ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது
‘திராவிட மாடல்’ அரசுக்குக் கிடைக்கும் வெற்றி!
தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்படவில்லை!
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று சொல்ல அண்ணாமலைகளுக்குத் தகுதி உண்டா?
சேலம், பிப்.21 ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது ‘திராவிட மாடல்’ அரசுக்குக் கிடைக்கும் வெற்றி! தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்படவில்லை! தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று சொல்ல அண்ணாமலைகளுக்குத் தகுதி உண்டா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
நேற்று (20.2.2023) சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தின் இரண்டாம் கட்டம் முடிந்து, சேலத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அவரது பேட்டி வருமாறு:
சேலம் சுயமரியாதை சங்கக் கட்டடம்
சேலத்தில் 1938 ஆம் ஆண்டு முதற்கொண்டு, தந்தை பெரியார் அவர்களாலும், அன்றைய சுயமரி யாதை இயக்கத்தவர்களாலும் சேலம் சுயமரியாதை சங்கக் கட்டடங்களையெல்லாம் அமைத்து, வாசக சாலை போன்றவை அமைந்து பிரச்சாரப் பணிகள் நடந்துகொண்டு வந்தன.
கலைஞரைப் போன்றவர்கள், எங்களைப் போன்ற வர்கள் எல்லாம் மாணவப் பருவத்திலேயே சுற்றுப் பயணம் செய்த காலத்தில், சேலம் சுயமரியாதை சங்கக் கட்டடத்தில்தான் நாங்கள் தங்குவது வழக்கம்.
இரண்டு சங்கங்களுடைய
நோக்கமும் ஒன்றல்ல!
அதை சில நண்பர்கள், பெரியார் அவர்கள் மறைந்த உடனே தங்களுடைய ஆக்கிரமிப்பில், பெரும்பாலோர் மனுகுல தேவாங்கர் சங்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்த காரணத்தினால், யாருக்கும் தெரியாமல் அவர்கள் தங்களுடைய சங்கத்தோடு, சேலம் சுயமரியாதை சங்கத்தை இணைக்கிறோம் என்று சொல்லி, அவர்கள் இணைத்துக் கொண்டார்கள். அப்படி இணைத்து, அந்தக் கடட்டங்களையெல்லாம் இடித்துவிட்டார்கள்.
அதற்குப் பிறகு, சேலம் நடேசனார் போன்றவர்கள் வழக்குப் போட்டு, அதற்குப் பிறகு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் என்ற – தந்தை பெரியார் அவர்களுடைய நிறுவனம்தான், எல்லா அமைப்புகளுக்கும் உரியது; தந்தை பெரியார் அவர்கள் நன்கொடை வசூலித்துக் கொடுத்து வாங்கியதுதான் சேலம் சுயமரியாதைக் கட்டடம். அந்த உரிமை சேலம் சுயமரியாதை சங்கத்திற்கு உரியது. அவர்களுடைய இணைப்பு தவறானது. ஏனென்றால் இரண்டு சங்கங் களுடைய நோக்கமும் ஒரே நோக்கமல்ல.
ஒன்று, ஜாதி ஒழிப்பிற்கு – இன்னொன்று ஜாதி அடிப்படையில் அமைந்த சங்கம்.
இரண்டையும் இணைத்தது – மாவட்டப் பதிவாளர் செய்தது ஏற்கத்தக்கதல்ல என்கிற எங்களுடைய வாதங்களை எடுத்துச் சொன்னோம்.
முதலில் மாநில பதிவுத் துறை அய்.ஜி. இந்த இணைப்பு செல்லத்தக்கதல்ல என்று தெளிவாக தீர்மானம் கொடுத்தார். நீங்கள் தனியே ஓர் அமைப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்.
உடனடியாக சேலம் தாதகாப்பட்டியில், அமைப்பு உருவாக்கப்பட்டு, நம்முடைய தோழர்கள் அந்த அமைப்பை நடத்தி வருகிறார்கள்.
வழக்கில் பெரியார் அறக்கட்டளைக்கு
வெற்றி கிடைத்தது!
இதற்கிடையில், அந்த இணைப்பு செல்லாது என்று சொன்னவுடன், உயர்நீதிமன்றத்தில் அந்த சொத்து எங்களை சார்ந்தது என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக் கில் பெரியார் அறக்கட்டளைக்கு வெற்றி கிடைத்தது ஒரு நீதிபதி விசாரணையில்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து, மனுகுல தேவாங்கர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.
அந்த வழக்கு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தது; தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பவர் தலை மையில், இரண்டு நீதிபதி அமர்வு தீர்ப்புக் கொடுத்தது. ஏற்கெனவே ஒரு நீதிபதி கொடுத்த தீர்ப்பு சரியான தீர்ப்புதான் என்று தீர்ப்புக் கொடுத்தார்கள்.
பதிவுத் துறை அய்.ஜி. இதை ஏற்றிருக்கிறார்; அதை சரியென்று ஒரு நீதிபதியும் தீர்ப்புக் கொடுத்திருக்கிறார். இந்த இரண்டையும் தாண்டி, இப்பொழுது மேல் முறை யீட்டு வாதங்களை ஏற்க முடியவில்லை. பெரியார் அறக்கட்டளைக்கு உரிமை இருக்கிறது என்பதை யெல்லாம் சட்டப்பூர்வமாக தெளிவாக எழுதி, 31 ஆம் தேதி தீர்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
மனுகுல தேவாங்கர் சங்கத்திற்கு
உரிமையில்லை!
எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது இரண்டு முறை; அரசாங்கத்தின் பதிவுத் துறையின் தீர்ப்பு ஒருமுறை – இவை அத்தனையும் வந்ததி னால், முழுக்க முழுக்க சேலம் சுயமரியாதை சங்கத்திற்குத்தான், அது முழுமையாக பெரியார் அறக்கட்டளைக்குத்தான் அந்த சொத்து உரியதே தவிர, மனுகுல தேவாங்கர் சங்கத்திற்கு அல்ல என்பது தெளிவாகப் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது.
உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வோம் என்று அவர்கள் சொல்லவும் இல்லை; ஏனென்றால், அதை அனுமதிக்கமாட்டார்கள் என்பது அவர்களுக் கும் தெரியும்.
சேலம் மக்களுக்கு
ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி
ஆகவே, எங்களைப் பொறுத்தவரையில், சேலம் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென் றால், நீண்ட காலமாக மக்களுக்காக நடத்தப்பட்ட வாசக சாலை பறிபோனது- மீண்டும் வந்திருக்கின்றது; மீட்கப்பட்டு இருக்கிறது. அதன்மூலமாக, மேலும் படிப்பகங்கள், மக்களுக்குப் பயன்படக் கூடியவை எல்லாம் நிர்வாகத்தின்மூலம் வரும் என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்கிறோம். அதற்காகத்தான் எங்களுடைய கலந்துரையாடலும் நடைபெற்றது.
மக்களுக்குப் பயன்படக்கூடிய
பொதுநலக் காரியங்களை செய்வோம்
செய்தியாளர்: அந்த சொத்துகள் உங்களுடைய பராமரிப்பில் வந்துவிட்டதா?
தமிழர் தலைவர்: ஆமாம். சட்டப்பூர்வமாக வந்தாயிற்று. மனுகுல தேவாங்கர் சங்கத்தின் சார்பில், வாசக சாலை எதுவும் நடைபெறவில்லை. கட்டடம் கட்டி, வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ஒரு வாடகைதாரர், நாங்கள் சொன்னவுடன், நீதிமன்றத்தில்தான் வாட கையை செலுத்திக் கொண்டிருக்கிறார். சில வாடகை தாரர்களை மிரட்டி, ”எங்களுக்குத்தான் உரிமை இருக்கிறது; நாங்கள் சொல்வதுபோன்றுதான் நீங்கள் நடக்கவேண்டும்; இல்லையென்றால், உங்களை காலி செய்துவிடுவோம்” என்றனர்.
ஆனால், இப்பொழுது அதற்குரிய வாய்ப்பு இல்லை. சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்துவிட்டோம். அதன்மூலமாக வரக்கூடிய வருவாயை வைத்து, இந்த ஊர் மக்களுக்குப் பயன்படக் கூடிய பொதுநலக் காரியங்களை செய்வோம்.
பொதுச்சொத்து, தனியார் சொத்து போன்று இருந்தது. இப்பொழுது மீண்டும் பொதுநலக் காரியங்களை செய்வதற்குரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
எப்பொழுதுமே, இதுபோன்ற அமைப்புகள் – பெரியார் அறக்கட்டளையின் தலைமை அமைப்பு. ஆகவே, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தோடு இணைக்கப்பட்ட ஒன்று என்ற காரணத்தினால், கல்லூரிகள், மருத்துவமனைகள் வரக்கூடிய வாய்ப்பு கள் இருக்கின்றன.
