இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக அதிகமான போர்களைத் தற்போது நாம் எதிர்கொள்கிறோம். இந்த மோதல்களில் கொல்லப் பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என மார்ச் மாதம் கூடிய அய்.நா. பாதுகாப்பு அவையில் பேசிய அரசியல் விவகாரங்களுக்கான தலைவர் ரோஸ்மேரி டிகார்லோ தெரிவித்தார்.
குண்டுகளின் சத்தம் எந்த நாட்டில் கேட்டாலும், அந்தச் சத்தத்தால் அதிகம் நடுங்குவது பெண்களின் நெஞ்சமே.
மனிதன் குழுவாக வாழத் தொடங்கிய நாள் முதல் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலம் வரை போர் என்பது ஒரு தொடர்கதைதான். ஆனால், இந்தக் கதையில் பெண்களுக்கு எப்போதும் ஒரே வேடம்தான்; பலிபீடத்தில் நிற்பவர்களாக. போர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் கடைசி முன்னுரிமையாக மாற்றிவிடுகின்றன. இல்லை, உண்மையில் சொல்லப்போனால் அவர்களை முன்னுரிமைப் பட்டியலிலிருந்தே நீக்கிவிடுகின்றன.
அய்.நா. பொதுச்செயலாளர் வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஒரு கொடூரமான உண்மையை முன்வைக்கிறது. போர்கள் நடக்கும் பகுதிகளிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் சுமார் 67.6 கோடி பெண்கள் வசிக்கின்றனர். இது ஒரு புள்ளிவிவரம் மட்டுமல்ல; ஒவ்வொரு இரவும் குண்டுச் சத்தம் கேட்கும் தூரத்தில் தூக்கமின்றி விழித்திருக்கும் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கை. 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் போரால் பலியாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. போர் தொடர்பான பாலியல் வன்முறைகள் இரண்டே ஆண்டுகளில் 87 சதவீதம் உயர்ந்துள்ளன.
போரின் கொடூர மனநிலை
மானுடவியலாளர் மார்கரெட் மீட் சொன்னது இன்றும் எதார்த்தத்தில் பிரதிபலிக்கிறது. ஆணாதிக்கச் சமூகங்களில் பெண்கள் ஓர் இனத்தின், ஜாதியின், மதத்தின், தேசத்தின் ‘கவுரவக் காவலர்களாகப்’ பார்க்கப்படுவதால், போர்க் காலங்களில் அவர்களின் உடல்கள் நேரடிப் போர்க்களங்களாக மாற்றப்படுகின்றன. எதிரியை மட்டுமல்ல, எதிரியின் பெண்களையும் அழிக்கும்போதுதான் ‘வெற்றி’ முழுமையடைகிறது என்ற கொடூர மனநிலை போரின் மரத்துப்போன வாதமாக இன்றும் உள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போரின் தற்செயலான பக்கவிளைவு அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட போர்த்தந்திரம் (Tactic of War). குடும்பங்களை உள்ளிருந்து சிதைக்கவும், ஒரு மக்கள் கூட்டத்தை உளவியல் ரீதியாக அழிக்கவும், சமூகத்தையே தகர்க்கவும் இது வெளிப்படையாகவே பயன்படுத்தப்படுகிறது. போர் தொடர்பான பாலியல் வன்முறைகள் 2023 முதல் 2024 வரை 87 சதவீதம் அதிகரித்துள்ளன என்ற புள்ளிவிவரம் ஒருவரை உலுக்கவில்லை என்றால், நம் மனசாட்சி மழுங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.
ஈரான், பாலஸ்தீனம், சூடான், ஏமன், சிரியா, ஆப்கானிஸ்தான் என உலகின் கண் முன் இருந்து மறைக்கப்பட்ட இடங்களில் உள்ள பெண்கள் அண்மை ஆண்டுகளில் ஒரு நாள் கூட அமைதியை அனுபவித்ததில்லை.
