சென்னை, மே 21 புகழ்பெற்ற லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் மேனாள் முதன்மை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனுக்கு, தமிழ்நாடு மேனாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வாழ்த்து களையும், பாராட்டுகளையும் தெரி வித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘‘சவுமியா சுவாமிநாதன், புகழ்பெற்ற லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பெருமை; நம் அறிவுத்திறத்துக்கான உயர் அங்கீகாரம் ஆகும்.”
இந்தியாவில் இருந்து இந்தப் பெருமையைப் பெறும் 2 ஆவது பெண்மணி என்ற புதிய வரலாற்றைப் படைத்து சவுமியா சுவாமிநாதன் சாதனை படைத்துள்ளார். இந்த மகத்தான சாதனை, மேலும் பல பெண்கள் தங்களது தடை களைத் தகர்த்தெறிந்து, வாழ்வில் பல்வேறு வெற்றிகளைப் பெற ஒரு சிறந்த ஊக்கமாக அமையும்.
தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி
தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றதை நினைவு கூர்ந்த மேனாள் முதலமைச்சர், ‘‘நமது திட்டங்களைப் பாராட்டிப் பேசி, ஆலோசனைகளையும் வழங்கி வந்த சவுமியாவுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனின் மகளான சவுமியா, தனது தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி செயற்கரிய சாதனைகளைப் படைத்து வருகிறார். அவர் தொடர்ந்து தனது அறிவுக்கொடையை மக்களின் முன்னேற்றத்துக்காக வழங்கிட வேண்டும் என்றும் மேனாள் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
