‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியாரைத் தாக்குவதற்காக திருக்கை மீன் வால் முள்ளோடு தயாராக இருந்த எதிரிகள்! 1944 இல் பெரியார் மீது பாம்பை வீசிய ஊரில், 1972 இல் அவருக்குச் சிலை – கல்வெட்டு!
இரண்டாவது தவணையாக 35 லட்சம் ரூபாயை ராஜபாளையம் இன்றைக்குக் கொடுத்திருக்கிறது!

 

Contents
பெரியாரைத் தாக்குவதற்காக திருக்கை மீன் வால் முள்ளோடு தயாராக இருந்த எதிரிகள்! 1944 இல் பெரியார் மீது பாம்பை வீசிய ஊரில், 1972 இல் அவருக்குச் சிலை – கல்வெட்டு! இரண்டாவது தவணையாக 35 லட்சம் ரூபாயை ராஜபாளையம் இன்றைக்குக் கொடுத்திருக்கிறது!ராஜபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’!1956 இல் மூன்று மணிநேரம் உரையாற்றினார் தந்தை பெரியார்!இரண்டு மைல் குறைவு என்பதால், பாதையை மாற்றினார் தந்தை பெரியார்!பெரியாரைத் தாக்குவதற்காக திருக்கை மீன் வால் முள்ளோடு தயாராக இருந்த எதிரிகள்!கழகத் தோழர்கள் தாக்கப்பட்டனர்!இரண்டாவது தவணையாக 35 லட்சம் ரூபாயை ராஜபாளையம் கொடுத்திருக்கிறது, இன்றைக்கு!1944 இல் பெரியார் மீது பாம்பை வீசிய ஊரில், 1972 இல் அவருக்குச் சிலை – கல்வெட்டு!இந்த இயக்கம், பெரியாரோடு ஓய்ந்து போய்விடும் என்று சிலர் நினைத்தார்கள்!

ராஜபாளையம், செப்.6  பெரியாரைத் தாக்குவதற்காக திருக்கை மீன் வால் முள்ளோடு தயாராக இருந்த எதிரிகள்! 1944 இல் பெரியார் மீது பாம்பை வீசிய ஊரில், 1972 இல் அவருக்குச் சிலை – கல்வெட்டு! இரண்டாவது தவணையாக 35 லட்சம் ரூபாயை ராஜபாளையம் இன்றைக்குக் கொடுத்திருக்கிறது  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

ராஜபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’!

்கடந்த 20.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, விருதுநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ ராஜபாளையம் மதுரை ராஜா கடை தெருவில், ஏ.எஸ்.ஆர்.தங்கராசா அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டு நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

1956 இல் மூன்று மணிநேரம் உரையாற்றினார் தந்தை பெரியார்!

அதைத் தாண்டி நண்பர்களே, மிக முக்கியமான ஓர் அனுபவத்தை உங்களுக்குச் சொல்கிறேன். நம்முடைய நண்பர்கள் இங்கே உரையாற்றும்போது குறிப்பிட்டார்கள், இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அன்றைக்கு நடந்தது. இரண்டு, மூன்று முறை அழைத்த பின்புதான் அங்கு நிகழ்ச்சிக்குச் சென்றோம். மாலையில் கூட்டம் நடக்கின்ற அளவிற்கு ஏற்பாடுகள் எல்லாம் முடித்தாயிற்று. அய்யா தந்தை பெரியார் அவர்கள் பேசுகிறார்; மூன்று மணி நேரம், 1956 இல். கடுமையாகப் பேசுகிறார்.

அப்படி அவர் பேசி முடித்தவுடன், அரசியல் எதிரிகள், கொள்கை எதிரிகள் திட்டமிடுகிறார்கள். பெரியார் கருத்துகளை கேட்டு, அவர்கள் சிந்தித்ததில்லை; அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் காலித்தனங்கள், வன்முறைகள்தான். கல்வீச்சு, சாணி வீச்சு, செருப்பு வீச்சு இவை அத்தனையும் இருக்கும். இவற்றையெல்லாம் தாண்டித்தான், இந்த இயக்கம் வளர்ந்தது. அப்படி வரும்போது, தந்தை பெரியார் பேசியவுடன், ரகசியமாக ஒரு திட்டம் போடுகிறார்கள். பெரியாரை அந்த இடத்தில் அவர்களால் எதிர்க்க முடியவில்லை. காரணம், காவல் துறை மற்ற கழகத் தோழர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆகவே, கூட்டம் முடிந்து எந்த வழியாகத் திரும்பிப் போகிறார் என்று விவரம் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

இரண்டு மைல் குறைவு என்பதால்,
பாதையை மாற்றினார் தந்தை பெரியார்!

