மக்களவைத் தேர்தலிலும் ஒன்றிணைவோம், வெற்றி பெறுவோம்!

Viduthalai
3 Min Read

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்

அரசியல்

சென்னை, மார்ச் 11-  மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (அய்யுஎம்எல்) 75ஆவது ஆண்டு பவள விழா மற்றும் அகில இந்திய மாநாடு சென்னையில் நேற்று(10.3.2023) நடை பெற்றது.

இதையொட்டி, வாலாஜா பள்ளி வாசலில் 75 முஸ்லிம்களுக்கு இலவசத் திருமணம், ராஜாஜி ஹாலில் உறுதி மொழி ஏற்பு மற்றும் தியாகிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. மாலையில் கொட்டி வாக்கத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், பவள விழா மாநாடு நடைபெற்றது. அய்யுஎம்எல் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் தலைமை வகித்தார்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், அய்யுஎம்எல் மாநிலப் பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், கேரள மாநிலத் தலைவர் செய்யது சாதிக்அலி சிஹாப் தங்ஙள், தேசியப் பொதுச் செயலாளரும், கேரள மாநில எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகமது பஷீர், துணைத் தலைவர் எம்.பி.அப்துல் சமது ஸமதானி, பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப், மாநிலப் பொருளாளர் ஷாஜகான், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான், மாநில துணைத் தலைவர் வி.நவாஸ்கனி உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

முதலமைச்சருக்கு 

பேனா சிலை பரிசளிப்பு

மாநாட்டில், சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் தொடர் பான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு ஆளுயர பேனா சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:

பவள விழாவையொட்டி மாநில தலைநகரங்களில் விழா நடத்தப்பட்டு, இறுதியாக டில்லியில் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். அந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்றுப் பேச வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை டில்லியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிறுவ வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்கான முயற்சியை எடுத்துள்ளோம். சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கை இருக் கிறது. மாநில முதலமைச்சராக மட்டு மின்றி, பிரதமராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பேராசிரியர் காதர் மொய்தீன் டில்லி மாநாட்டுக்கு அழைத்துள்ளார். நிச்சயம் பங்கேற்பேன். மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமானவை நிறைவேற்றப்படும். நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. 

இதற்காக குழு அமைக்கப் பட்டு, பரிந்துரை பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான கோப்பு, விரைவில் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் படும். திராவிட மாடல் ஆட்சியின் சமூக விழுமியங்கள் நாடு முழுவதும் பரவ வேண்டும்.

 இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல் சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மத் துக்குத்தான் உண்டு. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு என ஒற்றைத் தன்மையாக இந்தியாவை மாற்ற நினைப்பவர்கள், சமூகநீதிக்கு எதிரானவர்கள், சமதர்மத்தை ஏற்கா தவர்கள்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்துக்குக்கூட ஒப்புதல் தராமல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமையில்லை என்கிறார் ஆளுநர். இந்த உரிமையில்லாத மாநிலத் துக்குத் தான் அவர் ஆளுநராக இருக்கிறாரா? இப்படித் தான் ஆளுநர் செயல்படுவதா? இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2024 மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். திராவிட மாடல் ஆட்சியின் தத்துவங்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *