உலகளாவிய காலநிலை மாற்றத்தால் ஏற்கெனவே பூமியின் வெப்பநிலை அதிகரித்து வரும் வேளையில், பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘சூப்பர் எல் நினோ’ புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. “ஏற்கெனவே சுட்டெரிக்கும் உலகிற்கு இந்தச் சூழ்நிலை எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றுவது போல் அமையும்” என அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். 2026ஆம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் மேலும் வலுவடைந்து, உலகின் பெரும்பாலான பகுதிகளில் வானிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ என்றால் என்ன?
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ‘எல் நினோ தென் திசை ஊசலாட்டம்’ (ENSO) என்ற இயற்கையான காலநிலை நிகழ்வின் ஒரு பகுதியே எல் நினோ ஆகும். 1600களில் பெரு நாட்டு மீனவர் ஒருவரால் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்நிகழ்வு, பின்வரும் முக்கிய மாற்றங்களால் தீர்மானிக்கப்படுகிறது:
வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.
மேற்கு பசிபிக் பெருங்கடலில் (ஆஸ்திரேலியாவின் டார்வின்) வளிமண்டல அழுத்தம் அதிகமாகவும், மத்திய பசிபிக் பெருங்கடலில் குறைவாகவும் இருக்கும்.
வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்காக வீசும் ‘டிரேட் காற்றுகள்’ வலுவிழந்து எதிர்த்திசையில் வீசுவதால், வெப்ப நீர் கிழக்கு நோக்கி நகர்கிறது.
எல் நினோ மற்றும் லா நினோ ஆகியவை ஒன்றிற் கொன்று எதிரெதிர் நிகழ்வுகள் ஆகும். லா நினோ காலங்களில் நல்ல பருவமழையும், உலகளாவிய வெப்பநிலையில் குறைவும் ஏற்படும்.
உலகளாவிய தாக்கங்கள்
உலக வானிலை ஆய்வு மய்யத்தின்படி, எல் நினோ உருவாவதற்கான வாய்ப்பு 80% ஆக உள்ளது. இதன் உலகளாவிய பாதிப்புகள் பின்வருமாறு:
வெப்பநிலை அதிகரிப்பு
எல் நினோவின் போது கடல் நீர் வளிமண்டலத்தில் அதிக வெப்பத்தை வெளியிடுவதால் உலகளாவிய வெப்பநிலை உயர்கிறது. (இதன் தொடர்ச்சியாகவே 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகள் மிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகின).
தீவிர வானிலை மாறுபாடு
தென் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் அதிக மழையும், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் வறட்சியும் ஏற்படும்.
பொருளாதார மற்றும் உணவு நெருக்கடி
கடலில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மீன் வளம் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கும். 2015-2016இல் ஏற்பட்ட எல் நினோவால் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு நெருக்கடியைச் சந்தித்தனர்.
இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்
இந்தியாவின் பருவமழையில் எல் நினோ கடுமையான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் கணிப்புப்படி, இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் சராசரி மழைப்பொழிவு சுமார் 90 சதவிகிதமாகக் குறையக்கூடும்.
விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி பாதிப்பு
இந்தியாவின் நீர் வளங்களில் சுமார் 70% பருவ மழையையே நம்பியுள்ளன. மேலும், விளைநிலங்களில் 50% க்கும் அதிகமானவை முறையான நீர்ப்பாசன வசதியின்றி முற்றிலும் மழைநீரையே சார்ந்துள்ளன. மழை குறையும் போது உணவு உற்பத்தி நேரடியாகப் பாதிக்கப்படும்.
முக்கிய மண்டலங்களில் வறட்சி
இந்தியாவின் ‘பருவமழையின் முக்கிய மண்டலம்’ (monsoon core zone) என்று அழைக்கப்படும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய விவசாயப் பகுதிகளிலும், மத்திய, தெற்கு மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கமும் ஏற்றுமதி தடையும்
கடந்த முறை எல் நினோ தாக்கிய போது உணவு உற்பத்தி குறைந்து பணவீக்கம் அதிகரித்தது. இதனால் இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதியை நிறுத்தியது. உலகிலேயே அரிசி ஏற்றுமதியில் முதன்மையாக உள்ள இந்தியா மற்றும் சர்க்கரை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா, தனது ஏற்றுமதியைக் குறைத்தால் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயரும். உள்நாட்டிலும் ஏழை மக்கள் பெரும் பொருளாதாரச் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.
மனித உழைப்பும், வெப்ப அலையும்!
ஏற்கெனவே இந்தியாவில் கோடை வெப்பம் 45, 46 மற்றும் 47 டிகிரி செல்சியஸைத் தொட்டு வருகிறது. இந்த எல் நினோ வெப்ப அலையால் விவசாயத் தொழிலாளர்கள், அன்றாடக்கூலி மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள்
இந்தியாவில் எல் நினோ 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான மழையைக் கொண்டுவர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிப்பதால், உடனடியாகப் பின்வரும் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்:
நீர் மேலாண்மை: நீர்நிலைகளைத் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பைத் தீவிரப்படுத்துதல் மற்றும் இருக்கும் நீர் ஆதாரங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திட்டங்களை வகுத்தல்.
மாற்று விவசாய முறைகள்: வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மற்றும் குறைந்த தண்ணீரைப் பயன் படுத்தும் மாற்றுப் பயிர்களை (எழுவகைத் தானியங்கள், சிறுதானியங்கள்) பயிரிட விவசாயிகளை ஊக்குவித்தல்.
உணவு தானியக் கையிருப்பு: எதிர்கால உணவுப் பற்றாக்குறையையும் பணவீக்கத்தையும் சமாளிக்க, அத்தியாவசிய உணவுத் தானியங்களைப் போதிய அளவில் சேமித்து வைப்பது அவசியம்.
தொழிலாளர் பாதுகாப்பு: கடுமையான வெப்ப அலைகளின் போது திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைத்தல் மற்றும் மருத்துவக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்தல்.
எல் நினோ என்பது ஓர் இயற்கை நிகழ்வாக இருந்தாலும், மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்துடன் இணையும் போது அது பேரழிவாக மாறுகிறது. அய்.நா.வின் எச்சரிக்கையை வெறும் முன்னறிவிப்பாகக் கருதாமல், ஒரு ‘அவசர காலநிலை எச்சரிக்கையாக’க் கருதி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டால் மட்டுமே, நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க முடியும்.