விற்பனைப் பொருளாக…
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்தபோதும் பெண்கள் மீது வன்முறை இருந்தது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அது மேலும் கொடூரமானது. UNHCR தரவுகளின்படி, அந்நாட்டில் 87 சதவீதம் பெண்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை அனுபவித்துள்ளனர்; 62 சதவீதம் பேர் உடல், மன மற்றும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியுள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதுடன், தனியாக வெளியே நடக்க முடியாத சிறையாக்கப்பட்ட வாழ்க்கை திணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் நடக்கும் சூடானில் பெண்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு, சரக்கு வாகனங்களில் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு அடிமைச் சந்தைகளில் விற்கப்படுகின்றனர். கட்டாயத் திருமணம், பாலியல் அடிமைத்தனம் இவையாவும் வெறும் போர்க்காலக் கொடுமைகள் அல்ல; ஆயுத அமைப்புகளுக்கு நிதியும் ஆட்களும் திரட்டும் ஒரு திட்டமிட்ட வணிகமாகவும் உள்ளன.
உதாரணமாக, 2014-இல் ஈராக்கின் சின்ஜார் பகுதியில் அய்எஸ்அய்எஸ் பயங்கரவாத அமைப்பு 6,000-க்கும் மேற்பட்ட யாசிதி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைப்படுத்தி, சந்தைகளிலும் இணையத்திலும் விற்பனை செய்து பல கோடிகளை ஈட்டியது. மனித உடலை ஒரு சரக்காக விற்கும் இந்த அவலம் இன்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் நடைமுறை உண்மையாக உள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவமனைகள் தகர்க்கப்படும்போது எதிர்காலமும் அழிகிறது
போர்களில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இது வெறும் உள்கட்டமைப்புச் சேதம் அல்ல; பெண்களின் உயிர்வாழும் உரிமையை நேரடியாகத் தாக்கும் ஆயுதம். இது ஓர் இனத்தின் எதிர்காலத்தையே அழிக்கும் போர்க்குற்றமாகும்.
காசாவில் 84 சதவீதம் சுகாதார நிலையங்கள் இஸ்ரேலால் அழிக்கப்பட்டுவிட்டன. மூன்றில் ஒரு பங்கு மருத்துவமனைகள் மட்டுமே, அதுவும் பகுதியளவில் இயங்குகின்றன. மின்சாரம் இல்லை, சுத்தமான நீர் இல்லை, மயக்க மருந்து இல்லை. இந்த நிலையில்தான் கர்ப்பிணிகள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறார்கள். வலியை விடக் கொடுமையானது, இதை நாம் ‘சாதாரணம்’ என்று ஏற்றுக்கொண்டு கடந்து போவது.
ஏமனில் 20 சதவீதம் மருத்துவமனைகள் மட்டுமே தாய்-சேய் நலச் சேவைகளை வழங்குகின்றன. இதனால் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பிரசவத்தில் உயிரிழக்கிறார். போரினால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் காயம் காரணமாகக் காசாவில் மட்டும் கருச்சிதைவு விகிதம் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. சூடான், காங்கோ, ஏமன் எனப் பட்டியலை நீட்டிக்கொண்டே போனால் இந்தக் கொடுமையின் உண்மையான அளவை மனசாட்சி தாங்காது.
லட்சக்கணக்கான பெண்கள் மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் இல்லாமல் கூடாரத் துணிகளையும் பழைய துணித் துண்டுகளையும் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதன் விளைவாகச் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட நோய்கள் தொடர்கின்றன. வெடிகுண்டு வீசுவது மட்டுமல்ல, ஒரு பெண்ணுக்குச் சுகாதாரத் துணியை மறுப்பதும் யுத்தம்தான்.
இடம்பெயர்வு: பெண்களின் தலையில் சுமை
போர்க்காலத்தில் குடும்பத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது, குழந்தைகளையும் முதியவர்களையும் காப்பாற்றுவது போன்ற பொறுப்புகளைப் பெண்களே சுமக்கிறார்கள். அகதி முகாம்களின் ஒளிப்படங்களில் நாம் எப்போதும் பெண்களையும் குழந்தைகளையுமே காண்கிறோமே, ஏன்? அது தற்செயல் அல்ல; அது அவர்கள் மீது திணிக்கப்பட்ட பொறுப்பின் சித்திரம்.
உலகில் இடம்பெயர்ந்த 8 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். இடம்பெயர்ந்த பெண்கள் நிலம், கால்நடை, வீடு என அனைத்தையும் இழக்கிறார்கள். சொத்துப் பத்திரங்கள் பெண்களின் பெயரில் இல்லாததால் அவர்களுக்கு எந்தச் சட்டப்பூர்வ பாதுகாப்பும் இல்லை. உதவிப் பொருட்கள் பெறுவதிலும், கல்வி மற்றும் பயிற்சியிலும் சமத்துவமற்ற நிலையே அவர்களுக்குக் கிடைக்கிறது.
