. தொகுதி செயலாளர் இராமச்சந்திரன், ம.ஜ.க. பொறுப்பாளர் நவுசாத், தி.மு.க. மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் மாதேஸ்வரன், கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன், திராவிடர் கழக மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, ப.க. எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் ம.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சின்னச்சாமி நன்றி கூறினார். அதைத் தொடர்ந்து தோழர்களின் அன்பு மழையில் நனைந்தபடியே ஓசூரிலிருந்து 100 கி.மீ தூரமுள்ள ஊற்றங்கரைக்கு பயணக்குழுவுடன் புறப்பட்டார்.
ஊற்றங்கரையில் தமிழர் தலைவர்!
ஊற்றங்கரையில் கழகக் கொடிகள், தொடர் வண்ண விளக்குகள், பதாகைகள் என்று ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அங்கே பெரியார் சிலை அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அறிவரசன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் பொன்முடி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் மாணிக்கம், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பி.கலைவாணன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி.கருணாநிதி, மாவட்ட துணை தலைவர் வண்டி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக கொடியினை ஏற்றி வைத்து மண்டல தலைவர் பழ.பிரபு உரை நிகழ்த்திட திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பெண்கள் பாலியல் உரிமை கோரும் மாநாடு!
தமிழர் தலைவர் தனது உரையில், “இது 27 ஆவது கூட்டம் என்று கருதுகிறேன். கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்கும் உங்களுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, இங்கே மாவட்ட செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றிய பழனியப்பன் காலத்தில் தான் பெண்கள் பாலியல் உரிமை கோரும் மாநாடு நடைபெற்றது. பிறகு காங்கிரஸ்காரராக இருந்து பின்னர் நம்முடன் இணைந்த பெருமாள் (ரெட்டியார்) ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர் என்று பழைய நினைவுகளில் மூழ்கி விட்டு, எடுத்த எடுப்பிலேயே சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். அவர் பொதுவாக சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம் என்பதைப் பேசிவிட்டு சேது சமுத்திரத்திட்டம் பற்றி பேசுவதை வரையறையாக வைத்துக்கொண்டிருந்தார். ஆனால், இளைஞர்களின் வேலை வாய்ப்போடு தொடர்புடையது என்பதால், அதற்கான முக்கியத்துவம் கூடிக்கொண்டே வந்தது. எனவே, அதை இன்று முதலில் பேசினார்.
கல்வி தொடர்பாக பேசவந்தவர் அதனோடு தொடர்புடைய ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு பற்றி பேசினார். 100 ஆண்டுகளாக திராவிடர் இயக்கம் பாடுபட்டதில் கற்றோரின் எண்ணிக்கை 70% க்கும் மேல் இருப்பதாகவும், ஒரு பக்கம் படிப்பைத் தடுக்கவும், இன்னொரு பக்கம் பண்பாட்டுத் திணிப்புக்கும் சதிச் செயல் நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.
ஒரே ஜாதி! ஒரே சுடுகாடு வருமா?
மேலும் அவர், ”சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது ஒரே ஜாதியாக மாற்ற முயலவில்லை, ஒரே சுடுகாடு இல்லை? சுடுகாட்டுக்கு போவதற்கும் பல இடங்களில் பாதை இல்லை. இதையெல்லாம் விட்டு விட்டு ஒன்றிய அரசு என்ன செய்கிறது? பிப்.14 காதலர் தினத்தில் விலங்குகள் நல வாரியம் பசு அரவணைப்பு தினம் கொண்டாடச் சொல்கிறது. இது அரசமைப்புச் சட்ட விரோதம்” எனக் கண்டித்தார். அப்படியே பசுவை அரவணைக்கச் சென்ற பலரும் மருத்துவமனையில் இருக்கின்றனர் என்பதைச் சொன்னதும், சமூக ஊட கங்களில் அவர்களும் பார்த்திருந்ததால், மக்களிடையே வெடிச்சிரிப்பு எழுந்தது.
