நீட்தேர்வு என்பது இந்தக் காலகட்டத்தில் இருக்கிற ஒரு சூழ்ச்சிப் பொறி!
4ஆரியம் தன்னுடைய நிலையை உயர்த்தி, நிரந்தரமாக்கி, 3 சதவீதம் உள்ள மக்கள், 97% உள்ள மக்களை, அறிவற்ற மக்களாக, அறிவு பெறக்கூடாத மக்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
இந்தியாவுக்கே அறிவு சொல்லி கொடுக்கிற இயக்கம்
திராவிட இயக்கம்தான்; தந்தை பெரியார்தான்!
4ஆரியம் தன்னுடைய நிலையை உயர்த்தி, நிரந்தரமாக்கி, 3 சதவீதம் உள்ள மக்கள், 97% உள்ள மக்களை, அறிவற்ற மக்களாக, அறிவு பெறக்கூடாத மக்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
இந்தியாவுக்கே அறிவு சொல்லி கொடுக்கிற இயக்கம்
திராவிட இயக்கம்தான்; தந்தை பெரியார்தான்!
சென்னை, ஆக.28 நீட்தேர்வு என்பது இந்தக் கால கட்டத்தில் இருக்கிற ஒரு சூழ்ச்சிப் பொறி. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆரியம் தன்னுடைய நிலையை உயர்த்தி, நிரந்தரமாக்கி, 3 சதவீதம் உள்ள மக்கள், 97% உள்ள மக்களை, அறிவற்ற மக்களாக, அறிவு பெறக்கூடாத மக்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கே அறிவு சொல்லி கொடுக்கிற இயக்கம் திராவிட இயக்கம்தான்; தந்தை பெரியார்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இருசக்கர வாகனப் பரப்புரை – நிறைவு விழாப் பொதுக்கூட்டம் – தமிழர் தலைவர் வாழ்த்துரை!
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் 22.8.2026 முதல் 25.8.2026 ஆகிய நான்கு நாள்கள், ஆறு குழுக்களாக நடைபெற்றது. இருசக்கர வாகனப் பரப்புரையின் முதல் குழுவின் பிரச்சாரப் பயண நிறைவு விழா தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 25.8.2026 அன்று மாலை மேற்குத் தாம்பரம் பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து, பயணக் குழுவினரைப் பாராட்டி சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
நான்கு நாள்கள் – ஆறு குழுக்கள்!
மிகச் சிறப்பான வகையில் கடந்த நான்கு நாள்கள் – தமிழ்நாடு முழுக்க நீட் தேர்வு நிரந்தரமாக ஒழிக்கப்பட வேண்டும்; கல்வியில் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமை. பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே உள்ள தேர்வு நடத்தக்கூடிய, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை இவற்றை மய்யப்படுத்தி, மக்களுக்கு அறிவுசார் பிரச்சாரத்தைச் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பாக, இரு சக்கர வாகனப் பரப்புரை மூலம் – ஆறு குழுக்களாக, நான்கு நாள்கள் – தமிழ்நாடு முழுக்க, பல கிராமங்கள் உள்பட எல்லா இடங்களிலும் பிரச்சாரம் நடந்து, சென்னையிலிருந்து புறப்பட்ட முதல் குழு, தாம்பரத்தில் முடிவடைந்து பிரச்சார நிறைவு விழாக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பயணக் குழுவினருக்குப் பாராட்டினைத் தெரிவித்து, இந்நிறைவு விழா கூட்டத்திற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மழை பெய்யக்கூடிய பருவம். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சென்னையில் இதே நேரத்தில் மழை பொழிகிறது. அதனால் மகிழ்ச்சிதான். மழைக்காக நிறைய பேர் யாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றும் தியாகம் செய்யவேண்டிய அவசியமில்லை. நாம் கூட்டம் போட்டால், மழை வரும் என்று சொல்வதற்கில்லை – அது ஒன்றும் ஆரூடம் அல்ல. நாம் மழைக் காலங்களிலும் கூட்டம் நடத்துகின்றோம்.
‘குடிசெய்வார்க்கில்லை பருவம்’ என்பது போன்று, கடும் மழை பொழிந்தாலும், கொளுத்தும் வெப்ப மானாலும், கோடை ஆனாலும், கொடுமையான புயல் காற்று அடித்தாலும், நம்முடைய பயணங்கள் நிற்காது; இது எல்லோருக்கும் தெரியும். தொடர்ந்து எல்லா வகையிலேயும் தோழர் சிவசாமி போன்றவர்கள், நிறைய தோழர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களின் பெயரை விளித்ததாக எல்லோரும் கருதவேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கொடுமையான ஒரு சூழ்ச்சித் திட்டம்தான் நீட் தேர்வு!
தோழர்களே, இந்தியாவிலேயே நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட உடனேயே அதனால் எவ்வளவு பெரிய ஆபத்து? என்பதை எடுத்துச் சொன்னோம். பார்ப்பன சூழ்ச்சியின்படி, மனுதர்மம் உள்ளே வந்து மீண்டும் பதவி ஏற்பதற்காக, சிம்மாசனத்திலே அமருவதற்காக இருக்கக்கூடிய இந்தக் கொடுமையான ஒரு சூழ்ச்சித் திட்டம்தான் நீட் தேர்வு என்பதாகும். அம்பேத்கர் அவர்கள் அரும்பாடுபட்டு எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வந்த உடனே என்ன சொன்னார்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்? அவர்கள் பத்திரிகையில் எழுதினார்கள், மனுதர்மத்தைத்தான் அரசியலமைப்புச் சட்டமாக்க வேண்டுமே தவிர, அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் சரி யில்லை; தூக்கிப் போடுங்கள் என்றனர். அதற்கு என்ன காரணம்? அம்பேத்கர் எடுத்த எடுப்பிலேயே முகப்புரையில் சொன்னார், ‘‘நாம், நமக்கு நாமே வழங்கிக் கொள்ளக்கூடிய இந்த அரசியலமைப்புச் சட்டத்திலே முதலிடம் – நீதி என்று வரும்போது, சமூக நீதி, ஜஸ்டிஸ், சோசியல் எகனாமிக் அண்ட் பொலிட்டிகல்’’ என்று ஆரம்பித்தார்கள். அடிக்கட்டுமானம் அதுதான். எப்படி ஒரு கட்டடத்திற்கு அஸ்திவாரம் இருக்கிறதோ, இதுவும் அது மாதிரி தான், இந்தக் கொள்கை. இதை விட்டு நகராது, எந்த ஆட்சி வந்தாலும், எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் இந்த அடிக்கட்டுமானத்தை அவர் உருவாக்கினார்.
அதில் முதலில் சொன்னது, சமூக நீதி! அந்தச் சமூக நீதி மட்டுமல்ல, அடுத்த பகுதியில் சொன்னார், சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கருத்துரிமை, பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம். எனவே, சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம். இந்த மூன்றும் சொன்னார்கள். இவை அத்தனைக்கும் விரோதமான ஒன்று இருக்கிறது என்றால், அதுதான் மனுதர்மம். பேதம், மிகப்பெரிய அளவுக்கு சமூக அநீதி! சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன். மழை பெய்தாலும் நான், என் உரையை நிறுத்த மாட்டேன். கடைசி வரைக்கும் கருத்துகளைச் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
நீட் தேர்வுக்கு அடிப்படை
மனுதர்மம் தான்!
மனுதர்மம் தான்!
ஆகவேதான், உங்களுக்கு இதில் சொல்ல வேண்டிய கருத்து என்னவென்றால், இந்த நீட் தேர்வுக்கு என்ன அடிப்படை என்றால், அந்த மனுதர்மம் தான் அடிப்படை. தயவுசெய்து நீங்கள் மேலெழுந்தவாரியாக இது ஏதோ ஒரு பரீட்சை; இதில் தேர்வானால், டாக்டராவோம்; இதுதான் இன்றைக்கு அரசியல் தலைவர்கள் உள்பட, நம்முடைய வழக்குரைஞர்கள் உள்பட, டாக்டர்கள் உள்பட நுனிப்புல் மேயக்கூடிய அளவுக்கு, மேலெழுந்த வாரி யாகச் சொல்கிறார்கள். நான் சொல்வது, ‘‘நோய் நாடி, நோய் முதல் நாட வேண்டும்.’’ கோவிட் நோய் தொற்று ஒழியவேண்டும் என்றால், என்ன செய்யவேண்டும்? கிருமிகளை அழிக்கவேண்டும். அதற்காகத்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அது மாதிரி, மனுதர்மக் கிருமிகள்தான், நீட் தேர்வுக்கு அடிப்படை. இதை தயவுசெய்து நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் இன்றைக்கான போராட்டம்.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
நீட்தேர்வு என்பது ஒரு வகையான, இந்தக் கால கட்டத்தில் இருக்கிற ஒரு சூழ்ச்சிப் பொறி. அவ்வப்போது, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆரியம் தன்னுடைய நிலையை உயர்த்தி, நிரந்தரமாக்கி, 3 சதவீதம் உள்ள மக்கள், 97% உள்ள மக்களை, அறிவற்ற மக்களாக, அறிவு பெறக்கூடாத மக்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மனுதர்மம் – இதை நான் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால், திராவிடர் கழகத்துக்காரர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள் என்று சிலர் புரியாமல் சொல்வார்கள். அப்படி நினைக்க வேண்டாம், சுருக்கமாகச் சொல்கிறேன்; இந்தப் புத்தகம், ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ இதை எழுதியது பெரியார் இல்லை; வீரமணி இல்லை. அக்னிகோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். இது எங்கள் பதிப்பல்ல; ‘நக்கீரன் பதிப்பகம்.’ இதில், முதலில் எடுத்த உடனே ஆரியம் எப்படிப்பட்டது? என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதெல்லாம், நான், பிறகு சொல்லப்போகிற விஷயங்களுக்கு, படிக்கட்டு ஒன்று, படிக்கட்டு இரண்டு, படிக்கட்டு மூன்று என்று எப்படி மேலே ஏறி வருகிறோமோ, அது மாதிரி, புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு, இருக்கும்.
சூத்திரனுக்கு, கீழ்ஜாதிக்காரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது!
இந்தப் புத்தகத்தில், எடுத்த உடனே, எப்படி இந்த ஆரியம்? மனுதர்மத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது? மனுதர்மத்தினுடைய மிக முக்கியமானது – உயர் ஜாதி – கீழ் ஜாதி மட்டுமல்ல; கடவுளே அப்படித்தான் படைத்தார்; முகத்தில், தோளில், தொடை யில், காலில்; அதற்கும் கீழே எல்லா ஜாதியும்; அதாவது ஒடுக்கப்பட்ட சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம், அய்ந்தாவது அவர்ணஸ்தர்கள். அதற்கும் கீழே அந்தப் படிக்கட்டில், உயர்ஜாதி பெண்களாக இருந்தாலும், பெண்கள் அத்தனை பேரும், 50 சதவீதம் பேரும் – மக்கள் தொகையில் என்று சொன்னால் அத்தனை பேர் என்று சொல்லும்போது, சூத்திரனுக்கு, கீழ்ஜாதிக்காரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது. இதுதான் மய்யக் கருத்தாகும். கல்வி யாருக்குச் சொந்தம்? உயர் ஜாதியாகிய எங்களுக்கே சொந்தம். ஆரியம் அன்று முதல் இன்றுவரை அதைத்தான் சொல்லுகிறது; இன்றைய திணிப்பு வடிவத்துக்குப் பெயர்தான் நீட் தேர்வு. இன்றைய உருவத்துக்கு ‘நீட்’ அவதாரம். ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்.
இந்தியாவுக்கே அறிவு சொல்லி கொடுக்கிற இயக்கம்!
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ புத்தகத்தில் தெளிவாகச் சொல்லுகிறார்கள். மனுதர்மத்தை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. இருக்கிறதை சொல்கிறோம். இதுதான் பெரிய தத்துவம் என்று சொல்கிறார்கள். நேற்று கூட ராகுல் காந்தி, நீண்ட நாளைக்குப் பிறகு, காங்கிரஸ்காரர்களே இப்பொழுதுதான் உணர்கிறார்கள். அதைச் சொல்லிக் கொடுத்தது, இந்தியாவுக்கே அறிவு சொல்லி கொடுக்கிற இயக்கம் திராவிட இயக்கம்தான்; தந்தை பெரியார்தான். நேற்று ராகுல்காந்தி சொல்லி யிருக்கிறார், ‘‘மனுதர்மம்தான் எல்லாவற்றையும் கெடுக்கிறது’’ என்று. மனுதர்மம்தான், இந்த சூழ்ச்சி என்று, நல்ல வாய்ப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சொன்னவுடன், உடனே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆத்திரப்பட்டு, ‘‘ஆகா மனுஸ்மிருதியை பற்றி அவர் கொச்சைப்படுத்திவிட்டார்’’ என்று பெரிதாகப் பேசு கிறார்கள். அதற்காகத்தான், ஆதாரத்தோடு சொல்கிறோம்.
1927 ஆம் ஆண்டிலேயே மனுதர்மத்தை முதலில் கொளுத்திய தலைவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியார் இதை உணர்ந்ததினால்தான், இந்தியாவில் முதன் முதலில், இந்த அநீதியை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, 1927 ஆம் ஆண்டி லேயே மனுதர்மத்தை முதலில் கொளுத்திய தலைவர் தந்தை பெரியார். அதற்குப் பிறகு, 2, 3 மாதங்கள் கழித்து, வடக்கே மனுதர்மத்தைக் கொளுத்திய புரட்சியாளர் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள்.
ஆதாரமின்றிப் பேசமாட்டோம்!
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். பல பேருடைய சிந்தனை அதுதான். ஒழுங்காகக் கூட்டத் தெரிந்தவர்கள் என்றால், இரண்டும், இரண்டும் நான்கு என்றால், யார் கூட்டினாலும் இரண்டும், இரண்டும் நான்குதான். ஒழுங்காகப் படித்திருக்க வேண்டும், அவ்வளவுதான். அதுமாதிரி, அவருடைய நிலை! மனுதர்மத்தைப் பற்றி ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தில் என்ன சொல்கிறார்? யாரோ, அவர் சொல்லிவிட்டார் அல்லது ராகுல் காந்தி சொல்லிவிட்டார் அல்லது வீரமணி சொல்லிவிட்டார் அல்லது தி.க.காரர்கள் சொல்லிவிட்டார்கள், தி.மு.க.க்காரர் சொல்லிவிட்டார்கள், மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டார் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய உரை என்றால், ஆதாரத்தோடு சொல்லித்தான் பழக்கமே தவிர, ஒரு விஷயம் கூட ஆதாரமின்றி இருக்காது. ஆகவேதான், எதையும் போகிற போக்கில், சும்மா பேசிவிட்டுப் போகிறவர்கள் அல்ல நாங்கள்.
அக்னிேஹாத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்!
101 வயது வரை வாழ்ந்த அக்னிேஹாத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் சொல்கிறார் கேளுங்கள்,
‘‘ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரியப் பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
‘வரும் பெண்கள் வரலாம் வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்’ என்று ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான்; ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.’’
இதுதாங்க ஆபத்தான விஷயம். எப்படி ஒரு பக்கத்தில இருக்கிற ஒரு கிருமி, எங்கேயோ ஆரம்பித்தது கோவிட் – இங்கே நாம் எத்தனை உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறோம்? அது மாதிரி ஒரு நாட்டில் இருந்து, இன்னொரு பகுதிக்கு நோய்க் கிருமி பரவும்; அதற்கு எல்லை கிடையாது.
மேலும் தொடர்கிறார், அக்னிேஹாத்திரம் இராமா னுஜ தாத்தாச்சாரியார் அவர்கள்,
‘‘வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப்பட்டதுதான் மனுதர்மம்.
பிராமணன், சத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மனு பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி சூத்திரர்கள்’’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது. மனு பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.
‘‘சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே! சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை…’’ இப்படிப் போகிறது மனு.
இதுதாங்க மனு. இதனுடைய வடிவம்தான், கல்வியைக் கொடுக்கலாகாது; எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கலாகாது. இதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மீறி அவனே படித்தால், தண்டனை.
ஆரிய மதமாக இருக்கக்கூடிய
இந்து மதத்தில் மட்டும்தான்!
இந்து மதத்தில் மட்டும்தான்!
அம்பேத்கர் எழுதினார், மனம் நொந்து சொன்னார். ‘‘நான் உலக வரலாற்றைப் படித்திருக்கிறேன்; சில நாடுகளில் அடிமைகளுக்குக் கூட கல்வியை கொடுத்திருக்கிறான், கொடுக்காமல் இருந்திருக்கிறான். ஆனால், எந்த மதத்திலும், எந்த ஒரு சமுதாயத்திலும், மீறி படித்தால், அவனுக்குத் தண்டனை என்று சொன்ன கொடூரமானது, இந்த ஆரிய மதமாக இருக்கக்கூடிய இந்து மதத்தில் மட்டும்தான். ஸநாதன மதமாக இருக்கிற இந்து மதத்தில் மட்டும்தான் என்று நொந்து எழுதி இருக்கிறார் அம்பேத்கர் அவர்கள்.
இதை அய்யா அவர்கள் பொதுமக்கள் மத்தியில் சொல்லியதுதான் கடைசிக் கூட்டம், தியாகராயர் நகரில். அந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போது, அவர் வலி பொறுக்க முடியாமல், 1973 ஆம் ஆண்டு, டிசம்பர் 19 ஆம் தேதி அங்கே உரையாற்றுகிறார். அப்பொழுது அய்யா கட்டிலில் அமர்ந்து கொண்டு, அவருடைய வயிற்றிலிருந்த டியூப் நழுவிப் போனபொழுது, வலி தாங்க முடியாமல், ‘‘அய்யோ, அம்மா’’ என்று அலறிக்கொண்டு பேசும்போது கூட, எல்லாரும் பரிதாபப்பட்டு, ‘‘அய்யா உரையை நிறுத்துங்கள்’’ என்று சொன்னார்கள். இல்லை, சரிப்படுத்திக்கிட்டேன் என்று சொல்லிவிட்டு, ‘‘நான் சாகப் போகிறவன்; அதில் சந்தேகமேயில்லை. ஆனால், உங்களை எல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகப் போகிறேனே என்பதுதான் கவலை’’ என்று சொன்னவர் தலைவர் தந்தை பெரியார். அவர் வாழ்நாளில் பதவிக்குப் போனாரா? இன்றைக்கு, இந்தப் பதவிக்கு அலைகிற அலைச்சல் இருக்கிறதே, அது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும், அதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
(தொடரும்)
