“வரலாற்றை அறிவோம்!” தாழ்த்தப்பட்ட மக்களும் – கோவில் நுழைவுப் போராட்டமும்!

Viduthalai
4 Min Read

ஹிந்து மதம் எனும் பெயரில் பெரும்பான்மை மக்களை ஒன்றாகக் கணக்குக் காட்டினாலும், அதில் உள்ள ஜாதி ஏற்றத் தாழ்வுகள், மனிதர்களை வேறுபடுத்தியே வைத்திருந்தன. பெரும்பான்மை மக்களில் மிக மிக சிறுபான்மையினரான பார்ப்பன சமுதாயத்தவரே கடவுளின் நேரடிப் பிரநிதிகள் போல அனைத்து அதிகாரமும் உரிமையும் செல்வாக்கும் கொண்டவர்களாக இருந்தனர்.

ஆண்ட பரம்பரையினராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சூத்திரர்களுக்கு அரசுப் பணியிடங்கள் உள்பட எல்லா இடங்களிலும் புறக்கணிப்பே தொடர்ந்தது. பஞ்சமர்- தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட ஆதிதிராவிட மக்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பார்ப்பனர்களும் – சூத்திரர்களும் நடத்தினர். ஜாதிப் படிநிலையின் உச்சத்தில் இருந்த பார்ப்பனர்கள் சொல்வதே வேதம் என்கிற பொதுப்புத்திக்கு மக்கள் கட்டமைக்கப்பட்டிருந்தனர்.

ஹிந்துக்கள் எனப்படும் அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைத்திட வேண்டும் என்பதை முன்னெடுத்த திராவிட இயக்கம், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சனை செய்யும் உரிமை கொண்ட கோவில்களில் அனைத்து சமுதாயத்தினருக்கும் வழிபாட்டு உரிமையும் பூசை செய்யும் உரிமையும் வழங்கவேண்டும் எனத் தொடர்ந்து போராடியது. குறிப்பாக, ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள்ளும்- கோவில்கள், அக்ரகாரங்கள் உள்ள தெருக்களுக்குள்ளும் அனுமதிக்காத தீண்டாமையை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன.

தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே 1922இல் நடந்த திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் அனைத்துச் சமூகத்தினரும் கோவிலுக்குள் செல்ல வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரசிலிருந்து பிரிந்து, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகும் அவரது செயல்பாடுகள் தொடர்ந்தன.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18.01.1926 இல் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் நடைபெற்ற கிளர்ச்சியே இதில் முதன்மையானதாகும். இதனையடுத்து, கோவிலுக்குள் ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துச் செல்லும் கோவில் நுழைவுப் போராட்டத்தை முதற் கட்டமாக திருவண்ணாமலையில் தொடங்கினார், நீதிக்கட்சி சார்பில் வெளியான ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர். 1927ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் திருவண்ணாமலை கோவிலுக்குள் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரையும் மற்றவர்களையும் கோவிலுக்குள் வைத்து பூட்டிவிட்டனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஓர் ஆண்டு காலம் நடைபெற்ற வழக்கின் இறுதியில், கண்ணப்பருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஜே.என் இராமநாதன் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோவிலுக்கு ஆதிதிராவிடர்களை அழைத்துக் கொண்டு சென்றார். இதுவும் 1927ஆம் ஆண்டு நடைபெற்ற கோவில் நுழைவுப் போராட்டமாகும். அப்போது,தாயுமானவர் சன்னதியில் இருந்தவர்கள் குண்டர்களைக் கொண்டு. இராமநாதன் உள்ளிட்டோரை படிக்கட்டுகளில் உருட்டிவிட்டனர்.

அதே 1927ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதசாமி கோவிலுக்கு சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் அனைத்து ஜாதியை சேர்ந்த 1000 பேர் கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து, கோவில் நுழைவாயிலையும் கருவறையையும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் பூட்டிவிட்டனர் போராட்டக்காரர்களோ, பக்கவாட்டுக் கதவு வழியாக சென்று, அப்பர் சாமிகள் எனப்படும் திருநாவுக்கரசரின் ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற பாடலைப் பாடி போராட்டக்குரல் எழுப்பினர். 1928ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோவிலிலும், திருவானைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை சுயமரியாதை இயக்கத்தினர் மேற்கொண்டனர்.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் 1929ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி, ஆதிதிராவிடர்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என தேவஸ்தானக் கமிட்டியின் தலைவராக இருந்த பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அதற்கு மறுநாள், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் முடிவுடன் பெரியாரின் வாழ்விணையர் நாகம்மையார் அவர்கள் குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் ஆகியோருடன் ஆதிதிராவிடத் தோழர்கள் மூவருக்கு நெற்றியில் திருநீறு பூசி, அருச்சனைத் தட்டுடன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். சென்றவர்களை வைத்துக் கோவில் கதவு பூட்டப்பட்டதால், இரண்டு நாள் உள்ளேயே இருந்தனர். வெளியூர் சென்றிருந்த பெரியார் ஈரோடு திரும்பியபிறகே, கோவில் கதவு திறக்கப்பட்டது.

****

கோவில் நுழைவு தொடர்பாக குத்தூசி குருசாமி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆதிதிராவிடத் தோழர்கள் பசுபதி, கருப்பன், ஈஸ்வரன் மூவருக்கும் அபராதம் விதித்தது நீதிமன்றம். அதனைக் கட்ட மறுத்த ஈஸ்வரன் சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு கோவில் நுழைவு- சுசீந்திரம் கோவில் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான உரிமைப் போராட்டம் ஆகியவை தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் வரை கொண்டு சென்று சுயமரியாதை இயக்கத்தினர் வெற்றி பெற்றனர்.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ஈரோட்டில் கண்ணப்பர், காரைக்குடியில் சொ.முருகப்பா, தலைச்சேரியில் டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்களில் பண்டிதர் திருஞானசம்பந்தன்- சுப்ரமணியன் ஆகியோரும் முன்னின்று கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர்.

1932இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் டாக்டர் சுப்பராயன் கொண்டு வந்த கோவில் நுழைவு மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக்கட்சியின் கடமை என குடி அரசு இதழில் 30.10.1932 அன்று தலையங்கம் எழுதினார் பெரியார்.

இத்தகையத் தொடர்ச்சியான போராட்டங்களை 1920களிலேயே திராவிட இயக்கம் நடத்தியது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்த இன்றைய ஆர்.எஸ்.எஸ். மனநிலை கொண்ட பார்ப்பனர்கள் இதனை எதிர்த்தனர். அதன் பிறகு. 1937இல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜாகோபாலாச்சாரி முதல்வர் (பிரிமியர்) ஆனார். அப்போது, பல்வேறு வகையில் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்திகளை தவிர்க்கும் வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் நடைசாத்தப்படும் நேரத்தில் ஆதிதிராவிடர் சிலருடன் காங்கிரஸ் கட்சிக்காரரான வைத்தியநாத அய்யர் உள்ளே சென்றார். இது ஆலய நுழைவுப் போராட்ட வரலாற்று நிகழ்வாகப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் வரை பதிவாகின. சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்கள் அதற்கும் முந்தையவை-வலிமையானவை.

(கோவி.லெனின் எழுதியுள்ள “சமூகநீதியின் நெடும் பயணம்” என்ற நூலின் பக்கம் 27-30)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *