செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட் சிக்குட்பட்ட குரோம்பேட்டை ரயில்வே நிலையம் அருகே ராதா நகர் இரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் இரயில்வே துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்த ராதா நகர் இரயில்வே சுரங்கப்பாதை கடந்த 13 ஆண்டுகளாக பொதுமக்கள் அனைவரும் போராடியதன் விளைவாக வந்து இன்றைய நிலையில் சுரங்கப் பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த சுரங்கப்பாதை ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலை இரயில்வே நுழைவாயில் அருகே வரவுள்ளதால் இதன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் கலந்து ஆலோசித்தப் பின்னர், பணிகளுக்கு இடையூறாக உள்ள ஒருசில மரங்களை சில தினங்களுக்கு முன்னர் அகற்றியுள்ளனர். இந்த மரங்களை வெட்டியதன் நோக்கம் பொதுமக்கள் நலன் கருதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நல்ல நோக்கத்திற்காக மரம் வெட்டியதை ஒருசிலர், பொதுமக்களிடையே தவறான கண்ணோட்டத்துடன் பரப்புகின்றனர். மேலும், வெட்டப்பட்ட மரம் அருகே, “பசுமை தாயகம் சார்பாக வெட்டப்பட்ட மரத்திற்கு அஞ்சலி” என்ற டிஜிட்டல் பதாகையை வைத்தும், மாலை அணிவித்தும், கடவுளை கும்பிடுவதுபோல் பற்பல செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், இரயில்வே நுழைவு வாயில் அருகே ஒருசில ஆட்டோ ஓட்டுநர்கள் மூலமாக, கோவில் எழுப்பவும் முயற்சி செய்கின்றனர். மேலும் ‘மரத்திற்கான நினைவுச் சின்னம்’ அமைப்போம் என்று கூறி வருவதாகவும் செய்திகள் பரவுகின்றன.
எனவே மரம் வெட்டப்பட்ட இடத்தில் உள்ள பதாகையை உடனடியாக அகற்றி, அந்த இடத்தில் இரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எந்தவித தடங்கலும் ஏற்படாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பமாகும்.
– பொது மக்கள்
குரோம்பேட்டை