சென்னை, ஜூன் 12- தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 29ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய, மாநில அரசுகள் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. விவசாயிகளுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வேலை பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை.
எனவே, இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் வரும் ஜூன் 29ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
அனைத்துப் பிரிவு தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இப்போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
