’திராவிட தத்துவம் என்பது, யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இதுதான் நம்முடைய பண்பாடு. நமக்குள் பிரிவினை கிடையாது. ஆரியர்கள் உள்ளே நுழைந்தபோது, மனுதர்மத்தோடு வந்து இந்த பிரிவினைகளை ஏற்படுத்தினார்கள் என்று கூறிவிட்டு, அசல் மனுதர்மம் புத்தகத்திலிருந்து, 87 ஆம் சுலோகத்தை, நன்றாக கவனியுங்கள் என்று கூறியபடி, “அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்குமான கர்மங்களை தனித்தனியே பகுத்தார்கள்.” என்று படித்துக் காட்டினார்.
தொடர்ந்து, ‘நானும் எத்தனையோ நாடுகளில் பிரசவம் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் இருப்பதைப் போன்று, முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளிலிருந்து குழந்தை பிறந்ததை பார்த்ததே இல்லை’ என்று நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் நாயர் அவர்கள் சென்னையில் பேசிய, ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். (மக்கள் சிரிக்கின்றனர்)
அதே போல, பெரியார் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தாழ்த்தப்பட்ட தோழர், “அய்யா, தலையில, தோளில், தொடையில், காலில் என்று பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகியோர் பிறந்ததாகச் சொன்னீர்கள். நான் தாழ்த்தப்பட்டவன். நாங்க எங்க பொறந்தோமுன்னு சொல்லவே இல்லையே” என்று கேட்டார். அதற்கு பெரியார், “நீங்கதான் அப்பா, அம்மாவுக்கு முறையா பிறக்க வேண்டிய முறையில் பொறந்தவங்க” என்று பதில் சொன்னதையும், ஆசிரியர் குறிப்பிட்டார். (மக்கள் கை தட்டியபடியே வெடித்து சிரிக்கின்றனர்)
– தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
நிலக்கோட்டை, 7-02-2023