குமரியில் அணுக்கனிம சுரங்கம் மக்களின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு தீவிரம் ‘பூவுலகின் நண்பர்கள்’ கண்டனம்!

மதுரை, ஏப். 23- தமிழ்நாடு அரசு மற்றும் உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை ஒன்றிய அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இது குமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் உள்ள 4 தாலுகாக்களில் அணுக்கனிமங்களை வெட்டி எடுப்ப தற்காக, ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான IREL (Indian Rare Earths Limited) தற்போது விண்ணப்பம் அளித்துள்ளது.

முறியடிக்கப்பட்ட முயற்சி

கடந்த 2024ஆம் ஆண்டே இதற்கான திட்டமிடல் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு மற்றும் மீனவ அமைப்புகள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக, அக்டோபர் மாதம் நடை பெறவிருந்த பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

விதிமுறை மாற்றம்

2025ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பில், “அணுக் கனிமங்களை வெட்டி எடுக்க இனி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டிய அவசிய மில்லை” என்று தெரிவித்தது.

இந்த விதியைப் பயன்படுத்தி, தற்போது மாநில அரசின் ஒப்புதல் இன்றியே சுரங்கம் அமைக்கும் முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.

“கடற்கரையைச் சூறையாடும் முயற்சி”

இந்த விவகாரம் தொடர்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அவர்கள் முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகள்:

“மக்களின் கருத்தைக் கேட்காமல் குமரி கடற்கரையைச் சூறையாட பாஜக அரசு முயற்சி செய்கிறது. ஒரு மாநிலத்தின் வளங்களை எடுக்கும்போது அம்மாநில அரசின் கருத்தையோ அல்லது அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையோ கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது.”

கடற்கரை ஓரங்களில் சுரங்கம் அமைப்பதால் கடல் சூழல் பாதிக்கப் பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

அணுக்கனிமங்கள் தோண்டி எடுக்கப் படும்போது ஏற்படும் கதிர்வீச்சு மற்றும் நில அரிப்பு மாவட்டத்தின் இயற்கை அமைப்பைச் சிதைக்கும்.

ஜனநாயக உரிமை மறுப்பு

கருத்துக் கேட்புக் கூட்டத்தையே ரத்து செய்துவிட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தத் துடிப்பது மக்களின் குரலை நசுக்கும் செயல்.

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப் பையும் மீறி அய்ஆர்இஎல் (IREL) நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளதால், இந்த விவகாரம் வரும் நாட்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான அரசியல் மோதலாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *