மதுரை, ஜூலை 3 மதுரையில் ஆளுநர் அர்லேகர் நடத்திய ஆய்வுக் கூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளும் தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உட்பட பலரும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் ஆய்வு
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் நேற்று (2.7.2026) காலை மதுரை பசுமலை பகுதியில் உள்ள சவுராஷ்டிரா கல்லூரி விழாவில் பங்கேற்றார். அதனையடுத்து மதுரை அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்த ஆளுநர், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், மதுரை எஸ்.பி.தேவநாதன் ஆகியோரை சந்த்தித்து ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம்
இதற்கிடையில் தான், மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் இன்று (3.7.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் துணை ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சர் நிர்மல்குமார்
இந்தக் கூட்டத்தில் பேசியுள்ள அமைச்சர் நிர்மல்குமார் மற்றும்
சு. வெங்கடேசன் எம்.பி. ஆளுநரின் ஆய்வு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர். அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், எங்கையாவது தேவையில்லாமல் அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் வந்து ஆய்வு செய்வேன் என்று தலையிட்டால் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும். கண்டிப்பாக எந்த அதிகாரியும் அரசின் அனுமதி இல்லாமல் ஆளுநருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது. அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை; மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே திட்டங்களை ஆய்வு செய்ய முடியும். ஆளுநர் தொடர்ந்து இதுபோன்று ஆய்வு கூட்டங் களை நடத்தினால் கடும் கண்டனம் தெரிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
சு. வெங்கடேசன் எம்.பி.
அதேபோல, சு. வெங்கடேசன் எம்.பி., மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டத்தின் தலைவராக உள்ளேன். நான் மற்றும் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் திட்டங்களை மக்கள் பிரதிநிதிகள்தான் ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர் ஆய்வில் அரசு அதிகாரிகள் பங்கேற்றால் சம்மன் அனுப்பப்படும் என எச்சரித்துள்ளார்.
அமைச்சர் வன்னி அரசு
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, ”மதுரை வைகை ஆற்றை ஆய்வு செய்த ஆளுநர் அர்லேகர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டமும் நடத்தியுள்ளார். தமிழ்நாட்டின் இறையாண்மை, நிர்வாகத்துக்குள் ஆளுநர் தலையிடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆளுநர் ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பதாகும், புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும், பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு இல்லையா என மக்கள் கேள்வி எழுப்பும்படி அவரது செயல்பாடு அமைந்துள்ளது” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