ஏற்கெனவே, தாதகாப்பட்டியில் மருத்துவமனை இருக்கிறது; அதை விரிவுபடுத்தக் கூடிய வாய்ப்புகளும் வரும்.
சேலம் மாநகரத்தில், மீண்டும் ஒரு பொதுத் தொண்டு நிறுவனம் – பொதுக் காரியங்களுக்குப் பயன் படக் கூடிய தொண்டு நிறுவனம் இப்பொழுது புதிதாக மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
சுயமரியாதைச் சங்கம் என்பது தனிப்பட்ட நபருடையது அல்ல; அது மக்களுக்குரியது!
ஏனென்றால், சுயமரியாதைச் சங்கம் என்பது தனிப்பட்ட நபருடையது அல்ல. அது மக்களுக்குரியது என்பதால், அதை பெரியார் அறக்கட்டளை நிர்வாகம் செய்துகொண்டிருக்கின்ற காரணத்தினால், நிச்சயமாக அது பொதுநலத்திற்குப் பயன்படும். இதுவரையில் தனியார் நலத்திற்குப் பயன்பட்டது; இனிமேல் பொது நலத்திற்குப் பயன்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இரண்டாவது தீர்ப்பு இப்பொழுதுதான் வந்திருக்கிறது
நம்மூரில் வழக்குத் தொடுத்தால், சீக்கிரமாக விசார ணைக்கு வராது; 10 ஆண்டுகாலமாகப் போராடி, இப் பொழுதுதான் தீர்ப்பு வந்திருக்கிறது.
முதல் தீர்ப்பு வந்தது 2013 ஆம் ஆண்டு. இரண் டாவது தீர்ப்பு இப்பொழுதுதான் வந்திருக்கிறது. ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது.
சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைவிட,
மக்கள் சொத்து, தனியாருக்குப் போகக்கூடாது!
செய்தியாளர்: அந்த சொத்து மதிப்பு எவ்வளவு?
தமிழர் தலைவர்: சொத்து மதிப்பு என்பது அது ஒரு ரூபாயாக இருந்தாலும், பொதுநலக் காரியத்திற்குப் பயன்படவேண்டிய சொத்தை தனியாரிடம் மீட்க வேண்டும்.
அன்றைய மதிப்பு வேறு; இன்றைய மதிப்பு வேறு.
முதலில் சொத்தை மீட்கவேண்டும் என்றுதான் நினைத்தோம். அதனுடைய மதிப்பு எங்களுக்கே இன்னும் தெளிவாகத் தெரியாது.
ஒரு சாதாரண குடிசையாக இருந்தாலும்கூட, அது பொதுக் காரியத்திற்குக் கொடுக்கப்பட்டது – தனியார் வசம் போகக்கூடாது.
பொதுநலத்திற்காக பதிவு செய்யப்பட்டது; தந்தை பெரியாரே நன்கொடை கொடுத்து தொடங்கப்பட்டது. அதனுடைய வரலாறைப்பற்றி நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறோம்.
ஆகவே, அந்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை விட, மக்கள் சொத்து, தனியாருக்குப் போகக்கூடாது என்பதுதான் அதனுடைய அடிப்படை.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தைத்
தொடங்கி வைத்ததே நாங்கள்தான்!
செய்தியாளர்: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக போய்க் கொண்டி ருக்கிறது – 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறதே, அதுகுறித்து….?
தமிழர் தலைவர்: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்ததே நான்தான்.
கடந்த 3 ஆம் தேதி அறிஞர் அண்ணா அவர்களு டைய நினைவு நாளில், சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் – சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எங்களுடைய பெரும் பய ணத்தைத் தொடங்கினோம். அந்தப் பயணம் ஈரோட்டி லிருந்துதான் தொடங்கினோம்.
அன்றைக்கு மாலை நடைபெற்ற முதல் கூட்டத்தில், தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும், மற்ற கட்சித் தலைவர்களும் அந்த மேடையில் உரையாற்றினர். நானும் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சார உரையாற்றினேன். இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் பெருத்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் பெருத்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது.
எப்படி உறுதியாகிவிட்டது என்று நீங்கள் கேட்க லாம்; அதற்கு வேறு சான்று தேவையில்லை. அரசியல் அனுபவத்தோடு அதை நான் சொல்கிறேன்.
எடப்பாடியாருக்கு தேர்தல் காய்ச்சல்!
