நான் நாத்திகன் ஆனது எப்படி? (2)

- Advertisement -

ஜாதி சார்ந்த வாழ்க்கையை உதறினேன்! பெரியாரைப் புரிந்து நாத்திகனானேன்!

நிகழ்வு 1

அது 2001ஆம் ஆண்டு. அப்போது  இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள், உடல்நலம் சரியில்லாமல் இருந்த என் பாட்டியின் தாயாரைப் பார்த்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன்.அவர் எனக்குக் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை, திரும்பி வரும் வழியில் இருந்த மாரியம்மன் கோயிலின் உண்டியலில் போட்டுவிட்டு, “எங்கள் அவ்வாவுக்கு உடல்நிலை சரியாக வேண்டும்” என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.

சில நாட்களுக்குப் பிறகு அதை என் பாட்டியிடம் (மறைந்த திருமதி  முத்துக்கிருஷ்ணம்மாள் ) கூறினேன் அதற்கு அவர் என்னிடம் சொன்னார்,

“கடவுள் என்று ஒருவர் கிடையாது. எல்லாம் மனிதர்கள் உருவாக்கிய பொய்!”

அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், எங்கள் ஊரில் அனைவரும் கடவுளை வணங்குவார்கள். “இவ்வளவு பேர் நம்புகின்ற ஒன்று எப்படி பொய்யாக இருக்க முடியும்?” என்ற கேள்வி எனக்குள் எழ ஆரம்பித்தது. இருப்பினும், என் பாட்டி சொன்னது என்னைச் சிந்திக்க வைத்தது..

அடுத்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகள், “கடவுள் இருக்கிறார்” என்று மற்றவர்கள் கூறும்போதெல்லாம், நான் “கடவுள் இல்லை” என்று கூறுவேன். ஆனால், “எப்படிக் கூறுகிறாய்?” என்று யாராவது கேட்டால், அதற்கான தெளிவான பதிலைச் சொல்ல அப்போது எனக்குத் தெரியாது. (அந்த அளவிற்கு எனக்குப் புரிதல் இருக்கவில்லை.)

 நிகழ்வு 2

2007ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம்.

எங்கள் ஊரில் பெருமாள் என்ற ஒருவர் இருந்தார். (இந்தச் சமூகம் அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் “தாழ்த்தப்பட்டவர்கள்” என்று அடையாளப்படுத்தி வைத்திருந்தது.)

ஒருநாள் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து, வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார். என் அப்பாவும் அம்மாவும் அவரை வீட்டிற்குள் அழைத்து, நாங்கள் சாப்பிடும் அதே தட்டில் உணவு பரிமாறினார்கள். அவர் மிகவும் தயக்கத்துடனும் கூச்சத்துடனும்தான் சாப்பிட்டு முடித்தார்.

அப்போது என் மனதிற்குள், ‘பார்த்தாயா! நாம் எல்லோரையும் சமமாக நடத்துகிறோம்’ என்ற பெருமை ஏற்பட்டது. (ஆனால், அவ்வாறு பெருமைப்படுவதுகூட, ஒருவரை அவரது ஜாதியின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கும் மனநிலையின் வெளிப்பாடுதான் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.)

நிகழ்வு 3

2013ஆம் ஆண்டு நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தேன். அப்போது என் தம்பியின் நண்பர்கள் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் எங்கள் ஊர்க்காரர் (வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்). மற்ற நண்பர்கள் அனைவரும் வீட்டிற்குள் வந்துவிட்டார்கள். ஆனால், அந்தப் பையன் மட்டும் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தான். நாங்கள் பலமுறை அழைத்தும் அவன் வீட்டிற்குள் வரவில்லை. மிகுந்த தயக்கத்துடன் வெளியிலேயே நின்றுகொண்டிருந்தான்.

“அவனுடன் வந்த மற்றவர்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும்போது, எது அவனை மட்டும் வீட்டிற்கு வெளியே தயங்கி நிற்க வைத்தது எது?” என்று சிந்தித்தேன்.

அந்தத் தருணத்தில்தான் ஜாதி என்றால் என்ன என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

அதுவரை ஜாதி என்ற ஒன்றை மறைமுகமாகவோ, நேரடியாகவோ எனக்கு முன்பாக வைத்துக்கொண்டுதான் என் வாழ்க்கையை வாழ்ந்திருந்தேன். அதன்பிறகு ஜாதியைப் பற்றித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.

அந்தத் தேடல் என்னைக் கடவுளைப் பற்றிய கேள்விகளிடமும் அழைத்துச் சென்றது.

மனிதர்கள் கடவுளின் தலை, தோள், தொடை மற்றும் பாதங்களிலிருந்து பிறந்தார்கள் என்ற கதைகளைப் பற்றித் தெரிந்துகொண்டபோதுதான், “கடவுள் இல்லை” என்று கூறிக்கொண்டே, ஜாதியின் மூலமாக அதே கடவுள் சார்ந்த கருத்துகளை நாமும் அறியாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

நிகழ்வு 4

எனக்குத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் உள்ளது. (அது என் அப்பாவிடமிருந்து எனக்கு வந்த பழக்கம்). குறிப்பாக வரலாறு மற்றும் சுயசரிதை நூல்களை விரும்பிப் படிப்பேன்.

இந்திய மற்றும் உலக வரலாற்றைத் தொடர்ந்து படித்தபோது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.

கடவுளைப் பின்பற்றுபவர்கள் சிலர் மனிதர்களைத் தொடக்கூடாது என்று கூறுகிறார்கள். மற்றும் சிலர் வாள், பசி மற்றும் சூழ்ச்சியின் மூலமாக, மனிதர்களைத் தாங்கள் வணங்கும் கடவுளையே வணங்க வைக்க முயன்றிருக்கிறார்கள்.

மனித வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து, நேரடியாகவோ மறைமுகமாகவோ நடைபெற்ற பெரும்பாலான போர்களில் மதத்தின் பங்கு இருந்திருக்கிறது.(அந்த மதம், அது சார்ந்த கடவுளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.)

குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் எனக்குள் விதைக்கப்பட்ட விதைகள் மட்டுமே. அந்த விதைகள் மரமாக வளர்வதற்குக் காரணமான மேலும் பல நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் இரண்டு வகையான மக்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு தரப்பினர், தந்தை பெரியார் நமது வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதை உணர்ந்து வாழ்கின்றவர்கள். மற்றொரு தரப்பினர், பெரியாரை எதிரியாகச் சித்தரித்து, அதன் மூலமாக ஆதாயம் தேடுபவர்கள். (எவராக இருந்தாலும் அச்சாணி தந்தை பெரியாரே!)

நான் முதல் வகையைச் சேர்ந்தவன்.

சிறுவயதில் பெரியார் எனக்குப் புரியவில்லை. ஆனால், 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அவர் கூறியவை, பேசியவை மற்றும் எழுதியவற்றைப் படித்தபோது, இந்தச் சமூகத்தில் நடைபெறும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் கடவுள் பற்றிய நம்பிக்கைகளும், அவற்றைச் சார்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்தும் மனிதர்களும்தான் காரணமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

மேலும், மதங்களில் கூறப்படும் தர்க்கத்திற்குப் பொருந்தாத கதைகள், அவற்றைக் குறித்து என்னைக் கேள்வி கேட்க வைத்தன. அந்தக் கேள்விகளுக்குப் பெரும்பாலும் கடவுளை நம்புவர்களிடம் பதில் இருக்கவில்லை.

“இவை அனைத்தும் ஏன்?” என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து எழுந்தது. அந்தக் கேள்விதான் இறுதியாக என்னை ஒரு முடிவிற்கு அழைத்துச் சென்றது –

“மனிதனால் படைக்கப்பட்டவனே கடவுள்” என்பதுதான் அது

ஒரு மனிதனைத் “தொடக்கூடாது” என்று கூறும்  ஆத்திகத்தைவிட, அனைத்து மனிதர்களையும் மதிக்கக் கற்றுத்தரும் நாத்திகம் சிறந்தது.

நாத்திகம் என்பது வெறும் சொல் அல்ல; அது ஒரு வாழ்க்கைமுறை.

நம்மைச் சுற்றி நடைபெறும் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். புரியாதவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

  1. மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை; அனைவரும் சமமானவர்கள்.
  2. யாரையும் காயப்படுத்தாமல் வாழ வேண்டும்.
  3. கல்லையும் மண்ணையும் வணங்கிக் காலத்தை வீணாக்குவதைவிட, உழைத்து முன்னேறுவது சிறந்தது.
  4. எல்லாவற்றிற்கும் மேலாக, பெரியாரை எனக்குப் புரியவைத்து, என் வாழ்க்கையை மாற்றிய, இந்தச் சிந்தனைக்கு நான் ஒரு பெயர் வைக்க வேண்டுமென்றால், அதுதான் நாத்திகம்:

நான் ஏன் நாத்திகன் ஆனேன்? – “மனிதனாய் வாழ்வதற்காக.”

இப்படிக்கு,

– குணாளன் வி

பேரையூர் (மதுரை மாவட்டம்)

இருப்பு: துபாய்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *