அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிவிட்டு தவெகவில் இணையும் சூழலில், குதிரை பேரம் என்ற வார்த்தை அரசியல் களத்தில் அதிகளவு ஒலிக்கிறது. குதிரை பேரம் என்றால் என்ன? பழங்காலத்தில் குதிரைகள் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக பார்க்கப்பட்டதால், குதிரை வியாபாரம் லாபகரமான தொழிலாக விளங்கியது. அதனால், அத்தொழிலில் ஏமாற்று வேலைகளும் அதி கரித்தன. அய்ரோப்பாவில் வியாபாரிகள் தரமற்ற குதிரைகளை கூட தந்திரமாகப் பேசி விற்பார்களாம்.
குதிரைகளை வாங்குவோரும் கடுமையாக பேரம் பேசி அவற்றை வாங்கியதாக வரலாற்று குறிப்புகள் உண்டு. இதனால் ஆங்கிலத்தில் ‘Horse Trading’ என்ற சொல் காலப்போக்கில் நேர்மையற்ற பேரம் அல்லது மறைமுக ஒப்பந்தம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது. அதேபோல, அரசியலில் பணம் அல்லது அதிகாரத்திற்காக பதவி விலகுவது, கட்சி தாவுவது, பதவி பெறுவது போன்ற செயல்கள் குதிரை பேரம் என அழைக்கப்படுகின்றன.
இதுதான் பிஜேபி ஆளும் இந்தியா
தனியார் கடன் சந்தை அய்ந்து ஆண்டில் இரண்டு மடங்கு உயர்வு!
புதுடில்லி, ஜூன் 3 மூடிஸ் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியாவின் தனியார் கடன் சந்தை 2 மடங்காகி உள்ளது. கடந்த 2025-இல் இதன் ஆண்டு பரிவர்த்தனை மதிப்பு ரூ.1.04 லட்சம் கோடியாகவும், அந்த ஆண்டின் இறுதியில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு சுமார் ரூ.2.38 லட்சம் கோடியாகவும் உள்ளது. இருப்பினும், உலகளாவிய தரநிலைகளுடன் ஒப்பிடுகையில் இது இன்னும் சிறியதாகவே உள்ளது. அதே நேரம் நாட்டின் வலுவான பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் நிதித் தேவை அதிகரித்து வருவதால், இதன் வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும்.
மொத்த கடனில் ரியல் எஸ்டேட் துறை சுமார் 40 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பொதுப் பயன்பாட்டு நிறுவனங்கள் அதற்கு அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் தயாரித்த
விக்ரம்-1 ராக்கெட்டை விண்ணில் ஏவத் திட்டம்
புதுடில்லி, ஜூலை 3– அய்தராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.
இந்தியாவிலேயே தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட்டாகும் (லாஞ்ச் வெஹிகிள்) இது. விண்வெளியில் பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான ராக்கெட்டாகவும் இது செயல்படும். இந்த வகை ராக்கெட்டை ஜூலை 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள்ளாக விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்து பார்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் இந்த ராக்கெட் சோதனை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து ஸ்கைரூட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவன் குமார் சந்தனா நேற்று (2.7.2026) செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிறீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இந்த விக்ரம்-1 ராக்கெட்டை ஏவி சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ராக்கெட் பணிகளை ஒருங்கிணைத்தல், சோதித்தல் பணிகள் நிறைவடைதல், வானிலை, பாதுகாப்பு, ஏவுதள அனுமதி ஆகியவற்றைப் பொறுத்தே இதன் ஏவுதல் தேதி அறிவிக்கப்படும்” என்றார்.
