சென்னை, மார்ச் 28- பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2023-2024இல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது தீர்வு காண இந்தத் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா அறிவித் துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் குறை தீர்ப்பு அமைப்பு (Public Grievance Redressal System) வாயிலாக தற்போது கீழ்காணும் முறைகளில் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன்படி 1913 அழைப்பு மய்யம் மூலமாக பொது மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு அனுப்பி அப்புகார்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நம்ம சென்னை செயலி (Namma Chennai Mobile App) மூலமாக பொது மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அப்புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அஞ்சல்கள் மூலம் ஆணையர் அலுவலகம் / வட்டார அலுவலகங்கள் / மண்டல அலுவலங்களிலும், பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேயரிடம் மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள பொது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகள் களையும் பொருட்டு, மேயர், மாதத்திற்கு ஒரு முறை, ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில், மனுக்களை நேரடியாக பெறும் வகையில் “மக்களைத் தேடி மேயர்” திட்டம் 2023-2024ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.இதைத் தவிர்த்து, கவுன்சிலர்கள் உயிரிழந்தால், அவர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சத்தில் இருந்து மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சம் ரூபாய் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.