சென்னை, ஜூலை 3- தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்குரைஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாக தவெக பெண் வழக்குரைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த தவெக வழக்குரைஞரணி நிர்வாகி யான எம்.ஞானசவுந்தரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்களை நியமிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 5-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.
அதன்படி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த நானும் தவெக வழக்குரைஞர் என்ற முறையில் விண்ணப்பித்தேன். இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 29 மாலை வரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்று பிற்பகலிலேயே அரசு வழக்குரைஞர்கள் நியமனம் தொடர்பான பட்டியல் சமூக வலைதளங்களில் பரவியது. அந்தப் பட்டியலில் எனது பெயர் இல்லை என்பதையறிந்து அது தொடர்பாக தவெக மாவட்டச் செயலாளரிடம் முறை யிட்டேன்.
இதுகுறித்து விசாரித்தபோது, அரசு வழக்குரைஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை தவெக அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் லஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்தது. முதலமைச்சர் ஜோசப் விஜய் லஞ்சத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் என்னைப்போல கட்சிக்காக உழைத்த பல வழக்குரைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தகுதியானவர்களை இப்பதவிகளுக்கு நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்னை விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வழக்குரைஞராக நியமிக்கவும், அதுவரை அரசு வழக்குரைஞர்கள் நியமனத்துக்கும், அது தொடர்பான அறிவிப்பாணைக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரி யுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
