சம உரிமை – சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி என்று உலக மகளிர் நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
இன்று (மார்ச் 8) – உலக மகளிர் நாள்!
மகளிர் – மக்கள் தொகையில் சரி பகுதி – மானுடத்தின் சம பிரிவு.
அவர்கள் நிலை இன்றும், அறிவியல், மின்னணுவியல் வளர்ந்த நிலையிலும், இந்த பரந்துபட்ட ‘பாரத நாட்டில்’ எப்படி இருக்கிறது?
1926 இல் உலகப் புரட்சியாளரான தந்தை பெரியார், தான் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் முதற்கொள்கை ‘‘பேத ஒழிப்பு” என்றார்!
பிறவிப் பேத ஒழிப்பு முக்கியம்!
பிறவி பேத ஒழிப்பு – உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற பேதம் மட்டுமல்ல; பிறவியினால் ஆண் என்பவன் உயர்ந்தவன், பெண் அவனுக்கு அடிமை என்ற பேதத்தையும் சேர்த்து ஒழிப்பதே பிறவி பேத ஒழிப்பு என்பது.
மக்கள் தொகையின் சரி பகுதியான பெண்கள் மானுடப் பிரிவு அடிமைகளாக, மாக்கள்போல அடமானப் பொருள்களாக, மீள முடியாத உரிமையற்ற பேதத்தில் பெரும் சுகம் காணுபவர்களாக அவர்களை இந்த நாட்டு சனாதனமும், வர்ணதர்மமும் ஆக்கி வைத்திருப்பதிலிருந்து விடுதலை பெற்று, சமத்துவமும், சம உரிமையும் பெற்றிருக்கிறார்களா?
தோற்றத்தில் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தீண்டாமை ஒழிப்புபோல இதுவும் ஒரு ‘ஒப்பனையான’ வெளித்தோற்றமே!
ஓரளவுக்கு அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள வாழ்வுரிமை, படிப்புரிமை, பணி உரிமை, அரசியல், பதவி உரிமையெல்லாம் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர் களாலும், அவர்களது போராட்டத்தினாலும், சமூகத்திலும், சட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள், பிரிட்டிஷ்காரர்களை எவ்வளவு குற்றம் சொன்னாலும், அவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் கொண்டு வந்து நிறைவேற்றிய சட்ட திட்டங்களும் காரணமாகும்!
திராவிட இயக்கம் செய்த அறிவுப் புரட்சி!
திராவிடர் இயக்கம் செய்த அறிவுப் புரட்சி, அரசியல் மாறுதல் தென்னாட்டின் வரலாற்றைப் பொன்னேடாக்கிக் காட்டுகிறது பெண்ணுரிமைக் களத்தில்!
‘திராவிட மாடலின்’ முன்னோடியாம் நீதிக்கட்சி, பெண்களுக்குத் தந்த வாக்குரிமை (1921), படிப்புரிமை – அதன் பிறகு, தந்தை பெரியாரின் முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்களுக்குச் சட்ட வடிவம் தந்து, பெண்களைக் காவல் துறையில் நியமித்ததும், பெண்களுக்குச் சொத்துரிமை முதலியனவும் வரலாற்றின் வல்லமை மிக்க சாதனைகள்!
அண்ணல் அம்பேத்கர் முயற்சியும் –
சனாதனிகளின் எதிர்ப்பும்!
டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபொழுது, பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றவிடாமல் சங்கராச்சாரியார்களும், சனாதன சடங்காச்சாரியார்களும் அரசிய லுக்கு அப்பாற்பட்ட ஓர் இணைந்த சனாதனப் போர் நடத்தித் தடுத்தனர்; ஆனால், அதன் பிறகு 2006 இல் தி.மு.க. ஒன்றிய (மத்திய) அரசில் இடம்பெற்றதின் விளைவு அதே சொத்துரிமைச் சட்டம் – அம்பேத்கரின் ராஜினாமா கண்டு மகிழ்ந்த கூட்டத்தின் மகிழ்ச்சியை மறைந்தோடச் செய்து சாதனைச் சரித்திரம் படைத்தது!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபொழுது தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது (1989).
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் முத்திரைச் சட்டம்; சதி மாதாக் கோவில் வரைக்கும் சனாதன மாடல் – வடக்கே! இங்கோ கைம்பெண் திருமணத்தை ஊக்குவித்து அரசு நிதி உதவியும் உடன் வழங்கும் சிறப்பு!
வீடு தேடி வரும் கல்வி – பெண்ணுரிமை பயன் என்பதுடன் – கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவித் திட்டம் – எத்தனைப் பெண்கள் ஒரு குடும்பத்திலிருந்து வந்து படித்தாலும்!
இது மகளிருக்குக் கல்வி நல்லதா எனக் கேள்வி எழுப்பும் அசுத்த மனத்தின் ‘தூக்குமரம்’ அல்லவா?
இப்படி எத்தனை எத்தனையோ! சனாதனம் பேசிடும் சழக்கர் கள் வெட்கப்படும் சரித்திர சாதனைக் குவியல்கள் – ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நாள்தோறும்!
ஆணாதிக்கம் குறைந்ததா?
என்றாலும், திருப்தி அடைய முடியுமா என்றால், இல்லை என்பதே நமது உறுதியான பதில். காரணங்கள் பல!
இன்னமும் பிறவிப் பேதத்தின் மற்றொரு கூறான ஆணா திக்கத்தின் அட்டகாசம் – பெண்கள்மீது குறைந்தபாடில்லை.
படித்த பெண்கள் வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதித் தாலும், ‘உரிமையாளர்கள் கணவர்களே’ என்ற பார்ப்பன மனுவின் வீச்சுதானே எங்கும்!
உடலாலும், உள்ளத்தாலும் – உரிமை எல்லைகளை மானுடத் தின் சரி பகுதியான மகளிர் அடைய நடத்திடவேண்டிய போராட் டங்களும், விழிப்புணர்வு விளக்கப் பரப்புரைகளும் நாட்டில் தேவை!
ஆணுக்குரிய அனைத்து உரிமைகளையும் பெண்கள் பெற்றிருக்கிறார்களா? என்று உள்ளத்தில் பொய்யாது ஒழுகி பதிலளித்தால், இல்லை என்பதுதானே உண்மையான பதில்!
‘‘பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெறவேண்டிய மனித சமூகம், பகுத்தறிவு இருந்தும், நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” என்றார் பெண் விடுதலைப் பெரும் போராளியாம் தந்தை பெரியார்!
அதனை நோக்கி – இலக்கு அடைய சமரசமற்ற உரிமைப் போர் ஒன்றேதான் வழி!
வீதிக்கு வந்து போராடுவீர், பெண்களே!
பெண்களுக்குள் அலங்கார வியாதி, ஆண்களையும் தொற்றிக் கொண்ட காட்சிதான் மிச்சம்!
சம உரிமை, சம அதிகாரம் பெற்றால் உலகத்தின் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி!
தந்தை பெரியாரும், தொடர்ந்து திராவிட இயக்கத் தலைவர்களும், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் பேணிய பெண்ணுரிமை எழுச்சியையே இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சரும் தொடருகிறார்.
அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தடுப்பணையை உடைத்து இந்த உரிமை வெள்ளம் சீறிப் பாய்ந்து வெற்றிக் கரை சேர்க்க அனைத்து முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணைவோம்!
பழைமைவாதக் குப்பையான சனாதனத்தின் முதுகெலும்பை முறிப்போம்!
அதுதான் பெண்ணின் நிரந்தர விடுதலையை நிலைக்க வைக்கும்.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம்(?) வெள்ளி விழா ஆண்டை சந்திக்கும் நிலை – ஆண்கள் ஆதிக்கம் எளிதில் நிறைவேற்ற விடுமா?
மகளிர் மணிகளே, உணருங்கள், அதற்காக உழைக்க வாரீர்! வாரீர்!! வீதிக்கு வந்து போராடுவீர்!!!
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.3.2023