சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள பாலைவனக் கோள்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா? வாசிங்டன் பல்கலை.யின் புதிய ஆய்வு, ஒரு கோள் உயிரினங்களைத் தாங்க எவ்வளவு நீர் தேவை என்பது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளது.
வேற்றுக் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா? ஏலியன்கள் இருக்கிறார்களா? இந்தத் தேடலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்திற்கு வெளியே நாம் கண்டறிந்த பல கோள்கள் வாழ தகுதியானவை என்று இதுவரை நம்பப்பட்டுவந்த நிலையில், வாசிங்டன் பல்கலை. புதிய ஆய்வு ஒன்று அந்த நம்பிக்கையில் இடியை இறக்கி உள்ளது.
விஞ்ஞானிகள் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட புறக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் பல கோள்கள் அவற்றின் நட்சத்திரத்தில் இருந்து சரியான தூரத்தில் இருப்பதால், அங்கு திரவ நிலையில் நீர் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், அங்கே தண்ணீர் இருந்தால் மட்டும் போதாது, அது குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆய்வின்படி, பூமியின் கடல்களில் உள்ள நீரில் குறைந்தது 20% முதல் 50% வரை நீர் இருந்தால் மட்டுமே ஒரு கோளால் நீண்ட காலத்திற்கு உயிரினங்களைத் தாங்கிப் பிடிக்க முடியும்.
ஒரு கோளின் வெப்பநிலையைச் சீராக வைப்பது அதன் ‘கார்பன் சுழற்சி’ ஆகும். பூமியில் மழை பெய்யும்போது, அது வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான கார்பன்-டை-ஆக்சைடை கரைத்து பாறைகளுக்குள் புதைத்து விடுகிறது. இதனால் பூமி அளவுக்கு அதிகமாக வெப்பம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், வறண்ட பாலைவனக் கோள்களில் மழை இல்லா ததால், எரிமலைகள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்திலேயே தங்கிவிடுகிறது. இது ‘வெப்பக் கூண்டு’ (Greenhouse Effect) போலச் செயல்பட்டு கோளின் வெப்பநிலையைத் தாறுமாறாக உயர்த்துகிறது. இறுதியில், அங்கிருக்கும் சொற்ப நீரும் ஆவியாகி, அந்தக் கோள் சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுகிறது.
பூமியும், வெள்ளி கோளும் அளவில் ஒன்றுபோல இருந்தாலும், வெள்ளி ஏன் இன்று கொதிக்கிறது என்பதற்கு இந்த ஆய்வு விடை தந்துள்ளது. வெள்ளி ஆரம்பத்தில் இருந்தே மிகக் குறைந்த நீரைக் கொண்டிருந்திருக்கலாம். அந்த நீர் அதன் கார்பன் சுழற்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே, அதன் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம்.
இந்த ஆய்வின் மூலம் விண்வெளியில் உயிரினங்களைத் தேடும் களம் சுருங்கியுள்ளது. இனி விஞ்ஞானிகள் வறண்ட கோள்களைத் தவிர்த்து விட்டு, அதிக நீர் இருக்க வாய்ப்புள்ள ‘ஈரமான‘ கோள்களை நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்ப உள்ளனர். குறிப்பாக, எதிர்கால வெள்ளி கோள் ஆராய்ச்சிகள், ஒரு கோள் எப்படி வாழ தகுதியற்றதாக மாறுகிறது என்பதை இன்னும் துல்லியமாக நமக்கு உணர்த்தும். விண்வெளியில் நாம் தேடும் மற்றொரு பூமி வெறும் பாறையாகவும், வெயிலாகவும் மட்டும் இருந்தால் போதாது; அங்கு தாராளமாகக் கடல் நீரும் இருக்க வேண்டும்.

