சென்னை, ஜூலை 12- ஆன்மீகச் சடங்குகள் என்ற பெயரில் போதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இன்றிச் செய்யப்படும் காரியங்கள் எப்படி இளம் உயிர்களைப் பறிக்கின்றன என்பதற்கு மற்றுமொரு சான்றாகச் சென்னையில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜனனி (19), இவர் வீட்டில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தபோது எதிர்பாராதவிதமாக ஆடையில் தீப்பிடித்தது. தீமளமளவெனப் பரவியது. இதில் தீக்காயம் அடைந்த அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பகுத்தறிவுக் கண்ணோட்டமும், விழிப்புணர்வும்!
இறைவனை வழிபடக் கற்பூரம் ஏத்துவதாக நினைத்து, தங்களின் விலைமதிப்பற்ற உயிரையே மாய்த்துக்கொள்ளும் அவலம் நம் சமூகத்தில் தொடர்கதையாகி வருகிறது. இதைக் வெறும் “விதி” என்றோ அல்லது “கடவுளின் கட்டளை” என்றோ கடந்து போய்விட முடியாது. இதன் பின்னுள்ள அறிவியல் மற்றும் பாதுகாப்பு அற்ற சூழலையே நாம் கவனிக்க வேண்டும்.
கற்பூரம் என்பது ஒரு வேதிப்பொருள்: கற்பூரம் (Camphor) என்பது எளிதில் ஆவியாகக் கூடிய, மிக வேகமாகத் தீப்பற்றக்கூடிய ஒரு வேதிப்பொருள். அதை ஏற்றி வழிபடுவதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. மாறாக, அதன் மூலம் வெளிப்படும் புகை சுவாசத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடியது.
வழிபாட்டின் போது பெண்கள் அணியும் பட்டு அல்லது சிந்தடிக் ஆடைகள் மிக எளிதில் தீப்பற்றக்கூடியவை. பக்திப் பரவசத்தில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாததே இதுபோன்ற விபத்துகளுக்கு முதன்மைக் காரணம்.
தீயைக் கையாள்வதில் எவ்வித பாதுகாப்பு நெறிமுறைகளையும் போதிக்காத சடங்கு முறைகளே இந்த உயிரி ழப்புகளுக்குக் மறைமுகக் காரணம்.
மனித உயிரை விடவும், உடலை விடவும் இங்கே எந்தச் சடங்கும், வழிபாடும் பெரியதல்ல.
பகுத்தறிவு என்பது; எதையும் அறிவியல் பூர்வமாக அணுகுவதே ஆகும். தீயைக் கொண்டு செய்யும் வழிபாட்டு முறைகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதே புத்திசாலித் தனம்.
இனிமேலாவது கற்பூரம், விளக்கு போன்ற ஆபத்தான வழிபாட்டு முறைகளில் இருந்து மக்கள் விலகி, தங்களின் மற்றும் தங்களைச் சார்ந்த வர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மறைந்த மாணவி ஜனனியின் மரணம், மூடத்தனமான சடங்கு களால் ஏற்படும் விபத்து களுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு பாடமாக அமையட்டும்!
