🔅 வடமாநிலத்தவர்களின் அதிக வருகை – கவனிக்கத்தக்கது
🔅 தனிப்பட்ட இருவரின் சண்டை இரு குழுக்களாகப் பிரிந்து கலவரமாக மாறுவது- வழக்கமாகிவிட்டது
🔅 காவல்துறை கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி!
கிருஷ்ணகிரி, பிப்.19 வடமாநிலத்தவர்களின் அதிக வருகை கவனிக்கத்தக்கது; தனிப்பட்ட இருவரின் சண்டை இரு குழுக்களாகப் பிரிந்து கலவரமாக மாறுவது வழக்கமாகிவிட்டது காவல்துறை கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
நேற்று (18.2.2023) சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க கிருஷ்ணகிரி சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
நாகரசம்பட்டியில் ஒரு கொலை!
செய்தியாளர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாகரசம்பட்டி என்ற இடத்தில், ராணுவ வீரரைத் தாக்கி கொலை செய்ததாக, தி.மு.க.வினர்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: பிடிபட்டவர்களின்மீது நடவடிக்கைகளை எடுப்பதைக் கண்காணிக்கவேண்டியது அரசினுடைய இயல்பான கடமை. அதன்படி காவல்துறை நடவடிக்கை எடுத்து விசாரணை செய்வார்கள்.
அதிலும் குறிப்பாக, நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, அம்மாவட்டங்களின் ஆட்சியர்களோடு கலந்தாலோசித்து வருகிறார்.
காவல் நிலையத்திற்கே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் இவர் ஒருவராகத்தான் இருப்பாரே தவிர, வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தயவு தாட்சண்யமின்றி, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில், சொந்தக்கட்சியா, எதிர்க்கட்சியா என்று பார்ப்பது இல்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வேறு குற்றம் சொல்வதற்கு, அரசியல் செய்வதற்கு எந்த சரக்கும் கிடைக்கவில்லை என்பவர்கள்தான் இதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று நினைக்கிறார்கள்.
தனிப்பட்டவர் தகராறு குழுத் தகராறாக மாறுகிறதே!
பொதுவாகவே நம்முடைய நாட்டில், இயல்பான ஒரு பழக்கம் என்னவென்றால், தனிப்பட்ட இரண்டு நபர்களுக்குள் நடைபெறும் மோதலை வைத்து, இரு குழுவினருக்கு ஏற்பட்ட மோதல் போல் அதைப் பெரிதாக்கி விடுவதுதான்.
உதாரணத்திற்குச் சொல்கிறேன், ஒரு மாணவனுக்கும், பேருந்து நடத்துநருக்கும் ஓரிடத்தில் ஏதோ பிரச்சினை என்றால், உடனே மாணவர்கள் எல்லாம் ஒருபக்கம் – அரசு நடத்துநர்கள் எல்லாம் இன்னொரு பக்கம் நின்று பிரச்சினை செய்வதுபோன்று; அதிலும் இடையிலே ஜாதியையோ, மதத்தையோ கொண்டு வருவது போன்று இல்லாமல், குற்றங்கள் யார் செய்தாலும், குற்றத்திற்குரிய சட்ட நடவடிக்கைகள் இருக்கவேண்டும். அதுவும் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாமல் அதில் அரசியலைப் புகுத்துவதோ அல்லது வேறு வகையான சிந்தனைகளுக்கு அது பயன்படுமா என்று பார்ப்பதோ பொதுநலத்திற்கு உகந்ததல்ல.
ஆள் மாறி தேர்வு எழுதிய சம்பவம்
செய்தியாளர்: குறிப்பாக பா.ஜ.க. இந்த விஷயத்தில் ராணுவ வீரர்களுக்குத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறதே?
தமிழர் தலைவர்: பா.ஜ.க.விற்கு சரக்கு இல்லை; எங்கேயாவது யாராவது இருமமாட்டார்களா? என்று பார்க்கிறார்கள்; யாராவது இருமினால், அந்த இருமல், தமிழ்நாடு முதலமைச்சரால்தான் வந்தது; தி.மு.க.வினரால்தான் இருமல் வந்தது என்று சொல்வதுதான் அவர்களுடைய வழக்கம். எதற்காக வேண்டுமானாலும் அவர்கள் போராட்டம் நடத்துவார்கள்.
திருவாரூர் மாவட்ட பா.ஜ.க.வின் தலைவருக்காக, இன்னொருவர் தேர்வு எழுதுகிறார்; அவரைக் கைது செய்தால், அதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள்.
அவர்களுக்கு சரக்கு ஏதுமில்லாததால், எதையாவது வைத்து, எதையாவது சொல்லலாமா? என்று நினைக்கிறார்கள். அதை நாம் பொருட்படுத்த முடியாது.
நிச்சயமாக மின்மினிகள் மின்சாரமாக முடியாது.
மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் நடத்தும் ஆலோசனைக் கூட்டம்!
செய்தியாளர்: அண்மைக்காலமாக தமிழ்நாட்டில், திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.மில் கொள்ளை; கோயம்புத்தூரில் நீதிமன்ற வளாகத்திற்குப் பின்புறம் கொலை போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுகின்றன; சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் முதலமைச்சர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்களே?
வெளிமாநிலத்தவர்களின் செயல்பாடுகள்!
தமிழர் தலைவர்: அதனால்தான் முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசிப்பது மட்டுமல்ல; அந்தந்த மாவட்டங்களுக்குத் தேவையானவற்றை செய்கிறார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி செய்யவேண்டியது என்னவென்பதை நான் பொதுக்கூட்டங்களில்கூட பேசியிருக்கிறேன்.
வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வேலைக்கு வரக்கூடிய ஆட்கள், மலிவான சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள் அல்லது அதிக நேரம் வேலை செய்கிறார்கள் என்பதற்காக, அவர்களை அந்தப் பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்; அது வசதியாக இருக்கும் என்கின்ற எண்ணம் பெருகிக் கொண்டே வருவதினால், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வதோடு நிறுத்தாமல், ஒவ்வொரு இடங்களையும் கண்காணித்து, பிறகு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன.
வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களை ஒழுங்குபடுத்துவது அரசினுடைய கடமையாகும். ஏற்கெனவே அவர்கள் குறித்து பதிவுகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றாலும்கூட, இன்னும் அதில், அதிகக் கவனம் செலுத்தி, அவர்களுடைய செயல்முறைகளையும் கண்காணிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
ஏனென்றால், தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பாலான கொள்ளைகள், சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைகளை வெளிமாநிலத்தவர்கள் உருவாக்குகிறார்கள். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை, கூலிப்படைகளாகவும் ஆக்குகிறார்கள்.
எனவே, இதை மிக முக்கியமாகக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
காவல்துறையின் கடமை!
கூலிப்படைகளை அறவே ஒழிக்கவேண்டிய கடமையும் காவல்துறைக்கு உண்டு. காவல்துறை இதில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மதம் என்பதே ஒன்றிய அரசின் கூப்பாடு!
செய்தியாளர்: இப்படிப்பட்ட ஒரு சூழலில், வடமாநிலத்தவர்களால், தமிழ்நாட்டில் சில சமூகக் குற்றங்கள் நடைபெறுகின்றன என்று சொல்கிறீர்கள்; ஆனால், ஒன்றிய அரசு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேசன் கார்டு, ஒரே தேர்தல் என்று சொல்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் இது.
ஒரே ஒரு கேள்வி நாங்கள் கேட்டோம்; அதற்கு இதுவரை பதில் இல்லை.
அந்தக் கேள்வி என்னவென்றால், எல்லாவற்றிற்கும், ”ஒரே, ஒரே” என்று சொல்கிறார்களே, ஒரே ஜாதி என்று சொல்வார்களா? ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா? என்று கேட்டோம். இதுவரை எங்கள் கேள்விக்குப் பதில் இல்லை.
இதை செய்தால்தானே, மக்கள் சமத்துவம் வரும். யாரும், எந்த மாநிலத்தினுடைய உரிமைகளையோ, எல்லைகளையோ மாற்ற முடியாது.
ஒரு குறிப்பிட்ட மாநில எல்லைப் பிரச்சினை தீர்ந்திருக்கிறதா? என்றால், இல்லவே இல்லை.
ஆகவே, தாயும், பிள்ளையும் ஒன்று என்றாலும், வாயும், வயிறும் வேறு என்று ஒரு பழமொழி உண்டு.
எனவே, ஒரே மொழி என்பது நடைமுறைக்குச் சாத்தியமும் கிடையாது. அது அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதம்!
இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது கூட்டாட்சி முறையைப்பற்றி சொல்வது. அதற்கு விரோதமாக ஒன்றிய அரசினை ஆள்பவர்கள் சொல்கிறார்கள்.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில், மனுதர்மத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிற முயற்சிக்கு வித்திடுகிறார்கள்.
சமஸ்கிருத கலாச்சாரம் அது; ஆர்.எஸ்.எஸ்.சினு டைய கொள்கை அது; ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நாடு முழுவதும் கொண்டுவரவேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.
இதற்கெல்லாம் ஒரே பதில், 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள்.
ஈரோடு: இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
செய்தியாளர்: ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறப் போகும் இடைத்தேர்தல் குறித்து?
தமிழர் தலைவர்: இடைத்தேர்தலில், பெரிய அளவிற்கு வெற்றி பெறும் தி.மு.க. – மதச்சார்பற்ற கூட்டணி. அதற்கு என்ன அடையாளம் என்றால், நிலைகுலைந்த மேனாள் முதலமைச்சராகவும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கக்கூடிய எடப்பாடியாருடைய பேச்சு ஒன்றே போதும்.
அவருடைய பேச்சே, நாளுக்கு நாள் தி.மு.க. கூட் டணியின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.
ஏனென்றால், அவர் என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு, மிகக் கீழறிக்கமாகப் போய் பேசுகிறார். அவருக்குத் தேர்தல் ஜன்னி வந்திருக்கிறது என்று மிகத் தெளிவாகத் தெரிகிறது.
அவருடைய பேச்சினுடைய வேகம், தரம் தாழ்ந்த நிலை, கோபம், எரிச்சல் எல்லாம், தி.மு.க. கூட்டணியினுடைய வெற்றியை நாளுக்கு நாள் பிரகாசமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.
அவருடைய பேச்சும், தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு உதவிகரமாக இருக்கும்.
ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிந்தால், சில கட்சிகள் காணாமல் போகும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.