பீகாரில் அரங்கேறியுள்ள இருவேறு நிகழ்வுகள், அம்மாநிலத்தின் தற்போதைய சமூக மற்றும் நிர்வாகச் சூழலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.
பீகாரைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடியின் சிலைக்குப் பூஜைகள் செய்து, “மோடி சாலிசா” என்ற புகழ்மாலையைப் பாடி வழிபாடு நடத்தியுள்ளது. இந்நிகழ்வில் பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட நிலையில், வந்திருந்த அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும், அம்மாநிலத்தில் ரூ. 4 கோடி செலவில் பிரமாண்டமாக அமைக்கப்படவிருக்கும் “மோடிபக்த பீகார்” என்ற கோவிலின் மாதிரி வடிவத்தை (Model) செய்தியாளர்கள் மத்தியில் அந்த அமைப்பினர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதே பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட இலவச மதிய உணவைச் சாப்பிட்ட 10 முதல் 13 வயதுடைய 70 குழந்தைகளுக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகின:
குழந்தைகள் சாப்பிட்ட உணவில் சோப்புத் தூள் கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
பள்ளியின் சமையலறையைச் சோதனை செய்தபோது, உணவில் பயன்படுத்தப்படும் உப்போடு அதிகளவில் சலவைத்தூள் கலந்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பி.ஜே.பி. ஆட்சியின் லட்சணம் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த இரு சாட்சியங்களும் போதுமானவை.
கடவுள்கள் எல்லாம் எப்படி தோற்றுவிக்கப்பட்டுள்ளன வழிபாடு நடத்தப்பட்டுள்ளன என்பதற்கு இது ஒரு சாட்சியமாகும்.
தலைவர்களுக்குச் சிலை வைப்பது என்பது வேறு – புரிந்து கொள்ளத்தக்கதே!
ஆனால், சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்துவது என்பது எந்த வகையைச் சேர்ந்தது?
தந்தை பெரியார் சிலைகள் நாடெங்கும் திறக்கப்பட்டுள்ளன. அவை வழிபடுவதற்காக அல்ல. அந்த சிலைகளின் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகங்கள் பளிச்செனப் பொறிக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் இதுவழிபடுவதற்கான சிலையல்ல – வரம் கொடுக்கும் சிலையும் அல்ல என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றொன்று முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. தந்தை பெரியார் சிலைகள் திறக்கப்படுகின்றன என்றால், அதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.
மனிதர்களில் ஏற்ற – தாழ்வு கூடாது. பிறப்பின் அடிப்படையில் ஜாதி முத்திரை குத்தி, மேல் – கீழ் என்ற நிலை கூடவே கூடாது! சமூகநீதி, சமதர்மம் சமத்துவம் உள்ள சமூகத்தை உருவாக்குவதற்குத் தன் வாழ்நாளையே ஒப்படைத்தவர் தந்தை பெரியார்.
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பது அவரின் தலை சிறந்த மானுடக் கோட்பாடு.
அந்தக் கொள்கையைப் பரப்புவதன் சின்னமாக தந்தை பெரியாரின் சிலைகள் நிறுவப்படுகின்றன.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் நிலை என்ன? ஹிந்து ராஷ்டிரம் என்னும் வர்ணாசிரமத்தை ஆணி வேராகக் கொண்ட மனித குலத்தைக் கூறுபோடும் பாசிசக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் சின்னம் என்று அவரைக் கூறலாம்.
மலம் அள்ளுவது ‘கர்மயோக்’ என்ற கருத்துடையவர் அதனை நியாயப்படுத்தி அரசு சார்பில் ஒரு நூலையே எழுதியவர்.
இத்தகைய வெறுப்பு அரசியலை நடத்தும் ஒருவருக்குச் சிலையா? வழிபாடா? என்பதைச் சிந்திக்க வேண்டும்!

