பா.ஜ.க.வின் ‘கட்சி உடைப்பு அரசியல்’ வெறும் அரசியல் காட்சி அல்ல; இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பேராபத்து!
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற குறுக்கு வழிகளில் நடக்கும் முயற்சி!
பா.ஜ.க.வின் ‘கட்சி உடைப்பு’ அரசியல் வெறும் அரசியல் காட்சி அல்ல; இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பேராபத்து! மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற குறுக்கு வழிகளில் நடக்கும் முயற்சி! இந்தியாவைக் காக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டியது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் கவனத்தைத் திருப்பிவிட்டு, ஆங்காங்கே பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க, ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு அமைதியாக இருப்பதாக ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால். அதற்குப் பின்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு பேராபத்து ஒளிந்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் எழத் தொடங்கிவிட்டது!
2014 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாகச் சொல்லப்பட்டது. அத் தேர்தலில் “வளர்ச்சி, குஜராத் மாடல்” என்று கதையளந்து மக்களின் ஆதரவைத் திரட்டினர். அப்போது 282 எம்.பிக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த மோடி, அடுத்த 2019 ஆம் ஆண்டு 353 எம்.பி.க்களின் ஆதரவு பெறும் அளவுக்கு பெரும்பான்மை பலம் பெற்றிருந்தார். முதல் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்தே இந்திய அரசியலமைப்பின் படி உருவாக்கப்பட்ட அமைப்புகளை மெல்ல மெல்ல சிதைக்கத் தொடங்கியது பா.ஜ.க! இரண்டாம் தடவை ஆட்சியில், அது இன்னும் தீவிரமானது. ஆனால், அப்போதே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் எழத் தொடங்கிவிட்டது.
இந்தக் காலகட்டத்தில் தான், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சின் நீண்ட காலச் செயல்திட்டங்களான காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து ரத்து, இஸ்லாமியர்களின் தனிச் சட்டங்களின் திருத்தம், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் கட்டுவதற்குத் தடையாக இருந்த வழக்குகள் முடித்துவைப்பு, தேசியக் கல்விக் கொள்கை மூலம் காவிக் கொள்கை திணிப்பு, சமூகநீதி பறிப்பு, உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு சட்டத் திருத்தம், சமஸ்கிருதத் திணிப்பு, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகள், குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று கிரிமினல் சட்டங்கள் திருத்தம், சில மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல் என்பனவற்றை எல்லாம் செய்து முடித்தது.
அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல்
மைனாரிட்டி அரசாக’…
2025–2026 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.சின் நூற்றாண்டையொட்டி, மேலும் பல திட்டங்களுக்கு வகை செய்ய முயன்ற நேரத்தில் தான், 2024 தேர்தலில் பா.ஜ.க.வின் நிலை மோசமடைந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் படியான அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியும், குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்திருப்பதாகப் பின்னாளில் ஆதாரத்துடன் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் அளவுக்கும் நிலைமை மோசமானது. இவ்வளவு செய்தபின்னும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் ‘மைனாரிட்டி அரசாக’ பீகாரின் நிதிஷ்குமார், ஆந்திராவின் சந்திரபாபு ஆகியோரின் ஆதரவுடன் மூன்றாம் முறை பிரதமர் ஆனார் நரேந்திர மோடி.
2024 தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி
மிக வலுவான நிலையை அடைந்திருந்தது!
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. ‘இண்டியா’ கூட்டணி மிக வலுவான நிலையை அடைந்திருந்தது. உறுதியான தலைவர்களாகவும், மாநிலங்க ளில் ஆளுமை மிக்கவர்களாகவும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உத்தரப் பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, பீகாரில் தேஜஸ்வி, மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே, சரத் பவார், டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன், கேரளாவில் பினராயி விஜயன் உள்ளிட்டோரும், பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் வலுவாக நிலை கொண்டிருந்தனர்.
இதற்கிடையில், அருணாசலப் பிரதேசத்தில் (2016) காங்கிரசைச் சேர்ந்த 43 எம்.எல்.ஏ.க்கள் விலகி, அருணாச்சல் மக்கள் கட்சியில் இணைந்து, பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தனர்.
உத்தரகாண்ட் டில் (2016) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வைத்துச் செய்த முயற்சியால் அரசியல் நெருக்கடி உருவாகி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்றம் மாநில அரசை மீண்டும் பதவியில் அமர்த்தியது.
மணிப்பூரில் (2017) சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றபோதிலும், தேர்த லுக்குப் பிறகு நடைபெற்ற கட்சித் தாவல்களின் மூலம், பாஜக ஆட்சியை அமைத்தது.
கருநாடகாவில் (2019) காங்கிரஸ் – ஜே.டி.(எஸ்.) கூட்டணி அரசில் இருந்த 17 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் அந்த அரசு கவிழ்ந்தது. பின்னர் அவர்கள் பாஜகவில் இணைந்து அமைச்சர்களாகவும் பதவி பெற்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் (2020) ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து விலகியதுடன், அவருக்கு ஆதரவான 22 எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகினர். இதன் விளைவாக காங்கிரஸ் அரசு வீழ்ந்து, பாஜக ஆட்சியை அமைத்தது.
கோவாவில் (2022) பா.ஜ.க. பெரும்பான்மை பலம் பெறாத நிலையில், சிறிய கட்சிகள், சுயேட்சையின் ஆதரவு பெற்று ஆட்சியமைத்தது. ஆனால், சில காலத்திலேயே காங்கிரசின் 11 எம்.எல்.ஏ.க்களில் 8 பேரைக் கட்சிதாவச் செய்து ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்டது.
மகாராட்டிராவில் (2022) உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆட்சியைக் கவிழ்க்க ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவில் பிளவை உண்டாக்கி, அந்த அணியை பாஜக தன்னுடன் இணைத்துக் கொண்டது; ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக்கப்பட்டார். அடுத்த தேர்தலில், பா.ஜ.க.வே அதிக இடங்களைப் பெற்று முதலமைச்சர் பதவியை வைத்துக் கொண்டது
கட்சித் தாவலின் மூலம்
ஆட்கொண்டுவருகிறது பா.ஜ.க.!
இன்னும் இது போல, அஸ்ஸாம், திரிபுரா, பீகார் என்று படிப்படியாக எல்லா மாநிலங்களையும், கூட்டணியின் மூலமும், கட்சித் தாவலின் மூலமும் ஆட்கொண்டுவருகிறது பா.ஜ.க.
தேர்தல்களை நடத்தும் முறையில், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன், தேர்தல் தேதிகள் அறிவிப்பது முதல் முடிவுகள் அறிவிப்பது வரை பா.ஜ.க.வுக்குச் சாதகமான சூழலை அமைத்துக் கொள்வது ஒரு வகை.
தேர்தலில் எக்கட்சி வெற்றி பெற்றாலும், அக் கட்சியினரை அப்படியே வளைத்து, பிளவுபடுத்தி, ஆளுநர்கள் மூலம் ஆட்சியமைக்கும் காலத்தை நீட்டிப்பது முதல் அதிகாலை பதவியேற்புகள் வரை ‘‘குதிரை பேரங்களை’’ வேடிக்கை பார்க்கவைப்பது மற்றொரு வகை.
இப்படி மாநிலங்களில் நடக்கும் ஆட்சி மாற்றங்கள் என்பவை, அந்தந்த மாநிலங்களில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது. மாநில சட்டமன்றங்களின் மூலம் தேர்ந்தெ டுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பா.ஜ.க.வுக்குப் பெருக இவையே அடிப்படை!
இந்த நிலையில் தான், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் குறைந்த இடங்களைப் பெற்று ஆட்சிக்கே ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில், அதை நிலைப்படுத்திக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தனது அடுத்தடுத்த அஸ்திரங்களைத் தயார் செய்தது.
இந்தியாவை பாரத் ஆக்கி, ஒற்றையாட்சி முறையைக் கொண்டுவரவுமான திட்டம்!
ஒரே நாடு – ஒரே தேர்தல், மாநிலங்களின் உரிமைகளைக் குறைக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு, பொது சிவில் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு, மதமாற்றத் தடைச் சட்டம் என்று ஹிந்துராஷ்டிரத்தை அமைக்கும் தங்கள் பணியில் மிச்சமிருப்பவற்றைச் செய்யவும், இந்தியாவை பாரத் ஆக்கி, ஒற்றையாட்சி முறையைக் கொண்டுவரவுமான திட்டங்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லை என்ற நிலையில், அதை அடுத்த தேர்தலுக்குள் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டங்களில் முக்கியத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமானால் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் அவசியம். அது இல்லாத காரணத்தால் தான், கடந்த ஏப்ரலில் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி, மகளிர் இடஒதுக்கீட்டுடன், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகப்படுத்துவதையும், தொகுதி மறுவரையையும் நிறைவேற்ற முயன்ற பா.ஜ.க.வின் சூழ்ச்சி, தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியா முழுக்க இணைந்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டது. இதில் மூக்கறுபட்டதாகக் கருதிக் கொண்ட பா.ஜ.க., குறிவைத்து சில மாநிலங்களை வீழ்த்தியது. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைப் பிளந்து போட்டி அணியினரை உருவாக்கி, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அக் கட்சியின் பலத்தைப் பறித்துள்ளது.
அடுத்தடுத்து, உத்தரப் பிரதேசத்தின் சமாஜ் வாடி கட்சியிலும் உட்கட்சிப் பூசலை உருவாக்கி, எம்.பி.க்களைப் பிரிக்கும் வேலையைத் தொடங்கியிருப்பதாக பா.ஜ.க. தலைவர்களே பெருமை பேசத் தொடங்கியுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வலிமை பெற, நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 360 இடங்கள் வேண்டும். ஏற்கெனவே 292 இடங்களை வைத்திருக்கும் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கு அண்மையில் ஆதரவு தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிளவுபட்ட 20 எம்.பி.க்களும், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவிலிருந்து அண்மையில் விலகி ஏக்நாத் ஷிண்டே அணிக்குத் தாவியுள்ள 6 எம்.பி.க்களுமாகச் சேர்த்து, இப்போது 319 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
மேலும், பலருக்கு வலை வீசிக் கொண்டுள்ளது பா.ஜ.க.!
மாநிலங்களவையிலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.!
மாநிலங்களவையிலும் மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற பா.ஜ.க. முயற்சித்துக் கொண்டி ருக்கிறது. ஏற்கெனவே, ஆம் ஆத்மியைச் சேர்ந்த 7 மாநிலங்க ளவை எம்.பி-க்களை ராகவ் சத்தா என்ன்பவர் தலைமையில் தங்கள் பக்கம் இழுத்துவிட்டது பா.ஜ.க. அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில், 6 இடங்களைப் பெற்று, இப்போது 155 எம்.பி-க்களை வைத்திருக்கிறது என்.டி.ஏ. கூட்டணி. அதிலும், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் என்பவரைக் குறிவைத்து, அந்த இடத்தையும் எடுத்துக்கொண்டது எல்லாம் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே! தங்களுக்குத் தேவைப்படும் 164 எம்.பிக்கள் என்ற இலக்கை எட்டுவதற்காகவே, திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த மூன்று மாநிலங்களவை எம்.பி-க்களை பதவி விலகச் செய்திருக்கிறது பா.ஜ.க! அண்மையில் நடந்துமுடிந்த மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. 208 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றிருப்பதால், அந்த மூன்று இடங்களுமே பா.ஜ.க வசம் செல்லவே வாய்ப்புகள் அதிகம். மேலும் தேவைப்படும் இடங்களை எப்படி ‘கொண்டுவருவது’ என்பதற்கான முயற்சிகளிலும் பா.ஜ.க. இறங்கியிருக்கிறதாம்!
சமூக நீதிக்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கும்
எந்த உத்தரவாதமும் இல்லை!
இவ் விரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு என்ற பெரும்பான்மை பா.ஜ.க.வுக்குக் கிடைக்குமேயானால், இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட வாய்ப்பு எளிதாகும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சூட்சமம் அதில்தான் உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உறுதிமொழியப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சோசலிசம், ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றுக்கும், சமூக நீதிக்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கும் வருங்காலத்தில் எந்த உத்தரவாதமும் இல்லை என்ற நிலை உருவாகிவிடும்.
இது இந்திய நாட்டின் பன்மைத்துவத்துக்கும், வெகு மக்களான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பிற மதத்தவருக்கும், மாநிலங்களுக்கும் ஆபத்து, ஆபத்து, பேராபத்து! இந் நிலையை நீதிமன்றங்கள் தடுக்குமா என்பது கேள்விக் குறி!
நாட்டைக் காக்க மக்கள் ஓரணியில் திரள வேண்டியது அவசரம்! !
போராடிப் போராடிப் பெற்ற இவற்றையெல்லாம் குறுகிய காலத்தில் இழக்கும் ஆபத்தை, இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும், கட்சிகளைச் சாராத பொதுமக்களும், சமூகச் சிந்தனையாளர்களும், அடுத்த தலைமுறை மாணவர்கள், இளைஞர்களும் உணர வேண்டும்!
நாட்டைக் காக்க மக்கள் ஓரணியில் திரள வேண்டியது அவசரம்! அவசியம்! அவசியம்!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.7.2026
