தாழ்ந்துகிடந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தனது செயல்பாடுகளால் தன்மானம் மிக்க சமூகமாக உருமாற்ற உழைத்தவர் தந்தை பெரியார். அவரது பிரதான அரசியல் செயல் பாடுகளாகச் சொற்பொழிவும், போராட்டங் களும், செய்தித்தாள் நடத்துவதுமாக இருந்தாலும், தன்னுடைய கருத்துகள் பல தரப்பு மக்களையும் சென்றுசேர, பதிப்புத் துறையிலும் மிகத் தீவிரமாக இயங்கியவர் அவர்.
‘குடிஅரசு’ பதிப்பகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ‘விடுதலை’ வெளியீடு, ‘பகுத்தறிவு’ வெளியீடு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் எனப் பல்வேறு காலகட்டங்களில் தந்தை பெரியார் நடத்திய பதிப்பகங்கள் மூலம் வெளியான முக்கியமான நூல்கள் குறித்து நமக்குத் தெரிவிக்கும் நூல், ‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’, திராவிடர் கழகத் தலைவர். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்நூலை எழுதி இருக்கிறார். திராவிடர் கழக வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.
8 சதவிகித மக்கள் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு சமூகத்தில், பெரும் பொருட்செலவில் மிகத் தீவிர பகுத்தறிவு, சுயமரியாதை, ஜாதி ஒழிப்புக் கருத்துகளை உள்ளடக்கிய புத்தகங்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற சிந்தனை, தொலை நோக்காளரான பெரியாருக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. பதிப்புத் துறையிலும் நிபுணராகத் திகழ்ந்தார் பெரியார் என்பதை இந்நூலின் தொடக்க அத்தி யாயத்தில் கவனப்படுத்துகிறார் ஆசிரியர். லாப நோக்கம் எதுவும் இன்றி, நூல்களைக் குறைந்த விலையில் நன்கொடை பெற்று வெளியிட்டவர் பெரியார். புகைப்படம் எடுக்கவும், சுக துக்க நிகழ்வுகளில் பங்கெடுக்கவும் நிதி பெற்ற பெரியார், நூல்களை வாங்கித் தன்னிடம் கையொப்பம் பெறுபவர்களிடம் கட்டணம் எதுவும் வாங்காமல் இருந்ததே வாசகர்கள்மீது அவர் கொண்ட மதிப்பிற்குச் சான்று.
இந்நூலில், பல்வேறு பதிப்பகங்களின் வாயிலாகப் பெரியார் வெளியிட்ட தரமான நூல்கள் குறித்த வரலாறும் அறிமுகக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, ‘குடிஅரசு’ பதிப்பகம் மூலம் ‘அகத்தியர் ஆராய்ச்சி’, சிவானந்த சரஸ்வதி எழுதிய ‘ஞானசூரியன்’, காத்ரீன் மேயோவின் ‘MOTHER INDIA’ நூலை மதிப்பிடும் ‘மேயோ கூற்று மெய்யா? பொய்யா?” முதலிய நூல்களையும் அவை வெளியான பின்னணியையும் மிகவும் சுவாரசியமான நடையில் பதிவுசெய்துள்ளது இந்நூல்.
முன்னோடி பதிப்பகமாகப் பொதுவுடைமை நூல்களைப் பதிப்பித்தது, அம்பேத்கரின் புத்தகங் களை முதலில் வெளியிட்டது, பெண்ணியம் சார்ந்த நூல்களைப் பதிப்பித்தது, அறிவுலக மாமேதை இங்கர்சால் நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டது, பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு நூல்களைத் தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தியது, உலக சிந்தனையாளர் களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப் படுத்தியது, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நூல்கள் பதிப்பு, சமூகத்தில் நிலவும் மூட வழக்கங்களை அம்பலப்படுத்தி மக்களுக்கு ஒளியூட்டும் நூல்கள் என தந்தை பெரியாரின் 95 ஆண்டுக்கால பதிப்புத் தொண்டும் அதன் சாதனைகளும் இந்நூல் முழுவதும் நிரம்பி உள்ளன.
பல அரிய நூல்களின் அட்டைப்படங்களும், பெரியார் நடத்திய இதழ்களின் முகப்புப் பக்கங் களும் இதில் இடப் பெற்றுள்ளது தனிச் சிறப்பு. உலக மக்கள் புத்தாக்கம் பெற, பதிப்பகங்கள் நடத்திப் புத்தகங்களை வெளியிட்ட தந்தை பெரியாரின் பணிகளை அறிந்துகொள்ள இன்றியமையாத நூல்.
நன்றி: ‘முரசொலி’
பாசறை படிப்பறை, 28.4.2026