எடப்பாடியார் அவர்கள் தன்னிலை தாழ்ந்து, மிகக் கீழிறங்கி பேசினார் என்பது ஒன்றே இந்த இடைத் தேர்தலில் அவருக்குத் தோல்வி உறுதியாகி இருக்கிறது. அவருக்குத் தேர்தல் காய்ச்சல் வந்த காரணத்தினால், இவ்வளவு தரம் தாழ்ந்து, முதலமைச்சரை தனிப்பட்ட முறையில், மீசை இருக்கிறதா? அது இருக்கிறதா? இது இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.
நான் அவருடைய அளவிற்குக் கீழிறங்கி அதற்குப் பதில் சொல்ல விரும்பவில்லை.
என்ன இருந்தாலும், இது தாய்க்கழகம். அவர்கள் தவறான வழிக்குப் போனால், அவர்களைத் திருத்த வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.
அடமானம் வைக்கப்பட்ட பொருளை மீட்கவேண் டும் என்று சொல்வதும் எங்களுடைய கடமையாக இருக்கிறது.
ஆகவே, இதுபோன்ற தேர்தல் நேரத்தில், ஒருவருக் கொருவர், கருத்துகளையும், கொள்கைகளையும் சொல்லவேண்டும்.
இடைத்தேர்தலின் முக்கியத்துவம் என்ன?
இடைத்தேர்தல் என்பதினுடைய முக்கியத்துவம் என்ன – ஒரு தொகுதியில் வெற்றி பெற்று, அவரால் என்ன மாற்றம் வந்துவிடும் என்பதல்ல.
அதனுடைய முக்கியத்துவம் என்னவென்றால், ஆளுங்கட்சி வெற்றி பெறுகிறதா? தோல்வி பெறு கிறதா? என்பதற்கு என்ன அடையாளம் என்றால், ஆளுங்கட்சியினுடைய கொள்கையை மக்கள் எந்த அளவிற்கு வரவேற்கிறார்கள். ஆட்சி அமைந்த பிறகு நடக்கும் இடைத்தேர்தலில், ஆட்சியின்மீது மக்களுக்குத் திருப்தி இருக்கிறதா? அதிருப்தி இருக்கிறதா? என்று சொல்வதற்குத்தான் இடைத்தேர்தல்.
தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி மிகப்பெரிய அளவிற்குச் சாதனை களைச் செய்திருக்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணியினர் சாதனைகளைச் சொல்லித்தான் வாக்குகளைக் கேட்கிறார்கள்!
தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரையில், சாதனைகளைச் சொல்லித்தான் வாக்குகளைக் கேட்கிறார்களே தவிர, வசவுகள் மற்றவை கிடையவே கிடையாது.
இங்கே கூட்டணி – அங்கே கூத்தணி
பா.ஜ.க.வினுடைய கைங்கரியத்தினால், அ.தி.மு.க. நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக் குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், இன்னொரு அணியினர், நாங்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு கேட்போம்; வேட் பாளர் பெயரையே சொல்லமாட்டோம் என்று சொல் கிறார்கள்.
அவரை நாங்கள் பிரச்சாரத்திற்கே கூப்பிடமாட் டோம் என்று மற்றொரு அணியினர் சொல்லுகிறார்கள்.
இந்த அரசியல் கூத்துதான் நடக்கிறது. இங்கே கூட்டணி – அங்கே கூத்தணி.
‘திராவிட மாடல்’ ஆட்சிக்குக் கிடைத்த
மிகப்பெரிய வெற்றி.
தி.மு.க. கூட்டணியை இன்றைக்கு அதிகமானோர் ஆதரிப்பது என்பது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
உதாரணமாக, கமலகாசன் அவர்கள். அவருடைய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நேற்று ஈரோட்டில் பிரச்சாரம் செய்திருக்கிறார். இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால், 2024 ஆம் ஆண்டு நடைபெற விருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
எனவே, எதிர்க்கட்சியினுடைய பிரச்சாரம் எல்லாம் அரசியல் ரீதியாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க.வினுடைய பிரச்சாரமோ, அவர்களைச் சார்ந்தவர்களுடைய பிரச்சாரமோ, அரசியல் ரீதி யாகவோ, கொள்கை ரீதியாகவோ இல்லாமல், தனிப்பட்ட தாக்குதலாக இருப்பது வருந்தத்தக்கது; கண்டனத்திற்குரியது. அந்தப் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்; இன்னமும் காலம் இருக்கிறது.
அ.தி.மு.க.விற்குச் சோதனையான காலகட்டம்!
எனவேதான், தோல்வியா? வெற்றியா? என்பதை விட, உங்கள் கட்சி உறுதியாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
இப்பொழுது அ.தி.மு.க.விற்குச் சோதனையான காலகட்டம். இன்னும் சில கட்சிகள் இருக்கின்றன; அவர்கள் நாங்களும் இருக்கிறோம் என்பதற்காகத் தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு வந்தவுடன், சில கட்சிகள் காணாமல் போகும்.
ஆதாரமில்லாமல் கற்பனையாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு!
செய்தியாளர்: ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கே வெற்றி என்று சொல்கிறீர்கள்; ஆனால், தி.மு.க.வினர் வாக்காளர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்து பணம் கொடுக்கிறார்கள் என்று எதிர்க்கட்சி யினர் குற்றம்சாட்டியிருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: நீங்கள் சொல்கின்ற விஷயத்தைப் பற்றி விசாரித்தேன். அந்த வார்டில் இருக்கும் வாக்கா ளர்களை அழைத்து, வாக்கு போடுவதற்கான சிலிப் பைக் கொடுத்து, அந்த வார்டில் இருக்கக்கூடிய தி.மு.க. தோழர்கள் எப்படி பணியாற்றவேண்டும் என்றும், கவனமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். இதை செய்வதில் எந்தத் தவறும் இல்லையே!
முன்பெல்லாம் வாக்காளர்களிடம் ஓட்டு மட்டும் போடச் சொல்லி கேட்பார்கள். ஆனால், இன்றைக்கு ஒருவர் மீன் விற்கிறார்; இன்னொருவர் தோசை சுடுகிறார்; மற்றொருவர் பரோட்டா போடுகிறார்.
சட்டப்பேரவைக்குப் போவது சட்டங்களை இயற் றுவதற்குத்தான்; இவர்கள் செய்வதே விசித்திர வித்தை. அதுபோன்று இல்லாமல், மக்கள் எல்லோரையும் ஒன்றாகத் திரட்டி, உங்களுக்கு வாக்கு அளிக்க உரிமை இருக்கிறது; அதை கவனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் இதில் என்ன தவறு?
நானே, எல்லா செய்தியாளர்களையும் அழைத்து பேட்டி கொடுக்கிறேன் என்றால், இவர் சிலவற்றை விநியோகம் செய்வதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியுமா?
அப்படி தி.மு.க.வினர் செய்தார்கள் என்றால், ஆதா ரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திற்குப் புகார் செய்தி ருக்கலாமல்லவா? அவர்கள் அப்படி புகார் செய்வதற்கு ஆதாரமில்லை. கற்பனையாக சொல்லப்படும் குற்றச் சாட்டு இது.
தி.மு.க.விற்கு பணியாற்றுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்; எதிர்க்கட்சியில், பணி செய்வதற்கு ஆட்களே இல்லை. ‘வருகிறேன்’ என்று சொல்கிற ஆட்களையும், ‘போகாதே’ என்று சொல்லக்கூடிய ஆட்களும் இருக்கிறார்கள்; ஏனென்றால், கோஷ்டி பூசல்கள்.
ஆனால், தி.மு.க. கூட்டணி என்பது இன்னும் பெருகக்கூடிய அளவில் இருக்கிறது. அதனால், இதைப் பொறுக்க முடியாமல், எதிர்க்கட்சியினர் ஆதாரம் இல்லாமல் குற்றம் சொல்கிறார்கள்.
செய்தியாளர்: தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் கட்டுக் கட்டாக பணம் இருக்கக்கூடிய காட்சியை பார்த்தீர்களா?
தமிழர் தலைவர்: சோசியல் மீடியாவில் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டார் என்று ஒருவர் சொல்கிறார். இன்னொருவர் கொடுக்கல் – வாங்கல் மிகவும் வசதி என்று சொல்கிறார்.
அதுபோன்று, இதையெல்லாம் பார்த்து பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.
தன்னிச்சையாக
தேர்தல் ஆணையம் இல்லை
செய்தியாளர்: மகாராட்டிரத்தில், சிவசேனா கட்சி இரண்டாகப் பிரிந்திருக்கிறது; ஷிண்டே அணி, சின்னத்தைப் பெறுவதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாயை தேர்தல் ஆணையத்திற்குக் கொடுத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே – தன்னிச்சையாக இருக்கக்கூடிய தேர்தல் ஆணையத்தை எப்படித்தான் நம்புவது?
தமிழர் தலைவர்: தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் இல்லை என்பதை உச்சநீதிமன்றமே கொட்டு வைத்து சொல்லியிருக்கிறது.