பேச்சுவார்த்தை மேசையிலும்
அவர்களுக்கு இடமில்லை
போரால் மிகவும் பாதிக்கப்படுவது பெண்கள். ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் முக்கிய இடங்களில் அவர்களுக்கு இடம் தரப்படுவதில்லை என்பது இந்த உலகின் மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்று. 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற 10 அமைதிப் பேச்சுவார்த்தைகளில் 9-இல் பெண் பேச்சுவார்த்தையாளர்கள் யாரும் இடம் பெறவில்லை. உலகளவில் பேச்சுவார்த்தை யாளர்களில் 7 சதவீதமும், மத்தியஸ்தர்களில் 14 சதவீதமும் மட்டுமே பெண்கள். செயற்கை நுண்ணறிவு காலத்திலும் கூட, போர்ப் பகுதிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான முறையான தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. அதாவது, அவர்களின் வலி கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகிறது. பெண்களுக்குத் தேவைப்படுவது வெறும் அனுதாபம் அல்ல; அதிகாரம், பாதுகாப்பு மற்றும் சமமான பிரதிநிதித்துவம்.
ஆயுதத்திற்குச் செல்லும் பணம்,
உயிருக்கு வருவதில்லை
2024-2025-இல் உலக ராணுவச் செலவு 2.7 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. ஆனால், போரால் பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்புகளுக்கு வெறும் 0.4 சதவீத நிதியே ஒதுக்கப்படுகிறது. இந்த இரட்டை நிலைப்பாடு மனித நாகரிகத்திற்கே வெட்கக்கேடானது.
2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதலின் முதல் 24 மணி நேரத்தில் மட்டும் 779 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன. ஆயுதத் தயார் நிலைக்கு 630 மில்லியன், போர் விமானங்களுக்கு 271 மில்லியன், ஒரு விமானம் தாங்கிக் கப்பல் குழுவை ஒரு நாள் இயக்க 6.5 மில்லியன் எனச் செலவாகிறது. இந்த எண்களைப் பார்க்கும்போது, அதே பணத்தில் எத்தனை பெண்களின் வாழ்க்கை மாறியிருக்கும் என்று யோசிக்காமல் இருக்க முடியாது.
ராணுவ நிதியில் வெறும் 10 சதவீதத்தைப் பெண்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தினால் 15 ஆண்டுகளில் உலக வறுமையை ஒழிக்கலாம். 2030-க்குள் வறுமையை ஒழிக்க ஓர் ஆண்டுக்கு 93 பில்லியன் டாலர்கள் போதும். இது ராணுவச் செலவில் 4 சதவீதத்திற்கும் குறைவு. ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் ஒரு பில்லியன் டாலர் 11,200 வேலைகளை உருவாக்கும். அதே தொகையைக் கல்வியில் முதலீடு செய்தால் 26,700 வேலைவாய்ப்புகள் உருவாகும்; எதிர்காலம் மேம்படும். சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லாமல் ஆண்டுதோறும் உயிரிழக்கும் 8 லட்சம் பெண்களைக் காப்பாற்றலாம். தற்போதைய வேகத்தில் பாலின சமத்துவம் வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும். இந்த நிதியைப் பெண்களின் கல்விக்கும் பாதுகாப்பிற்கும் திருப்பினால் அந்தத் காலக்கட்டத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.
பாதுகாப்பான உலகம் என்பது ஆயுதங்களால் உருவாவதல்ல. அது வறுமைக்கு எதிரான முதலீட்டால், கல்வியால், ஒவ்வொரு பெண்ணின் கரங்களிலும் உறுதி செய்யப்படும் சுதந்திரத்தால் உருவாகும். உலக அமைதியும் பெண்களின் பாதுகாப்பும் ஏகாதிபத்திய நாடுகளிடமும் ஆதிக்கவாதிகளிடமும் கையேந்துவதால் கிடைக்காது. அது அனைவரும் இணைந்து முன்னெடுக்கும் உறுதியான போராட்டத்தின் மூலமே வென்றெடுக்கப்பட முடியும். ஏனென்றால், வரலாறு எப்போதும் அதிகாரத்திற்கு எதிராகக் கலகக் குரல் எழுப்புபவர்களால் தான் சரியாக எழுதப்பட்டுள்ளது.
