தமிழர் தலைவர் ஓடோடி உழைப்பது யாருக்காக ?

2 Min Read

அவரை அவதூறு பேசித் தோற்றுப்போன உடன் பிறப்புகளுக்கும் சேர்த்துத்தான்!

ஆர்.எஸ்.எஸ். மாயமான் மயக்கத்தில், பணத்திற்கும் பதவிக்கும் அடிமையாகி வரும் உடன் பிறப்புகளுக்கும் சேர்த்துத்தான்.

சனாதனம் நம்மை அடிமைப் படுத்தியது. மூளைக்கு விலங்கிட்டு வைத்துள்ளது. புரியாத மந்திரத்திற்கு அஞ்சி வாழும் படித்தவர்கள், குற்றங்களிலே திளைத்து செல்வத் தில் கொழிக்கும் சாமியார்களிடம் மயங்கும், அடிமையாகும் நம் மக்கள், தமிழில் இல்லாதது வடமொழியில் என்ன உள்ளது என்று கேட்கத்  துணிவில்லாத தமிழ் அறிஞர்கள்  இவர்களுக்கும் சேர்த்துத் தானே ஓயாது உழைக்கின்றார்.  உங்கள் நன்றியையோ, வேறு புகழ், பதவி என்று எதையாவது எதிர்பார்க்கின்றாரா? கருப்பு மெழுகுவத்திகளின் அன்பளிப்பும், அயராத உழைப்பும் தானே அவரது மூலதனம்.

சாமி, சாமி என்று அலைந்த ஆசாமிகளின் வாரிசுகள் இன்று நீதி அரசர்கள் ஆகி அவர்கள் இவர்களை மை  லார்டு என்று அழைப்பது யாரால்?

கல்வி, கல்வி, கல்வி, பட்டங்கள், பதவிகள், நல்ல வாழ்க்கை  தமிழ்நாடு தலைமையில் இருப்பது யாரால் வந்தது ? பெண்களுக்கு விடுதலை, சொத்துரிமை, கல்வி வேலைவாய்ப்பு, உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு, பல தலைமைகள் – இவையெல்லாம் யாரால் வந்தது. கலைஞர் அவர்கள் எவ்வளவு திட்டங்களைச் செயல் படுத்தி மகளிர் கல்வி, கிராமப் புறக் குடிசை ஒழிப்பு, குழந்தைகளுக்குச் சத்துணவு, படித்த பெண்களுக்குத் திருமண உதவி  எத்தனை எத்தனைத் திட்டங்கள் முதல் முதலாகத் தமிழ்நாட்டில் தான் என்று அறிவிக்கப் பட்டுச்  செயல்படுத்தப்பட்டு வருகின்றன?

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை, மக்கள் உணரவில்லை என்பதால் தானே சனாதனம் மீண்டும் வாலை  ஆட்டப் பார்க்கின்றது .அந்த வாலை  நறுக்குவதற் குத் தானே, எதிர்கால நம் வாழ்க்கை, மொழி, இனம், பண் பாட்டைக் காப்பாற்றத்தானே இரவு பகல் என்று உழைக்கின்றார். அலைந்து திரிந்து இவ்வளவு உழைப்பும், நாம் பெற்றதை  இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்தினால் தானே. உயிர் போனாலும் உரிமைகள் போகக்கூடாது என்ற உயர்ந்த கொடை  உள்ளத்தால் தானே!

தந்தை பெரியார் எப்படிக் காமராசர் ஆட்சி  நமக்கு வேண்டும் என்று ஓடி ஓடி உழைத்தாரோ? அதேதான் இன்று நடக்கும் தளபதியார் ஆட்சி நமக்கு கட்டாயம் வேண்டும் என்று  ஆசிரியர் ஓடி ஓடி உழைக்கின்றார். சனாதனத்தை ஒழிப்போம், சமதர்மத்தை, இனமானத்தை, சுயமரியாதையை, பெண்ணுரிமையை, மொழி உரிமை யைக் காப்போம் என்ற அவரது  உழைப்பு அனைவர்க்கும். அதை அனைவர்க்கும் எடுத்துச் சொல்லி உழைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை! அனைத்து ஊடகங்களிலும் பரப்புவோம்.

திராவிட மாடல்  ஆட்சி மனித நேய ஆட்சி.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.

-மருத்துவர் சோம. இளங்கோவன், 

சிகாகோ, பெரியார் பன்னாட்டு மய்யம், அமெரிக்கா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *