தெலங்கானா தனியார் கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் விடுதிக் கண்காணிப்பாளர் ஆகியோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவனை ஜாதிரீதியாக கொடுமைப்படுத்தியதால் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார், இந்தக் கொலையில் கல்லூரி முதல்வர், பேராசிரியர், விடுதிக் காப்பாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நரசிங்கி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவர் நகுலா சாத்விக் (வயது 16) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரி நிர்வாகம் அளித்த சித்ரவதையால்தான் மாணவர் இந்த முடிவை எடுத்து உள்ளார் என அவரது பெற்றோர் குற்றச்சாட்டு கூறினர். இந்த வழக்கில் கல்லூரி முதல்வர் ஆச்சார்யா, துணை முதல்வர் சிவராமகிருஷ்ணா, வார்டன் நரேஷ், துணை முதல்வர் ஷோபன் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி முதன்மையர் ஜெகன் தப்பியோடி விட்டார். படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டிய ஆசிரியர்களே துன்புறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசி வந்து உள்ளனர். வாட்ச்மேன் வேலைக்குக்கூட போக முடியாது என அந்த மாணவரை கல்லூரி முதன்மையர் திட்டியுள்ளார் என விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தற்கொலை பற்றி நடந்த விசாரணை முடிவில் வெளியான அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நகுலா சாத்விக் விடுதி கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை எனக் கடிதம் வழியே புகார் தெரிவித்து உள்ளார்; அதற்குப் பதிலடியாக, முன்பு கழிப்பறைகளைக் கழுவிக் கொண்டு இருந்தவர்கள் இன்று படிக்கவந்துவிட்டார்கள் என்று தொடர்ந்து, நகுலா சாத்விக் பற்றி பொதுவெளியில் அவதூறு ஏற்படுத்துவது தொடங்கியது. குடிநீர், உணவு, கழிப்பறை தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை பற்றி கேள்வி எழுப்பிய மாணவரை விடுதி வார்டன் தாக்கிப் பேசி வந்து உள்ளார். அந்த வகையில், அந்த மாணவரை சில சமயங்களில் தகாத வார்த்தை களால் திட்டுவதுடன், அடிக்கவும் செய்து உள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வரும் சேர்ந்து கொண்டு அந்த மாணவரை மனம் மற்றும் உடல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது. இதுபோன்று, கல்லூரி முதல்வர் ஜெகன், மாணவரைக் கூப்பிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, வசைபாடி உள்ளார். அவரது அறை முன்பு மணிக்கணக்கில் நிற்க வைத்து உள்ளார். துணை முதல்வர், மாணவரிடம் கடுமையாகப் பேசி, ஏளனம் செய்ததுடன், பிற மாணவர்கள் முன்னிலையிலும் கேலி செய்தும் உள்ளார் என அறிக்கை தெரிவிக்கின்றது.
இதுபற்றி தனது அண்ணன் மிதுனிடம் மாணவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தினரிடம் மிதுன் கேட்டு உள்ளார். அதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர், நாங்கள் இப்படித்தான் பாடம் புகட்டுவோம், கல்லூரியில் படிப்பைத் தொடர வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கல்லூரியை விட்டு வெளியேறலாம் எனத் திமிராகப் பதில் கூறியுள்ளனர். தெலங்கானாவில் ஒரு வாரத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தெலங்கானாவின் வாரங்கால் மாவட்டத்தில் காகத்தியா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி பிரீத்தி. இளநிலை மருத்துவரான அவர், தற்கொலை செய்து கொண்டார். பிரீத்தி ராகிங் கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தில், எம்.ஜே.எம். மருத்துவமனையின் 2-ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதேபோன்று, நிஜாமாபாத் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தாசரி ஹர்ஷா என்பவர், தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானாவில், மற்றொரு சம்பவத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த மாணவி ஒருவர் தனது உறவினர் வீட்டில் இறந்து கிடந்து உள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மும்பை, சென்னை மற்றும் போபால் போன்ற நகரங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சமீப நாட்களாக சில மாணவர்கள் கல்லூரியில் நடக்கும் ஜாதிய வன்கொடுமைகள் காரணமாக தங்களுயிரை மாய்த்து வருகின்றனர். இப்படி ஜாதிய ரீதியாக கல்வி நிலையங்களில் நடக்கும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று கூறி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் அமைப்பினர் கலந்துரையாடல் ஒன்று நடத்திய போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் தாக்குதல் நடத்தி தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டவர்களின் படங் களை உடைத்து வீசினர், மேலும் குறிப்பாக தமிழ் மாணவர்கள் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் மீண்டும் உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
சுதந்திரத்தின் பவள விழா கோலாகலமாகக் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. ஆனால் இங்கே பிறப்பின் அடிப்படையில் பேதம் என்ற கொடிய நோய் ஒழிந்த பாடில்லை.
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று கேட்டார் தந்தை பெரியார். அதற்காக ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தைக் கூட நடத்தினார். ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சிறை ஏகினர். இந்த விலை கொடுத்தும்கூட இந்தியாவில் ஜாதியும் தீண்டாமையும் தலை விரித்து ஆடுவது வெட்கக் கேடே!