உலகத் தாய்மொழி நாளான 21.2.2023 அன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கிலத்தை அதிகம் பயன்படுத்திய அமித்குமார் என்ற விவசாயி ஒருவரை “நாம் இருப்பது பீகார். இங்கே ஹிந்தியில் பேச வேண்டாமா? ஏன் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துகிறீர்கள் இது என்ன இங்கிலாந்தா?” என்று கேட்டுத் திருத்தியுள்ளார் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்.
பீகார் மாநிலத்தின் மாநில அலுவல் மொழியாக ஹிந்தி இருப்பதால் அவரது கோபம் நியாயமானதாக கூட தோன்றக்கூடும். ஆனால் அந்த மாநிலத்தின் 26.89% மக்கள் பேசும் மைதிலி மற்றும் 24% மக்கள் பேசும் போஜ்புரியும் இன்னும் இருக்கும் இதர மொழிகளும் பீகாரின் சொந்த மொழிகளாக இருக்க, கற்றவர் மத்தியில் உலவும் ஹிந்தி 25.6% என்ற அளவில் மட்டுமே இருந்தாலும் அதுவே மாநிலத்தின் மொழியாக மாறிப் போயிருக்கிற அவலத்தை தாய்மொழிகள் நாளில் பீகார் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பீகாரில் பேசப்படும் பல போஜ்புரி மொழிகள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஹிந்தியின் துணை வட்டார மொழிகளாகக் கருதப்பட்டு ஹிந்தியின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது மிகப்பெரும் மோசடியாகும்.
ஹிந்தியை நுழைய விட்டால் மாநில மொழிகள் எப்படி நசுக்கப்படும் என்கிற அவலத்திற்கும் பீகார் ஒரு சான்று. பீகாரில் இருந்து பிற மாநிலங்கள் பாடம் கற்க வேண்டும்.
– ஈரோட்டுக் கண்ணாடி