கூட்டம் முடிந்தவுடன், அய்யா அவர்கள் வேனில்தான்  திருச்சிக்குப் போக வேண்டும். உடனே திருச்சிக்குப் போவதென்றால், இந்த வழியாகத்தான் போவார் என்று கொள்கை எதிரிகள் நினைத்தார்கள். வழக்கமான பாதையில் தானே போவார்கள் என்று, அந்தப் பாதையில், நின்று கொண்டு ஒரு திட்டம் போட்டார்கள். பெரியார் அவர்களுக்கு ஒரு சுபாவம் உண்டு; கிளம்பும்போது அய்யா கேட்டார், பாதை எல்லாம் எப்படி இருக்கிறது என்று. இந்தப் பக்கம் போனால் ஒரு இரண்டு மைல் குறையும் என்று ஒருவர் சொல்லிவிட்டார்.  இரண்டு மைல் குறையுமா? அப்படியென்றால், பெட்ரோல் செலவும் குறையும் என்று சொல்லி, அந்தப் பாதையிலேயே போகச் சொன்னார். ஏனென்றால், அய்யா பெரிய சிக்கனவாதி. உடனே, வேன் ஓட்டுநரை அழைத்து, ‘‘ஏம்பா, இந்தப் பக்கம் போனால், இரண்டு மைல் குறைகிறது; அதனால், இந்தப் பக்கமாகவே போகலாம்’’ என்று சொல்லி விட்டார். கடைசி நேரத்தில், போகின்றப் பாதையை மாற்றினார்.

பெரியாரைத் தாக்குவதற்காக திருக்கை மீன் வால் முள்ளோடு தயாராக இருந்த எதிரிகள்!

ஆனால், அவரைத் தாக்குவதற்காக திருக்கை மீன் வால் முள்ளைப் பதப்படுத்தி வைத்தி ருந்தார்கள். அந்த முள்ளால் முதுகில் அடித்தால், சதை பெயர்ந்து வந்துவிடும். அந்தத் திருக்கை மீன் வால் முள்ளைத் தயாராக வைத்துக்கொண்டு, பெரியார் இந்தப் பக்கம் தான் வரவேண்டும் என்று ஒரு கூட்டம் அந்தப் பாதையில்  தாக்கு வதற்குத் தயாராக நின்றிருந்தார்கள். ஆனால், பெரியார் வேறு பாதையில் போகிறார் என்கிற தகவல் அவர்களுக்குத் தெரியாது. இந்த விஷயம் பெரியாருக்கும் தெரியாது, அவர் இதை எதிர்பார்க்கவில்லை; பெட்ரோல் செலவு மிச்சமா வதைக் கணக்கிட்டு, திடீரென்று முடிவு செய்து வேறு பாதையில் போய்விட்டார்.

கழகத் தோழர்கள் தாக்கப்பட்டனர்!

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, கழகத் தோழர்கள், சுற்றுவட்டார கருப்புச்சட்டைத் தோழர்கள், மிதிவண்டி யில் அவரவர் ஊர்களுக்குத் திரும்புகிறார்கள். அப்பொழுதெல்லாம் மிதிவண்டியைத் தவிர வேறு வாகனங்கள் கிடையாது. அப்படி போகும்போது, அவர்களை அந்தத் திருக்கை மீன் வால் முள்ளால் தாக்கினார்கள். அந்தத் தாக்குதலினால், பல பேர் படுகாயமடைந்தனர் இதையெல்லாம் பிறகு அறிந்த  அய்யா அவர்கள், மிகவும் சங்கடப்பட்டார். மிகப்பெரிய அளவுக்கு அது ஒரு காட்சி.

இரண்டாவது தவணையாக 35 லட்சம் ரூபாயை ராஜபாளையம் கொடுத்திருக்கிறது, இன்றைக்கு!

அப்படி இருந்த ஊர்தான், இன்றைக்குப் பக்கு வப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு, இரண்டாவது தவணையாக 35 லட்சம் ரூபாயை ராஜபாளையம் கொடுத்திருக்கிறது. கடலூரில், பெரியார் மீது செருப்பு வீசினார்கள்; ஒரு செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நினைத்து, இன்னொரு செருப்பையும் வாங்குவதற்காக மீண்டும் வண்டியைத் திருப்பச் சொல்லி, இன்னொரு செருப்பையும் வாங்கிக் கொண்டு வந்த கதை இருக்கிறது. ‘‘செருப்பொன்று போட்டால். சிலை ஒன்று முளைக்கும்’’ என்று  கவிஞர் கருணானந்தம் கவிதை எழுதினார்.  அது எங்கள் ஊர்தான்; நான் 11 வயது சிறுவன்.  அய்யா ரிக்‌ஷாவில் வரும்போது, அந்த ரிக்‌ஷாவைப் பிடித்துக்கொண்டு வந்தவன் அன்றைக்கு. பிறகு, வளர்ந்து, ‘விடுதலை’ நாளிதழுக்கு ஆசிரியராக இருக்கிறேன். அன்றைக்கு வந்தவர்கள் மாணவ  இயக்கத் தோழர்கள்; அண்ணாவை அடுத்து, கலைஞர் அன்றைக்கு முதலமைச்சரான பிறகு, மாணவப் பருவத்தைத் தாண்டி முதலமைச்சர் கலைஞராக இருக்கக்கூடிய அவர்களை, ‘‘பாராட்டி போற்றி வந்த பழைமை லோகம், ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’’ என்று எழுதிய கலைஞர் அவர்களை அழைத்து, அங்கே அய்யாவின் சிலையைத் திறந்து வைத்தோம் 1972 இல். அந்நிகழ்வில் பெரியாரும் இருந்தார்.  அங்கே ஒரு கல்வெட்டையும் திறந்தோம்.

1944 இல் பெரியார் மீது பாம்பை வீசிய ஊரில், 1972 இல் அவருக்குச் சிலை – கல்வெட்டு!

அந்த நிகழ்விற்காக மக்கள் ஏராளமாகப் பணம் கொடுத்தார்கள். அந்த சிலைத் திறப்பு நிகழ்விற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தினோம். அந்த நிகழ்ச்சி முடித்ததும், மீதம் பணம் இருந்தது. அதை  அய்யாவிடம் கொடுத்தோம். அது அவருக்காக இல்லை; மக்களுக்காகத்தான் ‘‘எல்லாவற்றையும் வைத்துவிட்டுப் போ’’ என்றார். பெரியார் செல்லும்  வழியில், அன்று பாம்பைத் தூக்கிப் போட்டார்கள். 1944 இல், அந்த நிகழ்வு நடந்தது. ஆனால், 1972 இல், அய்யாவிற்கு சிலை வைக்கிறோம். எவ்வளவு பெரிய மாறுதல் பாருங்கள். நகர மக்கள் எல்லாம் சேர்ந்து வைக்கிறார்கள். நான் அந்த ஊர்க்காரன் என்ற முறையில் சொல்கிறேன். நன்கொடை கேட்டுச் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் பணம் தாராளமாகக் கொடுத்தார்கள். ‘‘செய்ய வேண்டும்; அவசியம் செய்ய வேண்டும் அய்யாவுக்கு’’ என்று சொன்னார்கள், கட்சி வேறுபாடு இல்லாமல். அந்தக் காலத்தில், பத்தாயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும். பத்தாயிரம் ரூபாயை பாம்பைப் போட்டதற்காகக் கொடுக்கிறோம் என்று சொன்னோம். அதேபோல, அன்றைக்குத் திருக்கை மீன் வால் முள்ளால் தாக்கப்பட்டதற்காக, இன்றைக்கு 35 லட்சம் ரூபாைய ராஜபாளையம் அளித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், இதுதான் வரலாறு. இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அழித்துவிட முடியாது. திராவிடர் கழகம் ஆனாலும், திராவிட முன்னேற்றக் கழகமானாலும் எதிர்நீச்சலிலே வரக்கூடியவை. நெருப்பாற்றிலே நீந்தி வெற்றி பெறக்கூடியவை. எரிமலைகள் ஆனாலும், அதைக் கண்டு அஞ்சாமல், அதை உணரக்கூடிய ஒரு வாய்ப்பு, எதிர்க்கக்கூடிய ஒரு துணிவு அவைகட்கு அன்றும் உண்டு; இன்றும் உண்டு; என்றும் உண்டு!

இந்த இயக்கம், பெரியாரோடு ஓய்ந்து போய்விடும் என்று சிலர் நினைத்தார்கள்!

ஆகவேதான், இந்தப் பாதையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் சொல்கிறோம். சரி, இந்த இயக்கம், பெரியாரோடு ஓய்ந்து போய்விடும் என்று சிலர் நினைத்தார்கள். பல பேர் எழுதினார்கள், ‘‘பெரியாருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு 95 வயது; இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறார்? இன்னும் கொஞ்ச நாள்கள்தான் இருப்பார்.’’ இப்படி சொன்னது யார் தெரியுமா? மற்றவர்கள் சொன்னால் அதைப்பற்றிக்  கவலை இல்லை. ஒன்றிய அமைச்சராக இருந்த ஒருவர் சொன்னார். அன்றைக்குக் காங்கிரஸ் அமைச்சர். அந்த ஒன்றிய அமைச்சரின் பெயர் உமாசங்கர் தீட்சத். நேரு வீட்டுக் கணக்குப் பிள்ளையாக இருந்தவரை அமைச்சராக்கினார்கள். அவருடைய மருமகள்தான். டில்லியில் அமைச்சராக இருந்த உமா தீட்சத் அம்மையார்.  ‘‘பெரியார் இயக்கம், ஹிந்தியை எதிர்க்கிறார்கள், எங்களை எதிர்க்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலத்திற்கு இவையெல்லாம் நடக்கும் தென்னாடான தமிழ்நாட்டில்? பெரியார் இருக்கிற வரைக்கும் தான் இருக்குமே தவிர, வேறு கிடையாது.  அவருக்கு வயதாகிவிட்டது’’ என்று அவர் சொன்னார்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *