‘‘சிறீரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகத்தில், பர்தா அணிந்த பெண் ஒருவர் கருட மண்டபம் வரை சென்றுள்ளார். ஹிந்து சமய நம்பிக்கைகளுக்கு புறம்பான வழிபாட்டு முறைகளையும், சிலை வழிபாட்டுக்கு எதிரான கோட்பாடுகளையும் கொண்ட, பிற மதத்தை சேர்ந்த ஒரு பெண், எந்த நோக்கத்திற்காக கோயிலின் முக்கியப் பகுதி வரை வந்தார் என்பது குறித்து, உடனடியாக காவல்துறையும், கோயில் நிர்வாகமும் விசாரணை நடத்த வேண்டும்.
கோயிலின் பாதுகாப்பு நுழைவு வாயிலில், காவல் துறையினரும், தனியார் பாதுகாப்பு ஊழியர்களும், பணியில் இருக்கும் போது, முஸ்லிம் மத அடையாள உடையுடன் வந்த நபரை, எந்த அடிப்படையில் உள்ளே அனுமதித்தனர் என்ற கேள்வி எழுகிறது.
பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் ஹிந்து கோயில்களுக்குள் நுழைவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உரிய வழிமுறைகளை வகுத்துத் தீர்ப்பளித்துள்ள நிலையிலும், இத்தகைய நிகழ்வு சிறீரங்கத்தில் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஹிந்து மத நம்பிக்கையும், வழிபாட்டில் ஈடுபாடும் கொண்டவர்கள் மட்டுமே கோயில்களுக்குள் வர அனுமதிக்க வேண்டும். கேரள மாநில கோயில்களில் பின்பற்றப்படுவதைப் போல், பிற சமயத்தவர்கள் நுழைவதை கட்டுப்படுத்தும், சட்டப்பூர்வமான விதிகளை, தமிழ்நாட்டிலும் அறநிலையத்துறை கடுமையாக அமல்படுத்த வேண்டும்’’ என்ற ஒரு செய்தி வெளி வந்துள்ளது. (‘தினமலர்’ 2026 அக்டோபர் 24).
இதைப் படிக்கும்போது, மதத்துக்கு மதம் கடவுள் வேறுபடுகிறார் என்றால், ஒரு மதக்காரர் அடுத்த மதக்காரரின் கடவுளை நிராகரிக்கிறார் என்றால் ‘கடவுள் ஒருவர்; அவர்தான் உலகினைப் படைத்தார்’ என்று கூறுவது எத்தகைய முரண்பாடு என்பது வெட்ட வெளிச்சமாகிறதா இல்லையா?
அது மட்டுமல்ல, ‘‘சிறீரங்கம் ரங்கநாதன் கோயிலில் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி உள்ளே நுழையலாம்?’’ என்று எகிறிக் குதிப்போருக்கு ஒரு கேள்வி – அதற்கு மட்டும் பதில் சொல்லட்டும்!
அந்த ரங்கநாதன் கோயிலில் துலுக்க நாச்சியார் சன்னதி இருக்கிறதே – அது எப்படி?
சன்னதி அமைவிடம்: சிறீரங்கம் கோயிலின் அர்ஜுன மண்டபத்திற்கு அருகிலும், மூலவர் சன்னதிக்குச் செல்லும் இரண்டாம் பிரகாரத்திலும் (சேரகுலவல்லி சன்னதி அருகில்) துலுக்க நாச்சியாருக்குச் சன்னதி அமைந்துள்ளது.
உருவ வழிபாடு இல்லை: இஸ்லாமிய முறைப்படி உருவ வழிபாடு கிடையாது என்பதால், இங்குச் சிலை எதுவும் இல்லாமல் துலுக்க நாச்சியாரின் மூலிகை ஓவிய உருவமே வழிபடப்படுகிறது.
தல வரலாறு/அய்தீகம்: 14-ஆம் நூற்றாண்டில் (டில்லி சுல்தான் படையெடுப்பின் போது) சிறீரங்கம் நம்பெருமாள் (உற்சவர்) விக்கிரகம் டில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டது. சுல்தானின் மகள் (சுல்தானி) அந்த விக்கிரகத்தின் அழகில் மயங்கி, அதைத் தன் உயிராக நேசித்து வழிபட்டார். பின்னர் சிறீரங்கம் பக்தர்கள் விக்கிரகத்தை மீட்டு வந்தபோது, அந்த இளவரசியும் பெருமாளைத் தேடி சிறீரங்கம் வந்து இறைவனுடன் கலந்ததாகக் கோயில் வரலாறும் (கோயில் ஒழுகு), அய்தீகமும் கூறுகின்றன.
துலுக்க நாச்சியாருக்கு நாள்தோறும் சப்பாத்தி/ரொட்டி, வெண்ணெய், பாசிப்பருப்பு மற்றும் பால் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.
தை மாதத்தில் நடைபெறும் பகல் பத்து/இராப்பத்து உற்சவங்களின் போது, நம்பெருமாள் கைலாய வஸ்திரமான லுங்கி/கைலி அணிந்து துலுக்க நாச்சியார் சன்னதிக்கு எழுந்தருளும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப் படுகிறது என்று சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலின் தல புராணம் கூறுகிறதே!
இதற்கு என்ன பதில்? ரங்கநாதரே துலுக்க நாச்சியாரை ஏற்றுக் கொண்டுள்ளார் என்கிற நிலையில், ஹிந்து மததத்தைக் காக்கப் போவதாக வரிந்து கட்டும் கத்துக் குட்டிகள், விளம்பரத்திற்காக வீண் வம்புகளில் இறங்குகிறார்கள் என்பதுதான் யதார்த்தமானது.
இன்னொரு தகவலும் முக்கியமானது. பங்குனி உத்திர திருவிழாவின்போது சிறீரங்கம் நம் பெருமாள் (ரெங்கநாதன்) காவிரி ஆற்றைக் கடந்து உறையூரில் உள்ள துலுக்க நாச்சியார் கோயிலுக்குப் போவது (அதாவது தூக்கிக் கொண்டு) போவது ஏன்?
அப்பொழுது இஸ்லாமிய முறைப்படி மரியாதைகள் செய்யப்படுகின்றன.
பூரி ஜெகந்நாதர் கோயிலில் அண்ணல் அம்பேத்கரை வெளியே நிறுத்தி, மவுண்ட்பேட்டனை (கிறித்தவரை) உள்ளே அனுமதித்தது ஏன்?
இவ்வளவும் இருந்தும் ஒரு இஸ்லாமியப் பெண் சிறீரங்கம் ரெங்கநாதன் கோயிலுக்குள் எப்படி நுழைந்தார் என்று கேள்வி கேட்பதும், மனு போடுவதும் புத்தி கெட்டத்தனம், வீண் வம்பும் மட்டுமல்ல – விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவையே!