அடுத்து ஒரு முக்கியமான கருத்தை வலியுறுத்திச் சொன்னார். அதாவது, “இறையாண்மையுள்ள, சமத் துவமான, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு இந்த அய்ந்தும்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக் கட்டுமானங்கள். இதை எந்த அரசாலும் திருத்தவோ, மாற்றவோ முடியாது. அப்படியிருக்கையில், பா.ஜ.க. அரசு இந்த அடிக்கட்டுமானத்தையே செல்லரிக்கச் செய்து கொண்டிருக்கிறது” என்று குற்றம் சுமத்தினார். அதைவிட இன்னும் ஒரு படி மேலே சென்று மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாகக் கொண்டு வரவும் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி எச்சரிக்கை மணியடித்தார். தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சி பற்றியும், பா.ஜ.க. எவ்வளவோ முயன்றும் தமிழ்நாட்டில் அது வெற்றி பெற முடியவில்லை என்பதை காங்கிரஸ் கட்சியின் முகமாக இருக்கும் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் மோடியைப் பார்த்தே கூறியதையும் நினைவுபடுத்தினார். திராவிட மாடலின் ஒரு கூறான தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை புள்ளி விவரங்களுடன் கூறி, இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதை விவரித்தார். இதெல்லாம் கல்விக் கடவுள் சரஸ்வதியால் வந்ததா? சத்யசாயி கையை ஆட்டியதால் பொத்துன்னு விழுந்ததா? இல்லை இன்றைக்கு (18.02.2023) சிவராத்திரியில் அப்படியும், இப்படியும் ஆடுகிறாரே அவரால் வந்ததா? என்று கேள்விகளை அடுக்கினார். மக்களுக்கு கோபம் வரவில்லை மாறாக குபீரென்று சிரித்தனர். அந்த இடைவெளியில் ஆசிரியர், திராவிடர் இயக்கத்தால் வந்தது! தந்தை பெரியாரால் வந்தது என்றதும் மக்கள் உணர்வு வயப்பட்டு பலமாக கையொலி செய்தனர்.
இறுதியாக சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியம் பற்றியும், அதற்காக திராவிடர் இயக்கம் 100 ஆண்டு களாக என்னென்ன முயற்சிகள் செய்துள்ளது என்பதைப் பற்றியும் விவரித்து, வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு என்று கூறி உரையை நிறைவு செய்தார். பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளில் ஈரோட்டில் தொடங்கிய இந்த பரப்புரைப் பெரும் பயணம் நான்கு கட்டங்களாக 29 நாள்கள் நடைபெறக்கூடிய வகையில் திட்டமிடப் பட்டிருந்தது. 18.02.2023 அன்று 14 நாள்களையும் 27 கூட்டங்களையும் நிறைவு செய்துள்ளது.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்தப் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், தி.மு.க. பேரூராட்சி தலைவர் அமானுல்லா, தி.மு.க. அவைத்தலைவர் தணிகை குமார், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வி.சி.க. மாநில பொறுப்பாளர் அசோகன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் மகாலிங்கம், சி.பி.அய். மாவட்ட குழு உறுப்பினர் சேகர், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், கழக மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ப.க. கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரைப் பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
புற்று நோய் வந்த யானை இந்தியா?
“என்ன செஞ்சிட்டாரு பெரியார்? என்று நீங்கள் கேட்கலாம். ஜெயரி கோஷ் என்ற பொருளாதார பேராசிரியர். ஜே.என்.யூ.வில் நீண்ட காலம் பணியாற்றிய பேராசிரியர், அய்க்கிய நாடுகள் சபையில் எல்லா நாடுகளைப் பற்றியும் ஆய்வு செய்கிறார். இப்போது அமெரிக்காவில் பணியாற்று கிறார். அப்படிப்பட்டவர் சென்னை அண்ணா நூலகத்திற்கு வந்திருந்தார். அவரிடம் செய்தியாளர், இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர், “இந்தியா யானை பலத்துடன் இருக்கிறது.” என்றார்.
முழுவதும் கேளுங்கள்.
“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 90% உயர்ஜாதி வகுப்பினரிடம் இருக்கிறது..10% ஏழை நடுத்தர மக்களிடம் இருக்கிறது என்று சொல்லியிருக்காங்க. அதனுடைய உட்பொருளையும் அவரே விளக்குகிறார். “இந்தியாவின் பொருளாதாரம் யானையைப் போல் இருக்கிறது. ஆனால் அந்த யானை புற்றுநோய் வந்த யானையைப் போல் இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.
இன்னும் முடியவில்லை. “நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று அடுத்த கேள்வி கேட்கப்படுகிறது. அவர், “இந்தியாவில் இன்னும் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கிறது என்பதை இரண்டு மாநிலங்கள் சொல்கின்றன. ஒன்று தமிழ்நாடு! மற்றொன்று கேரளா! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது. தமிழ்நாடுதான் 4,500 பொது நூலகங்களை கொண்டுள்ளது” என்று கூறியிருக்கிறார். இப்போது தமிழ்நாட்டில், ‘எனக்குக் கிடைக்காத கல்வி என் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்காத பெற்றோர் உண்டா?’ இந்த சூழலை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை! ஆனாலும், தலைமுறை தலைமுறையாக பார்ப் பனர்கள் படிக்கின்றனர். பார்ப்பான் 10% இடஒதுக்கீடு வேணுங்கிறான். நம்மாளு முதல் தலைமுறையாக படிக்கிறான். எதுக்கு இந்த இடஒதுக்கீடு அப்பிடிங்கிறான். இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல, பிச்சை யல்ல, பிறப்புரிமை!
– சே.மெ.மதிவதனி
திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்
ஒசூர், 18.02.2023