பச்சை கடல் ஆமைகள் பூமியின் காந்தப்புலத்தை திசைகாட்டியாக பயன்படுத்துகின்றன. நீண்ட நேரம் ஒரே திசையில் நீந்தும் இந்த ஆமைகள், வழி மாறியதை உணரும் போது மட்டுமே நிறுத்தி, தமது திசையை சரி செய்து கொள்கின்றன. எனவே, சுற்றி வளைத்துச் சென்றே இவை இலக்கை அடைகின்றன என அறிவியலாளர் கூறுகின்றனர்.
கிச்சுக்கிச்சு மூட்டப்படும் போது சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளும், மனிதக் குழந்தைகளும் ஒரே தாளகதியில் சிரிக்கின்றன என்கிறது, பிரிட்டனிலுள்ள வார்விக் பல்கலைக்கழக அறிவியலாளர்களின் ஆய்வு. குரங்குகளை விட மனிதக் குழந்தைகளின் சிரிப்பின் வேகம் அதிகம். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியால் சிரிப்பின் வேகம் அதிகரித்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தீக்காயங்களால் ஏற்படும் தழும்புகளை தடுக்க உதவும், ‘உயிரி அச்சு மை’ அல்லது ‘ஜெல்’லை உருவாக்க, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இன்வென்டியா லைப் சயின்ஸின் அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இன்வென்டியா உருவாக்கிய உயிரி அச்சு மை, ஆரோக்கியமான தோலை மறுபடியும் வளரச் செய்ய உடலைத் துாண்டுகிறது.
