சென்னை, ஜூலை 12 தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் இன்று (12.7.2026) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கடலூர் மாவட்டம குப்பநத்தத்தில் தலா 7 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடில் 6 செமீ, அரியலூர் மாவட்டம் செந்துறை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, அவலூர்பேட்டை, கோவை மாவட்டம் உபாசி, சோலையார், கடலூர் மாவட்டம் விருதாச்சலம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
வேலூர் தி.மு.க. அலுவலகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு
2 ஆயிரம் நாள்களைக் கடந்த உணவுக் கொடை
வேலூர், ஜூலை 12 கரோனா காலத்தில், ஏழைகளின் பசி தீர்ப்பதற்காகத் தொடங்கிய நாள்தோறம் உணவுக்கொடையை இரண்டாயிரம் நாள்களைக் கடந்தும் தனது சொந்த செலவில் செயல்படுத்தி வருகிறார் வேலூர் தி.மு.க மாவட்டச் செயலாளரான ஏ.பி.நந்தகுமார்.
வேலூரில் உள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்தில், இன்று (12.7.2026) தவிர்த்து வாரந்தோறும் 6 நாள்களிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
2019-ஆம் ஆண்டு, கரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த சமயம், உணவகங்களும் மூடப்பட்டிருந்ததால், ஆதரவற்ற பலரும் பசியால் வாடினர். அப்போது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்த தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், தன்னால் முடிந்த உதவிகளை ஏழை, எளிய மக்கள் பெரும்பாலானோருக்குச் செய்தார்.
சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், நெய் சாதம், வெஜ் பிரியாணி என்று தினம் ஒரு உணவு சமைத்து பரிமாறப்பட்டு வருகிறது. தொடக்கத்தில், தினந்தோறும் ஆயிரம்பேர் சாப்பிடும் வகையில் உணவு சமைக்கப்பட்டது.
கரோனா காலத்துக்குப் பிறகு, எண்ணிக்கை குறைந்ததால், வழக்கமான நடைமுறையாக தினமும் 250 பேருக்குச் சமைக்கப்படுகிறது. கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்திலும், இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நந்தகுமார், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் ஒருநாள்கூட இடைவெளிவிடாமல் மதிய உணவு வழங்குவதை வாடிக்கையாக்கியிருந்தார்.
மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நந்தகுமார், வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், தனது உணவுக் கொடை சேவையை இரண்டாயிரம் நாள்களைக் கடந்தும் சிறப்பான முறையில் செய்துகொண்டிருக்கிறார்.
இதுபற்றி, தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாரிடம் கேட்டபோது, “கரோனா காலத்தில் மக்கள் எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்களுக்கு நம்மளால முடிஞ்சதை செய்யணும்ங் கிறதுக்காக மதிய உணவு வழங்குற சேவையை கட்சி அலுவலகத்தில் தொடங்கி வச்சேன்.
ஆதரவற்றவங்க முதற்கொண்டு அன்றாடங் காய்ச்சியா இருக்கிற உழைக்கிற மக்கள் வரையிலும் வயிறாரச் சாப்பிடுறாங்க. இதுல பெரிய மனநிறைவு கிடைக்குது. மதிய உணவு வழங்குறதை எப்பவும் நிறுத்த போறது கிடையாது’’ என்றார் புன்னகைத்து.
