கேள்வி: பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டு மக்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றும், திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்வோம் என்றும் கூறப்பட்டுள்ளதே?
– வெ.ஆத்மநாதன், எண்ணூர்
பதில்: முழுக்க முழுக்க இவைதான் தமிழ்நாட்டின் உரிமையா? கேலிக்கூத்தாக இல்லையா? பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது, ஒரு ஹிந்துராஷ்டிரத்தின் தேர்தல் அறிக்கை.
- • •
கேள்வி: “ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நீங்கள் டில்லி மதுபானக் கொள்ளை வழக்கை விசாரிக்கக் கூடாது” என்று நீதிபதி ஸ்வர்ணகாந்த் சர்மாவிடம் நீதிமன்றத்தில் நேருக்கு நேராகக் கூறியுள்ளாரே அர்விந்த் கெஜ்ரிவால்?
– வி.மல்லிகா, திருச்சி
பதில்: வரவேற்கவேண்டிய, துணிச்சல்மிக்க ஒரு வாக்குமூலம். நியாயமான கேள்வி. விடைதான் சரியாகக் கிடைக்குமா என்பது இன்னொரு கேள்வி.
- • •
கேள்வி: தொகுதி மறுவரையறை காரணமாக வட கிழக்கு மாநிலங்களைப் போன்று தென் இந்திய மாநிலங்களும் புறக்கணிக்கப்படும் ஆபத்து உள்ளதா?
– சா.ஏழுமலை, பொன்னேரி
பதில்: கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. வெளிப்படையாகவே, இதைத் தெரிந்துகொள்ளலாம். ஒரு கோட்டை அழிக்காமல், அதை சிறிய கோடாக்க வேண்டும் என்றால், அதற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய கோடு போடுவதுதான் ஒரு சூட்சமம். அப்படியே, இப்போது ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களான உ.பி., டில்லி, ம.பி., மற்ற மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையை அதிகமாக்கத் துடிக்கின்றனர்.
எனவே, ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்களை இரண்டாந்தர குடிமக்களாக மட்டுமல்ல, நாலாந்தர குடிமக்களாக ஆக்கக் கூடிய ஆபத்து, இதனுள்ளே அடங்கியிருக்கிறது.
- • •
கேள்வி: “இந்தியாவை ஒரே ஒரு மத அடையாளத்திற்குள் அடக்க முடியாது” என்று உச்சநீதிமன்ற நீதிபதி கோடீஸ்வரர் சிங் கருத்து கூறியுள்ளாரே?
– ந.குணசீலன், கும்பகோணம்
பதில்: வரவேற்கவேண்டிய உண்மை. காரணம், பன்முகத்தன்மைதான் இந்தியாவினுடைய தன்மை. இந்தியா என்பதை, ஹிந்தி என்ற ஒரு மொழிக்குள், ஹிந்துத்துவாவிற்குள் அடக்க முயலுவதைத்தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
- • •
கேள்வி: மேற்கு வங்கத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களில் ‘எழுத்துப்பிழை’ என்று கூறி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த 27 லட்சம் பேர் (logical discrepancy -Over 27 lakh names were flagged for deletion in West Bengal due to this) எஸ்.அய்.ஆர். மூலம் நீக்கப்பட்டுள்ளார்களே?
– கு.வளவன், திருத்தணி
பதில்: மேற்கு வங்கத்தில் நடைபெறுகின்ற ஆட்சியை எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, ‘சிரசாசனம்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் இது.
- • •
கேள்வி: தனது ரசிகர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வந்து விபத்தில் சிக்குவது தொடர்கதையானபோதும் அவர்களைக் கண்டிக்காமல் தொடர்ந்து ஸ்டண்ட் செய்கிறாரே புது நடிக அரசியல்வாதி?
– கோ.மாலதி, திருச்சி
பதில்: அவரால் முடிந்தது அது ஒன்றுதான். கண்டித்தால், கட்சி இருக்காது.
- • •
கேள்வி: நிதிஷ்குமாரை பதவி விலக வைத்து, பீகாரின் முதல் பா.ஜ.க. முதலமைச்சராக சாம்ராட் சவுத்திரியை பதவியேற்க வைத்த பா.ஜ.க.வின் சூழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி இனியாவது புரிந்துகொள்வாரா?
– கே.முரளி, நுங்கம்பாக்கம்
பதில்: எதை அவர் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்; இதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு?
- • •
கேள்வி: 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தெற்கு ரயில்வே குறித்துத் தாங்கள் கூற விரும்புவது என்ன?
– தே.பன்னீர்செல்வம், சாலிகிராமம்
பதில்: தண்டவாளத்திலேயேதான் ரயில் ஓடவேண்டும்; தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கக் கூடாது. ரயில்வே நிலையங்களையெல்லாம் வெறும் கோபுரங்களாக மட்டும் ஆக்கக் கூடாது. இது பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். அதைப் பின்பற்றவேண்டும்.
அதைவிட மிக முக்கியமாக, முதல் ஏ.சி. வகுப்பில்கூட, சங்கலியைப் போட்டு, குவளையைக் கட்டியிருப்பது தேசிய அவமானமாகும். அதை நீக்கவேண்டும்.
- • •
கேள்வி: ஏப்ரல் 9 அன்று நடந்து முடிந்த 3 மாநிலத் தேர்தல்களிலும் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது ஏன்? எதனால்?
– சொ.அன்பு, செங்குன்றம்
பதில்: பொதுவாக ஓர் அரசியல் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது என்பது மிக முக்கியமானதாகும். அதன் காரணமாக, மக்கள் தங்களுடைய உணர்வுகளை வெளியே காட்டவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு நல்ல திருப்பம்தான்.
எப்படிப்பட்ட நிலை இருந்தாலும்கூட, நல்ல திருப்பத்தினை வரவேற்கவேண்டும்.
- • •
கேள்வி: உத்தரப்பிரதேச அட்ரோகா பகுதியைச் சேர்ந்த பாம்பு கடித்த சிறுவனை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, ‘புனித’ கங்கை நீரில் மூழ்க வைத்ததால் அந்தச் சிறுவன் இறந்துள்ளாரே?
– கி.மனோகரன், பள்ளிக்கரணை
பதில்: இதுதான் ‘டபுள் என்ஜின்’ ஆட்சியினுடைய சிறப்பான மருத்துவ அம்சம்!
- • •

